Search This Blog

Saturday, January 27, 2018

அன்னையர் தினம்


ஐயிரண்டு திங்களாய்
அடிவயிற்றில் எனை சுமந்து
அகிலத்திற்கு தந்திட்ட அந்த
அன்னையை வணங்குகிறேன்..

கார சாரமாய் கால் நூற்றாண்டு
சாப்பிட்டும் மசக்கையானவுடன்
பத்திய உணவிற்கு மாறிட்ட அந்த அன்னையை வணங்குகிறேன்..

மகளாக இருக்கையிலே மணிக்கணக்கில் உறங்கியவள், தாயான பின்னே தன் சேய்க்காக சுகம் தொலைத்த அந்த
அன்னையை வணங்குகிறேன்..

அழகு கெட்டுவிடும் என்று ஆயிரம் பேர்
கூறிட்டும், தன் குழந்தை முகம் முட்டி
மார்பினில் பாலருந்த பரவச நிலை எட்டும்
அன்னையை வணங்குகிறேன்..

தூளியில் ஆடவிட்டு தாலாட்டும் கூட பாடி
தாளிக்கும் ஓசை பட சமையலும் செய்து
தன் குடும்பத்தை நடத்திவரும் அந்த
அன்னையை வணங்குகிறேன்..

தொட்டிலில் ஒரு குழந்தை கட்டிலில் மறு குழந்தை என தன் நேரம் முழுமையையும் இருவர்க்கும் அர்ப்பணிக்கும் அந்த
அன்னையை வணங்குகிறேன்..

சேட்டை பல செய்தாலும் செல்ல மகன் நானென்று சகித்தபடி சந்தோஷமாய்
எனை வளர்த்து ஆளாக்கிய அந்த
அன்னையை வணங்குகிறேன்..

கண்டிக்கும் தகப்பனுக்கு
கடிவாளம் போட்டு வைத்து
கரிசனத்தோடு எனை வளர்த்த
அன்னையை வணங்குகிறேன்..

மதிப்பெண் குறைந்தாலும்
மதிகெட்டு தெரிந்தாலும்
தன் பிள்ளைக்கென போராடும்
அன்னையை வணங்குகிறேன்..

வருடங்கள் பல சுமந்து வளர்த்தெடுத்த
வாரிசுக்கு திருமணம் ஆன பின்னே
மருமகளுடன் சேர்த்து மாமியாராகும்
அன்னையை வணங்குகிறேன்..

மருமகளை மறு மகள் ஆக்கும்
மனம் கொண்ட மனை யாவும்
மாமியாரை மற்றொரு தாயென
நேசிக்கும் மனைவியும் பெற்றவன்
என்றுமே பாக்கியசாலி..

தன் மனைவி சொல் கேட்டு
தாயைப் புறக்கணிக்கும்
தரம் கெட்ட செயலினை
எவரும் புரியாதீர்..

முந்தானை மோகத்தில்
முந்தானை ஈரத்தில் அன்று
உறங்கிட்ட நாட்களை என்றும்
நீ மறவாதே..

உதரத்தில் இடமளித்து
உதிரம் பல பெருக்கி உனக்கு
உயிர்ப் பிச்சை அளித்திட்ட
உன் தாயை நீ மறவாதே..

கஷ்டம் வந்தாலும்
துக்கம் பல நேர்ந்தாலும், அவளை
முதியோர் இல்லம் சேர்க்கும்
முட்டாளாய் ஆகாதே..

கர்ப்பக்கிரகத்துள் உள்ள கடவுளைக்
காட்டிலும் குடி இருந்த தாயின்
கர்ப்ப கிரகம் மிக வலியது எனபதை
என்றும் நீ மறவாதே..

அடுக்கடுக்காய் அன்னைக்கென
அழகு வரிகள் பல படைப்பேன்
அத்தனையும் படித்து முடிக்க
ஆயுசும் போதாது..

அகிலத்து அன்னையர்
அனைவருக்கும் சமர்ப்பணம்..

சிதம்பரம், ஆர்.வீ.பாலா..
14.05.17

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...