Search This Blog

Tuesday, October 30, 2018

மாற்ற(று)ங்கள்

மாற்ற(று)ங்கள்

உறவினர்களோடு
கூடி இருக்கையில்
கைப்பேசியை சற்று
ஒதுக்கி வைப்போம்.

நண்பர்களோடு
அளவளாவுகையில்
நச்சரிக்கும் அழைப்பை
நிறுத்தி வைப்போம்.

ஆண்டவன் சந்நிதியில்
அமைதி வேண்டுகையில்
அலைபேசி யாவையும்
அணைத்து வைப்போம்.

குழந்தைகளுடனே
கொஞ்சிடும் பொழுதினில்
தொலைப்பேசி இணைப்பை
துண்டித்து வைப்போம்.

இல்லத்தரசியின்
இன்முகம் நோக்கையில்
இயந்திரத்தை சற்றே
இயக்காது வைப்போம்.

நினைத்தேன் எழுதுகிறேன்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
30.10.18

Sunday, October 28, 2018

சரவணா ஸ்டோர்ஸ்

சரவணா ஸ்டோர்ஸ்

ஆடைக் குவியல்கள்
அமர்க்கமாய் இருக்குது
பிரமாண்ட கட்டிடமும்
பிரமிக்க வைக்குது
மனதுக்கு மட்டும் ஏனோ
எனக்கு திருப்தி இல்லை..

ஒன்றெடுத்தால்
மற்றொன்று
அதையெடுத்தால்
வேறொன்று ஆனால்
மனதுக்கு மட்டும் ஏனோ
எனக்கு திருப்தி இல்லை..

சில நூறுகளில் அன்று
துணிகள் எடுத்தது போக
பத்து ஆயிரங்கள் கொட்டி
பணம் செலவழித்தாலும்
மனதுக்கு மட்டும் ஏனோ
எனக்கு திருப்தி இல்லை..

பத்து தளங்கள் முழுதும்
பொங்கி வழியும் கூட்டம்
விளம்பரத்தைக் கண்டு
வியந்து வரும் மக்கள்
மனதுக்கு மட்டும் ஏனோ
எனக்கு திருப்தி இல்லை..

எத்தனை கடைகள்
பரப்பி வைத்தாலும்
அனைத்திலும் கூட்டம்
நிரம்பி வழிகின்றது
மனதுக்கு மட்டும் ஏனோ
எனக்கு திருப்தி இல்லை..

கொட்டாவி விட்டபடி
கடையின் மூலையிலே
கடிகாரத்தைப் பார்த்தபடி
கைப்பேசியுடன் அமர்ந்தேன்
வார்த்தைகளை வரிகளாக்கி
கவிதையினை நான் படைத்தேன்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.10.18

Saturday, October 27, 2018

எங்கள் பாட்டி

எங்கள் பாட்டி

தொண்ணூரை
தொட்டு நிற்கும்
தென்னை மரமே
தில்லையிலே
பிறந்து வளர்ந்த
எங்கள் அறமே..

பாசத்தோடு
அணைத்திடும்
பனை மரமே நீர்
பீமலாபுரத்தின்
வம்ச வழி வந்த
எங்கள் புறமே..

வாஞ்சையோடு
அரவணைக்கும்
வாழை மரமே நீர்
கோடா குடும்பம்
செழிக்க வந்த
உயர் தரமே..

மங்காத
புகழ் கொண்ட
மா மரமே நீர்
எழுவரை
ஈன்றெடுத்த
எங்கள் வரமே..

பகைமை
என்றும் பாராத
பாதாம் மரமே
புன்னகையோடு
உலா வந்திடும்
பலா மரமே..

தில்லியிலே
வாழ்ந்து வந்த
தேக்கு மரமே
எல்லையிலா
பக்தி கொண்ட
பாக்கு மரமே..

முகம் சுளிக்காது
முறுவலிக்கும்
முருங்கை மரமே
அழுக்கில்லா
அகம் கொண்ட
அத்தி மரமே..

அவ்வையாக
அணுகிரகிக்கும்
அரச மரமே நீர்
அன்பு என்னும்
விழுது படர்ந்த
ஆல மரமே..

வாரிசுகள்
பல எடுத்த
வேப்ப மரமே
நீர் கருணை
மழை பொழியும்
கொய்யா மரமே..

நோய் நொடியின்றி
வாழ வேண்டும்
நாவல் மரமே நீர்
நூறாண்டு கண்டு
சிறந்திட வேண்டும்
எங்கள் சிதம்பரமே..

விருட்சத்தின்
பெயர் கொண்டு
அர்ச்சித்தேன் உம்மை
கடாக்ஷித்து
அருள வேண்டி
பணிகின்றேன் தம்மை....

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

என்றும் தங்கள் ஆசி கோரும்
பீமலாபுரம் ஆர்.வீ. பாலு
28.10.2018

Thursday, October 25, 2018

வெள்ளிக்கிழமை சிறப்பு கவிதை

வெள்ளிக்கிழமை
சிறப்பு கவிதை

ராவோடு ராவாக
வந்திடுவேனே என்
ராசாத்தியே மெய்யாலுமே
கவர்ந்து செல்வேனே.

தூக்கத்திலே நித்தமும்
தேடி வருகின்றாய் எனை
கனவுலகில் காதலிக்க
கூட்டி செல்கின்றாய்.

உன் பிம்பத்தின் நினைப்பினிலே
நான் ஸ்தம்பித்து  போகின்றேன்
கனவு ஒருநாள் நனவாகுமென
உன்மத்தமும் அடைகின்றேன்.

கண்ணை மூடி இருக்கையிலே
கண்ணுக்குள் வருகின்றாய்
கனவை விட்டு எழுகையிலே
கலைந்து செல்கின்றாய்.

நிழலாக வருபவளே
நிஜத்தில் வாராயோ
சொப்பனத்தை மெய்ப்பிக்க
சற்று முன்னே வாராயோ..

காதலித்த(க்கும்) குழப்பத்துடன்..

💐💐💐💐💐💐💐💐💐

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
26.10.18

Wednesday, October 24, 2018

அன்னாபிஷேகம்

அன்னாபிஷேகம்

ஐப்பசி திங்களில்
பௌர்ணமி நாளில்
ஐயனுக்கு செய்யும்
அபிஷேகம் அதுவும்
அன்னத்தால் புரிவது
விஷேஷமாகும்..

அண்டத்தைப் படைத்த
ஆண்டவனுக்கு பலதாய்
அர்ச்சனைகள் நாமும்
செய்தாலும் சிறப்பாய்
அன்னத்தால் புரிவது
விஷேஷமாகும்..

தில்லையம்பதியிலே
ஸ்படிக லிங்கத்துக்கு
நித்தமும் நடக்குதாம்
அபிஷேகம் அதிலும்
அன்னத்தால் புரிவது
விஷேஷமாகும்..

அப்பர் பெருமான் பாடலில்;

அன்னம் பாலிக்கும்
தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும்
மேலுமிப்பூமிசை
என் அன்பு ஆலிக்குமாறு
கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ
இப்பிறவியே..

என உருகிப் பாடியுள்ளார்..

உபநிஷத்தில் கூறியபடி;

அந்நேந வாவா ஸர்வே
ப்ராணா மஹீயந்தே.
அன்னம் ந நிந்த்யாத்
ப்ராணோவா அன்னம்..

அனைத்துக்கும் பிரதானமாக
அன்னமே இருப்பதனால்
அன்னாபிஷேகம் செய்து
ஆண்டவனை மகிழ்விக்கிறோம்..

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
24.10.18

Tuesday, October 23, 2018

மனதை ஏதோ செய்கிறது

மனதை ஏதோ செய்கிறது

நமக்கு மிகவும்
பிடித்தமானவர்கள்
உடல் நிலம் குன்றி
உள்ளதை அறியும் போது
மனதை ஏதோ செய்கிறது..

இவ்வுலகம் முழுமையும்
தெரிந்தும் தெரியாமலும்
எண்ணற்ற உறவுகளின்
எண்ணற்ற உயிர்களின்
நிலைமையும் இவ்வாறே..

துயில் எழுந்தவுடன்
ஈசனைப் பிரார்த்திப்போம்
தினமும் மீண்டு(ம்)
துயிலச் செல்லுகையில்
நன்றியினை தெரிவிப்போம்..

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நிமிடமும்
ஒவ்வொரு நொடியும்
இறைவன் நமக்களித்த
பிச்சையில் வாழ்கின்றோம்..

நல்லதையே புரிவோம்
நல்லதையே பேசுவோம்
நல்லதையே காண்போம்
நல்லதையே கேட்போம்
நல்லதையே நினைப்போம்..

லோகா ஸமஸ்தா
ஸுகினோபவந்து:
ஸர்வே ஜனா:
ஸுகினோபவந்து:

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
23.10.18

Monday, October 22, 2018

சிறு சிந்தனைகள்

சிறு சிந்தனைகள்

ஒப்பிட்டு பார்ப்பதை
நிறுத்தினால் போதும்
ஓராயிரம் இன்னல்கள்
தானாகத் தீரும்.

வீணான கவலைகளை
நெஞ்சினிலே சுமந்து
வாழ்க்கையிலே விரக்தி
அடையவது வீணாம்.

நேற்றைக்கு நடந்ததை
மாற்ற முடியாது
நாளைக்கு நடப்பதை
கணிக்க முடியாது.

இன்றைக்கு நடப்பதில்
இயல்பாக இருப்போம்
இறைவனைப் பணிந்து
இன்முகமாய் நடப்போம்.

நாளைக்கு உயிர்ப் பிச்சை
நல்கிடும் ஆண்டவனுக்கு
ஒவ்வொரு இரவும் நாம்
நன்றி தெரிவிப்போம்..

நினைத்தேன் எழுதுகிறேன்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
22.10.18

Thursday, October 18, 2018

சரஸ்வதி தேவி

சரஸ்வதி தேவி

வீணான மனக்கவலைத்
தீர்த்து வைப்பவள்
வீணை சரஸ்வதி என்ற
பெயரைக் கொண்டவள்.

கல்விக் கண் திறந்து வைக்கும்
கருணை உள்ளத்தால்
கலைவாணி எனும் பெயரை
சூடிக் கொண்டவள்..

நல்வாக்கு சித்தி தரும்
தேவியுமாவாள்
வேண்டும் வரம் தந்தருளும்
வாணியும் அவாள்..

வெண்  தாமரை மலரினிலே
வீற்றிருப்பவள்
வித்யாரூபிணி என்ற
நாமம் கொண்டவள்..

நான்முகனின் கரம்பிடித்த
நாயகியாவாள்
பிரம்மி எனும் பெயர் பூண்ட
பிராட்டியும் அவாள்..

சகல சௌபாக்கியம்
கொடுக்கும் சாவித்ரியாம்
சத்தியலோகத்தில் இருக்கும்
சாரதையும் அவாள்..

ஆயகலை அனைத்திற்கும்
அதிபதியும் ஆவாள்
அண்டியவர் குறை தீர்க்கும்
அம்பிகை ஆவாள்..

கூத்தனூரில் கோவில் கொண்ட
கலை மகளும் இவளே
கும்பிடுவோர் வினை தீர்க்கும்
குலமகள் இவளே..

நவராத்திரி நந்நாளில்
நம்பிக்கையுடனே
நாம் அவளின் திருவடியை
நாடி பணிவோம்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா

நவராத்திரி கொலு

நவராத்திரி கொலு

ஒற்றை இலக்கத்தில்
படி வைத்து அடுக்கிட
ஒருநிலைப் படுத்தும்
மனநிலை அறியலாம்..

பத்து நாள் வைபவத்தில்
பாங்குடன் பொம்மைகளை
படிகளில் அலங்கரித்து
பரவசம் அடையலாம்..

பா மாலை பாடியும்
பூ மாலை சூட்டியும்
பொம்மை தெய்வங்களை
போற்றி வணங்கலாம்..

குட்டிச் சுட்டிகளுக்கு
கொண்டாட்டம் இந்நாளில்
தினம் ஒரு தினுசாய்
சுண்டலும் சுடச் சுட..

அக்ரஹாரங்களில் கொலு
அமர்க்களமாய் இருக்கும்
அக்கம்பக்கத்தினரை இது
அரவணைத்து சேர்க்கும்..

பத்து தலை இராவணன்
பஞ்ச பாண்டவ பொம்மைகள்
தசாவதார பெருமாள்கள்
தவறாது இடம் பெறுவர்..

தலையாட்டும் செட்டியார்
தாம்பூல தட்டு கூடைகள்
கல்யாண சீர்வரிசையும்
கண்ணிற்கு அழகு தரும்..

பூங்கா அமைத்து கூடவே
வண்ண விளக்குகளுடனே
விதம் விதமாய் அழகு பெறும்
நவீன கலை விழா..

மைசூரு அரண்மனையின்
பிரம்மாண்ட பெருவிழா
குஜராத் மாநிலத்தின்
கோலாகலத் திருவிழா..

முப்பெரும் தேவியரின்
முத்தாய்ப்புத் திருவிழா
நங்கையர் பூஜிக்கும்
நவராத்திரி பெருவிழா..

நவராத்திரி நந்நாளில்
முப்பெரும் தேவியரை வணங்கி
பத்து நாள் கொலுவும் வைத்து
பிரமாதமாய் கொண்டாடுவோம்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா

Monday, October 15, 2018

அப்துல் கலாம்

அப்துல் கலாம்

மதங்களை கடந்த
மாமனிதர், தமிழக
மண்ணில் பிறந்த
தவப் புதல்வர்..

குரானும் ஓதுவார்
கீதையும் படிப்பார்
தாய் மண்ணிற்காக
திருமணத்தை துறந்தவர்..

இராஷ்டிரபதி பதவியேற்ற
இராமேஸ்வரத்தார், இவர்
பொக்ரான் சோதனையிட்ட
பொறியாளர் ஆவார்..

எளிமைக்கு இருப்பிடமாய்
என்றுமே வலம் வந்தவர்
ஏழ்மையிலே வளர்ந்தும்
எட்டாத உயரம் சென்றார்..

மாணவச் சமுதாயத்தின்
மகத்துவத்தை உணர்ந்து
பள்ளி கல்லூரிகளில்
பங்கேற்று பேசியவர்..

தூக்கத்தில் காண்பது
கனவு அல்ல தூங்க
விடாமல் பண்ணும்
லட்சியமே கனவென்றார்..

மெத்தப் படித்திருந்தும்
அடக்கத்தின் இருப்பிடமாய்
தான் வளர்ந்த விதத்திலே
தரணியில் தலை நிமிர்ந்தவர்..

அக்கினி சிறகுகள் படைத்த
ஆ.ப. ஜெ. அப்துல் கலாம்
ஐயாவின் பிறந்த நாளில்
அவர் பாதம் பணிகின்றோம்.

💐💐💐💐💐💐💐💐💐

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
15.10.18

Saturday, October 13, 2018

இறை வழிபாடு

இறை வழிபாடு

சமீபத்தில் ஆலயத்திற்கு சென்ற பொழுது கவனித்த மற்றொரு விஷயம் மனதை மிகவும் பாதித்தது.

பத்தில் ஒன்பது பேர் கைப்பேசியும் காதுமாக சுற்றி வந்து கொண்டிருந்தனர். மன அமைதிக்காக கோவிலுக்கு வந்தும், ஐந்து நிமிடம் கூட இறைவனோடு இணையாமல் இப்படி இயந்திரத்தோடு பிணைந்து கிடப்பதைக் காணுகையில் கவலையாக உள்ளது.

பக்தர்கள் மட்டுமல்லாது, பூஜை செய்யும் அந்தணர்களும் நொடிக்கு நூறு முறை சிணுங்கும் செல்லினை எடுத்து செல்லமாய் பேசியபடி திரிந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது நெஞ்சு பதைப்பதைக்குது. வாய் நிறைய மந்திரங்கள் உச்சரித்த காலமும், வேத புத்தகங்களைப் படித்து உரு போட்ட காலமும் மறைந்து குழுவாக ஆங்காங்கே அமர்ந்து செல்லில் chat சேட்டை செய்தபடி அமர்ந்திருந்தனர்.

சில வயதான புரோகித பெருமக்கள் அக்காட்சியைக் கண்டு மனம் வெதும்பி தலையில் அடித்துக் கொண்டு கடந்து சென்றதை கண்கூடாக காண நேர்ந்தது. எடுத்துச் சொன்னால் எதிர்த்துப் பேசிடுவர் என்று அமைதியாக கடந்து சென்றனர். காலக் கொடுமை என்று தான் கூற வேண்டும்.

இந்நிலை மாற வேண்டும். நிம்மதியை நாடி ஆலயத்திற்குள் வந்து அமைதியைத் தொலைத்து அலைய வேண்டாமே. மனதை அலையவிட்டு மணிக்கணக்கில் கோவிலை சுற்றி வருவதால் ஒரு பிரயிஜனமும் இல்லை பத்தே நிமிடங்கள் ஆயினும் எந்த சஞ்சலமும் இல்லாமல் இறைவனோடு இணைந்து விடுவதே நலம் பயக்கும்.

இனியாவது செல்போனை அணைத்துக் கொண்டு திரியாமல் மொத்தமாக அதனை அணைத்துவிட்டு கடவுள் தரிசனம் செய்ய உறுதி பூணுவோம்.

திருச்சிற்றம்பலம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
14.10.18

Thursday, October 11, 2018

இறை வழிபாடு

இறை வழிபாடு

கோவிலில் சாமி கும்பிடும் பக்தர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்:

தயவு செய்து யாரும் தலைக்கு மேல் கைகளை உயர்த்தி சுவாமி கும்பிடாதீர்கள். உங்களுக்குப் பின்னால் பலரும் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்துக் கிடப்பதை மனதில் கொள்ளவும். தாங்கள் கரங்களை உயர்த்தி வழிபட்டால், பின்னே இருப்பவர்களுக்கு தங்கள் கர தரிசனம் மட்டுமே கிட்டும், இறைவனை சரிவர அவர்களால் தரிசிக்க இயலாது. தங்களை மனசுக்குள் அவர்கள் சபிப்பர், கோவிலுக்கு சென்று பாபம் தொலைக்காமல் சாபம் ஏன் வாங்க வேண்டும், சற்றே சிந்திப்பீராக.

தமது வீட்டில் இறை வழிபாடு செய்யும் போது தங்கள் இஷ்டம் போல கும்பிடுங்கள். கோவிலுக்கு வரும் போது, பிறர்க்கு உபத்திரவம் செய்யாமல், அமைதியாக வழிபட வேண்டும்.

நெஞ்சுக்கு நேராக கைகளை குவித்து, தலையை தாழ்த்தி சுவாமி கும்பிடுவதை இனி பழக்கப் படுத்திக் கொள்வோம்.

நேற்று தில்லை நடராஜர் கோயிலில் தீப ஆராதனை நடக்கும் பொழுது, பலரது கைகள் தலைக்கு மேலே உயர்ந்ததால், பின்னே நின்றவர்கள் அதீத சிரமத்திற்கு உள்ளானதைக் கண்டு மனம் நொந்து போனேன். அருகில் நின்றவர்களிடம் கையை இறக்குமாறு கூறியும், அவர்கள் சினத்துடன் என்னை முறைக்கையில் அவர்கள் மீது கோபப்படுவதா இல்லை அவர்களது அறியாமையைக் கண்டு அனுதாபப்பபடுவதா எனக்கு விளங்கவில்லை.

ஒரு சிறு முயற்சியாக, இப்பதிவினை இட்டுள்ளேன். இதைப் படித்த பிறகு, இனியாவது கோவிலுக்கு செல்பவர்கள் தயவு செய்து பிறர்க்கு தொந்தரவு தராமல் சுவாமி கும்பிடுமாறு தாழ்மையுடன் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
12.10.18

Wednesday, October 10, 2018

வடுகப்பட்டியான்

வடுகப்பட்டியான்

கவிதையில் தேர்ந்தவன் நீ
களவியிலும் தேர்ந்தவன் நீ
நித்தம் உனைப் பற்றி வரும்
நிஜங்கள் உன் தோலுரிக்குது.

நிழலுக்குப் பின்னால் ஒளிந்து
நடத்திய சகவாசங்கள் இன்று
நாட்டு மக்களின் மத்தியில்
வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.

ஆடையில் மட்டும் வெள்ளை
அகத்திலோ அட்டக் கருப்பு
ஆறு தேசிய விருதுகளையும்
உடனே நீ திருப்பித் தந்து விடு.

உனது வரிகளில் மயங்கி
கவி புனைய வந்த பலரில்
நானும் ஒருவன் ஆனால்
இப்படி ஏமாற்றி விட்டீரே.

எமது தெய்வம் ஆண்டாளை
பழித்துப் பேசிய பாதகனே
உனது உண்மை முகத்தை
இன்று அறிந்து கண்டோம்.

உம்மை ஆதரித்துக் கூவிய
பாரதிராஜாவும் மற்றொரும்
இப்போது எங்கே சென்றனர்
அவர்க்கும் பங்கு உண்டோ.

எங்கள் இசைஞானி அன்றே
ஒதுக்கி வைத்த காரணம்
இப்போது தான் எங்களுக்கு
புரிய வந்துள்ளது.

சமீப காலமாக தமக்கு
வாய்ப்புகள் வருவதில்லை
சேர்த்த புகழைக் கூட தாம்
சபலத்தில் தொலைத்து விட்டீர்.

இனி உமது வருங்காலம்
பெருத்த கேள்விக்குறியே
தனித்து உனது வீட்டில்
பசித்து மடிந்து போவீர்.

கழகத்தின் தயவினிலே
காலத்தை கழித்தவர் நீர்
கட்டுமரம் மறைந்த பின்னே
கடனாளியாகியே வீழ்வீர்.

வடுகப்பட்டியே
வருத்தத்துடன்
வரிகளை நான்
வடித்துள்ளேன்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
10.10.18

Tuesday, October 9, 2018

வாழ்க்கைத் தேர்வு

வாழ்க்கைத் தேர்வு

தேர்வு முடிவுகளைத்
தெரிந்து தேர்வினை
எழுதும் மாணாக்கராய்
உலகில் வாழுகின்றோம்.

விடைத்தாள் கிட்டியும்
வினாக்களை நிறப்பாமல்
வெற்றுத் தாள்களையே
திரும்பத் தருகின்றோம்.

வாழ்க்கை என்னும்
வகுப்பறையில் நாம்
வெட்டியாய் பொழுதைக்
க(ழி)ளிக்கின்றோம்.

ஆண்டவன் என்னும்
ஆசிரியர் சோதித்தால்
அத்தனை பாடத்திலும்
அவுட்டு ஆகின்றோம்.

அரியர்கள் வைத்தும்
அட்டெம்ப்டு எடுத்தும்
ஆயுசு முழுமைக்கும்
தேர்ச்சி ஆவதில்லை.

மனப்பாடம் செய்து
தேர்வடைவது போல்
மனதில் இறைவனை
சதா நினைத்திடுவோம்.

கடவுளின் நாமத்தை
நித்தமும் ஜெபித்து
காசினியில் மகிழ்வாய்
நாமும் வாழ்ந்திடுவோம்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
09.10.18

Monday, October 8, 2018

எம் தந்தை

எம் தந்தை

கதராடையை உடுத்தி
காந்தி வழி சென்ற மகான்
வெள்ளை ஆடையைத் தவிர
வேறெதுவும் தரித்ததில்லை.

உடன் பிறந்த மக்களோடு
ஒற்றுமையாய் கூடி நின்றார்
அறுவர் எமைப் பெற்றெடுத்து
அன்புடனே காத்து நின்றார்.

தம் தந்தை வழி தானும் சென்று
தரமான வாழ்க்கை கொண்டு
தன் சந்ததிக்கோர் சான்றாக
தரணி போற்றும் தகப்பன் அவர்.

ஈகை குணம் நிறைந்தபடி
இயன்றளவு தொண்டு செய்து
உள்ளத்தில் உயர்ந்தவராய்
ஊர் மெச்சிட வாழ்ந்து வந்தார்.

காந்தி மன்றத்திலே
காலமெல்லாம் தொண்டாற்றி
ஏழை மக்களை என்றும்
அரவணைத்துப் போற்றியவர்.

வடமொழியில் வல்லவராய்
இந்தியிலே பண்டிதராய்
அரை நூற்றாண்டாய் கற்பித்த
ஆசிரியப் பெருமகனார்.

இராமகிருஷ்ணா வித்யாசாலா
இராமன் ஹிந்தி வித்யாலயம் என
இறுதி மூச்சு இருந்த வரைக்கும்
இயங்கி வந்த திருமகனார்.

அவதூத ஸ்வாமிகளுக்கு
அக்ரஹார வனத்தினிலே
ஆலயம் அமையச் செய்த
ஆதர்ஷ மனிதர் அவர்.

காஞ்சி மடத்தின் கீழ்
கல்விக்கூடம் துவங்கச் செய்து
ஓரியண்டல் பள்ளி என்று
உருவாக்கம் தந்த வள்ளல்.

குருவைய்யர் வீதியிலே
கொலுவிருக்கும் கணபதியை
கடைசி மூச்சு உள்ளவரைக்கும்
பூஜிக்கும் பேறு பெற்றார்.

எம் தந்தையைப் பற்றி எமக்கு
தோன்றிய சில வரிகள் 🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா

Thursday, October 4, 2018

குருவே சரணம்

குருவே சரணம்

ஆங்கிரச
முனிவரின்
புதல்வனே
போற்றி

அமரர்களின்
குருவான
அய்யனே
போற்றி

ஆலங்குடியில்
ஆலயம் கொண்ட
ஆதி குருவே
போற்றி

நவகிரகத்தில்
நடு நாயகமாம்
இராஜ கிரகமே
போற்றி

மஞ்சள் ஆடை
உடுத்துகின்ற
முன்னவனே
போற்றி

தடையெலாம்
தகர்த்தருளும்
தயாபரனே
போற்றி

பாபங்களைப்
போக்கியருளும்
பிரகஸ்பதியே
போற்றி

வினைகளை
வேரறுக்கும்
வியாழனே
போற்றி

கடலை சுண்டல்
படையல் ஏற்று
கனிந்தருள்பவா
போற்றி

மஹா பாரதத்தை
மக்களுக்களித்த
வேத வியாசரே
போற்றி போற்றி.

குரு சுலோகம் :

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

குரு மந்திரம் :

தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் திரிலோகேஸம்
தம் நமாமி பிருகஸ்பதிம்

குரு பகவான் காயத்ரி :

வ்ருஷபத் வஜாய வித்மஹே
க்ருணீ ஹஸ்தாய தீமஹீ
தந்நோ குரு ப்ரசோதயாத்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
05.10.18

Tuesday, October 2, 2018

படிப்போம் சிறப்போம்

படிப்போம் சிறப்போம்

கண்டதைப் படித்திட
பண்டிதனாகலாம்
கண்டதையும் படித்திட
புலவனாய் ஆகலாம்.

பக்கங்களைப் புரட்டவே
பாதைத் தெளிவாகும்
பழுது பட்ட மூளையும்
பளிச்சென்று புலனாகும்.

தனிமையை விரட்டிட
புத்தகத்தைத் தேர்ந்தெடு
தரணியில் தலை நிமிர்ந்திட
பலவற்றையும் நீ படித்திடு.

நூலகத்தை நண்பனாக்கி
நேரத்தை அதனுடன் கூட்டி
நம்மை நாம் செம்மையாக்க
நாளையும் நம் வசப்படும்.

நூல் நூற்கப்படுவதினால்
மானத்தைக் காக்க உதவும்.
நூல் படிக்கப்படுவதினால்
மானத்தைக் காத்து உதவும்.

இனிய காலை வணக்கம்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
03.10.18

Monday, October 1, 2018

மஹாத்மா

மஹாத்மா

இப்படி ஒரு மனிதர்
இருந்தார் என்பதை
இன்னும் நம்மால்
நம்ப முடியவில்லை.

ஆயுதம் எடுக்காமல்
அறப்போர் முறையில்
ஆங்கிலேயரை எதிர்த்த
அஹிம்சாவாதி.

கேள்விக்குறி ஒத்த
உருவத்தைக் கொண்டு
காலனி ஆதிக்கத்திற்கு
கேள்விக்கணை தோடுத்தவர்

ஏழைப் பங்காளனாய்
மேல் வஸ்திரம் துறந்து
அரைக்கால் வேஷ்டியுடன்
ஆயுசுக்கும் வாழ்ந்தவர்.

உள்நாட்டு உற்பத்திக்கு
உத்வேகம் அளிக்க வேண்டி
கைராட்டை நூல் நூற்று
கதராடை பிரசாரித்தார்.

ஒரு தேசம் ஒரு மொழி எனும்
சித்தாந்தத்தை முன் வைத்து
நாடு முழுமைக்கும் ஹிந்தி
மொழி பரவ பாடுபட்டார்.

சொந்த வாழ்க்கையையே
சுயசரிதை எனும் நூலெழுதி
வெளிப்படையாய் வாழ்ந்த
உத்தம மனிதர்.

வெளியில் இருந்ததை விடவும்
சிறையில் இருந்ததே அதிகம்
நாடு முழுவதும் நடந்து சென்று
நாட்டு மக்களை ஒன்று திரட்டினார்.

சத்தியாகிரகம் எனும்
சாட்டையை கையிலெடுத்து
ஒத்துழையாமை மூலம்
பரங்கியரை விரட்டியடித்தார்.

மகாகவி பாரதியின் வரிகளில்

வாழ்க நீ! எம்மான்
இந்த வையத்து நாட்டி
லெல்லாம் தாழ்வுற்று
வறுமை மிஞ்சி விடுதலை
தவறிக் கெட்டுப்பாழ்பட்டு
நின்ற தாமோர் பாரத தேசந்
தன்னை வாழ்விக்க வந்த
காந்தி மஹாத்மா நீ
வாழ்க, வாழ்க!

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
02.10.18

காதலர் கள்

காதலர் கள்

கள்ளு குடிக்க
போதை ஏறும்
காதலும் கள்ளு
மாதிரி தான்..

மனசு கிறங்கி
மத்தாப்பு ஆகும்
மூளை மழுங்கி
மப்பு ஏற்றிடும்
சிந்தனை சிதறி
சிரிக்கத் தோணும்
சமைத்த உணவும்
சுவைக்க தோணாது
சதா சிந்தனையில்
சிறகடித்து கிடக்கும்
வீட்டுக்கு மறைவாய்
கள்ளு குடிப்பர்
அது போலத் தான்
வீட்டுக்குத் தெரியாது
காதலும் புரிவர்..

இப்போது கூறுங்கள்
கள்ளும் காதலும்
ஒன்று தானே..

சும்மா ஒரு கற்பனை 😁😅

😊😊😊😊😊😊😊😊

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
01.10.18

முதியோர் தினம்

முதியோர் தினம்

வீடு முழுவதும்
குழந்தைகளும்
திண்ணை நிறைய
பெரியோர்களும்
இருந்த காலங்கள்
பொற்காலம் ஆகும்.

தாத்தா பாட்டியின் மேல்
காலை போட்டுக் கொண்டு
கதை கேட்டபடித் தூங்கும்
சுகத்திற்கீடாக இவ்வுலகில்
ஏதும் இல்லை எனலாம்.

அம்மா அப்பாவிடம்
அடம் பிடிக்கும்
குழந்தைகள் கூட
தாத்தா பாட்டியிடம்
மிகவும் சமர்த்தாக
இருப்பதுண்டு.

கூட்டுக் குடும்பம் எனும்
கோவில்கள் குறைந்து
தனி மரமாய் குடும்பங்கள்
துளிரத் தொடங்கிய பின்
சிறிய அறையினுள் அவை
சிறைபட்டுப் போயின.

கணவனும் மனைவியும்
வேலைக்குச் செல்வதால்
இரண்டு வயதிற்குள்
குழந்தையை பள்ளிக்கு
அனுப்புவது இப்போது
எங்கும் வாடிக்கை ஆனது.

வயதான பெற்றோர்க்கு
முதியோர் காப்பகமும்
பிஞ்சு குழந்தைகளுக்கு
குழந்தைகள் காப்பகமும்
நகரங்களில் பெருகுவது
வேதனைக்குரியது.

கதை சொல்ல வீட்டில்
பெரியோர்கள் இல்லை
கைப்பேசியும் டீவியும்
குழந்தைக்கு பிடிக்குது
கார்ட்டூனைக் காட்டினால்
உணவும் உள்ளிறங்கும்.

இன்றைய இளைஞர்கள்
நாளைய தலைவர்கள்
இன்றைய சிறார்களே
நாளைய பெரியோர்கள்
எப்படி போற்றுகின்றோமோ
அப்படியே போற்றப்படுவோம்.

வாய்ப்பு உள்ளவர்கள்
வயோதிகம் பார்க்காது
வயதான பெரியோரை
வீட்டினுள் போற்றிடுங்கள்
வருங்கால சந்ததிக்கு
வளமாய் வழி காட்டுங்கள்.

முதியோர்களைக்
கொண்டாடுவோம்
மகிழ்ச்சியோடு
வாழ்ந்திடுவோம்.

உலக முதியோர் தினத்திற்கு
எழுதப்பட்டது. 💐💐💐💐💐

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
01.10.18

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...