Search This Blog

Friday, May 22, 2020

கொரோனா

கொரோனா

இன்னும் எத்தனை
நாட்கள் இவ்வாறு
இருப்பது..

நான்கு சுவற்றுக்குள்
அடைந்து சிறைப்பட்டுக்
கிடப்பது..

அலுவலகத்திலுள்ள
காலியான இருக்கை
சிரிக்கிறது..

எப்போது அமர்வேன்
எனும் ஏக்கத்துடனே
பார்க்கிறது..

எடுக்கப்படாத காரின்
முன்பக்கத்து இருக்கை
வா வென்கிறது..

சாலையோரத்தின்
இருமருங்கிலும்
பூக்களின் மலர்ச்சி..

நடமாட்டமில்லாத
வழித்தடம் யாவும்
பறவைகள் ஆட்சி..

இயற்கை தன் போக்கில்
இயல்பாகவே சிறப்புற
இயங்குகிறது..

மனிதனின் வாழ்வியலோ
முறையற்றுப் போனதால்
முடங்கியது..

திருத்த முயலுவதை விட
திருந்த முயலுவதே இனி
சரியா யிருக்கும்..

இசைவோம் ! இணைவோம் !

அன்பன், சிதம்பரம்
ஆர்.வீ. பாலா
22.05.2020

Thursday, May 21, 2020

கொரோனா

கொரோனா

வீட்டிலிருந்தபடியே
வேலையென்றதும்
முதலில் மகிழ்ச்சியாய்
இருந்தது.

நினைத்தபோது
எழுந்திடவும் மேலும்
நினைத்ததை உடுத்தவும் முடிந்தது.

ஆரம்ப காலங்களில்
சவுகரியமாயிருந்தாலும்
போகப் போக பெருஞ்
சுமையாயானது.

காலை முதல் இரவு வரை
இடையறாத அழைப்புகள்
இதற்கு நடுநடுவே பலப்பல
விவாதங்கள்.

இணையத்தின் வாயிலாக
எல்லோருடனும் இணைப்பு
என் இல்லத்து உறவினிலோ விடுபட்டது பிணைப்பு.

எதையோ இழந்த மாதிரி
எப்போதும் நானிருப்பதாக
என்னவள் கூறி வருவதும்
வழக்கமாய்ப் போனது.

மடிக் கணினி முன்பாக
முப்போதும் கிடப்பதால்
உணவின் ருசியைக் கூட
உணர முடிவதில்லை.

ஓடாத வாகனங்கள்
பழுதடைவதைப் போல
வெளியில் செல்லாத
மனிதனுக்கும் பாதிப்பே.

கொரோனாவே நீ
ஒழிந்திடும் நாளே
அனைவர்க்கும்
பொன்னாளாகும்.

அன்பன், சிதம்பரம்
ஆர்.வீ. பாலா
21.05.2020





சபாபதியே

சபாபதியே உனை சேவிப்பதெப்போது !!!

திருமஞ்சன வைபவமும்
திருவாதிரை உற்சவமும்
ஆண்டாண்டு காலமாய்
நடக்குது.

நான்மாட வீதியிலே
மூலவரே உற்சவராய்
பவனி வரும் பேரழகும்
சிறக்குது.

திருத்தேரின் மீதமர்ந்து
தில்லை மாநகர்தனிலே
அம்மையோடு அப்பனும்
உலவுவான்.

இராஜாதி இராஜனாக
வீதியுலா வந்து அவன்
குடிமக்கள் குறைதீர்த்து
அருளுவான்.

வேட்டுச்சத்தம் விண்ணதிர
ஆயிரங்கால் மண்டபத்தில்
சிவகாமியோடு சிருங்கார
நடனமாம்.

மேன்மையான சைவ நீதி
உலகெலாம் சிறக்க வேண்டி
சிற்றம்பலம் துணையிருக்க
வேணுமாம்.

நடராஜா நடராஜா 🙏🙏

அன்பன், சிதம்பரம்
ஆர்.வீ. பாலா
19.05.2020







சபாபதியே

சபாபதியே உனை
சேவிப்பதெப்போது !!

பக்தர்களைக் காணாத
பரமேஸ்வரா இன்னும்
பாராமுகம் ஏனய்யா
விஸ்வேஸ்வரா ?

ஊரடங்கு நீட்டிப்பாகுது
உமா மஹேஸ்வரா உன்
தரிசனம் தானெப்போது
லோகேஸ்வரா ?

நின் பொற்பாதம் தரிசிக்க
ஏங்கிக் கிடக்கிறோம் நிதம்
நமச்சிவாய நாமஞ் சொல்லி
நெக்குருகிறோம்.

சித்ஸபையில் குடிகொண்ட
நடராஜனே சகல ரோகமும் நிவர்த்தி செய்தருள்வாய்
சுந்தரனே.

அழகான சுந்தரியை
பாராது போனாலே
அவளழகுக்கு என்றுமே
மேன்மையில்லை.

அந்தணர்கள் துதித்தாலும்
அடியார்கள் காணாவிடில்
ஆலயத்துள் உனக்கென்றும்
சக்தியில்லை.

கொரானாவை களைந்திடு
கொடுநோய்களை விரட்டிடு
உலக மக்கள் யாவர்க்கும்
உய்யும் வழியை நல்கிடு.

நடராஜா நடராஜா 🙏🙏

அன்பன், சிதம்பரம்
ஆர்.வீ. பாலா
18.05.2020








Sunday, May 17, 2020

சபாபதியே

சபாபதியே உனை
சேவிப்பதெப்போது !!

சிவகாம சுந்தரா நின்
திருவடியை தரிசிக்க
சிதம்பரம் வர எமக்கு
சீக்கிரமருள வேணும்.

சித்திரை மாதத்திலே
சித்ஸபையில் அபிஷேகம்
ஆனி மாதத்திலே உனக்கு
ராஜசபையில் அபிஷேகம்.

அகங் குளிர தரிசிக்கும்
அந்நாளை எதிர்நோக்கி
ஆனந்த தாண்டவா என்
அகத்துளே தியானிப்பேன்.

அனுதினம் நினைந்துருகி
ஐந்தெழுத்தை உச்சரித்து
உமா மஹேஸ்வரா நான்
உன்னை சரணடைவேன்.

குஞ்சித பாதத்தை எமது
கண்ணாலே கண்டிடவே
கருனை புரிய வேண்டும்
கொரோனா தீர வேண்டும்.

கீழ கோபுரம் வழியாக
கோவிலுக்குள் நுழைந்து
ஆயிரங்கால் மண்டபத்தை
அமைதியாய் கடந்திடனும்.

இருபத்தோரு வாயிலின்
இருபுறமும் இறங்கியதும்
மாம்பழ விநாயகரை நமது
மனமுருக வேண்டிடனும்.

இடபுறமாய் திரும்பிச் செல்ல
கொடி மரத்தின் அருகினிலே
நெடுஞ்சாண்கிடை வீழ்ந்து
நேராக சென்றிடனும்.

சித்ஸபை ஜொலிஜொலிக்க
சிவகாமசுந்தரி உடனிருக்க
இராஜாதி ராஜனாக நம்மை
நடராஜ ராஜன் ஈர்த்திடுவான்.

தில்லைவாழ் அந்தணர்கள்
தினந்தோரும் ஆராதிக்க
தேவாதி தேவன் நமக்கு
திருவடியை காட்டிடுவான்.

ஆறு கால பூஜைகளை
அனுதினமும் ஏற்றபடி
அடியவர்களை காத்திடவே
அம்மையப்பனருளிடுவான்.

அர்த்த ஜாம பூஜையினை
ஐயா யாம் காண வேண்டும்
ஆனித் திருமஞ்சனத்தை
ஐயமின்றி அருள வேண்டும்.

நடராஜா நடராஜா 🙏🙏

அன்பன், சிதம்பரம்
ஆர்.வீ. பாலா
17.05.2020

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...