Search This Blog

Friday, November 30, 2018

ஆண்டு நிறைவு

ஆண்டு நிறைவு

ஆண்டின் கடைசி
மாத துவக்கம் என்று
சுவரில் மாட்டியுள்ள
காலண்டரின் குறைந்த
பக்கங்கள் அறிவித்து
சிரித்தன.

நாட்காட்டியில்
நிதமும் பேப்பர்
கிழித்ததை விட
பெரிதாய் என்ன
கிழித்தோம் என
நினைவில் இல்லை.

வயது முதிர்ந்த
பிள்ளைகள் உள்ள
பெற்றோர்களுக்கு
இல்லத்து திருமணம்
தாமதிப்பதைக் கண்டு
வேதனைத் தரும்.

மணமுடிந்த சில
தம்பதியர்களுக்கு
மழலைச் சொல்
கேட்கும் ஆவலில்
ஆண்டுத் துவக்கம்
ஆவல் தரும்.

புதிய வேலைக்கு
விண்ணப்பிக்கும்
வாலிபர்க்கு வயது
ஏறியும்  வாகான
வேலை இல்லாதது
வலியைத் தரும்.

ஊதிய உயர்வையும்
பணி உயர்வையும்
எதிர்ப்பார்த்திருக்கும்
ஊழியர்க்கு எல்லாம்
ஆண்டின் முடிவு சிறு
ஏக்கம் தரும்.

ஆண்டுத் தேர்வு மிக
அருகில் வருவதால்
பள்ளியில் பயிலும்
மாணவர்க்கு எல்லாம்
மதிப்பெண் பயமோ
மயக்கம் தரும்.

எமனை எதிர்த்து
நிற்கும் பெரிசுகளுக்கு
அடுத்த ஆண்டிலும்
இருப்போமா என்று
உள்ளுக்குள்ளே சிறு
பதட்டம் தரும்.

இப்படி ஒவ்வொருவரும்
ஒவ்வொரு விதமாய்
ஆண்டின் முடிவினை
ஆண்டின் தொடக்கத்தை
அவரவர் கோணத்தில்
அணுகி உள்ளனர்.

திசம்பர் மாதம்
திண்டாட்டத்தில்
முடியுமா இல்லை
தித்திப்பாய் அமையுமா
அந்த ஆண்டவனுக்கே
வெளிச்சம்.

🌹🌹🌷🌷🌺🌺💐💐🌻🌻

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
01.12.2018

வெள்ளிக் கிழமை சிறப்பு கவிதை

வெள்ளிக் கிழமை சிறப்பு கவிதை

கண்மணியே

கள்ளம் இல்லாத
காதலும் புரிவேன்
உள்ளத்தை எனக்கு
தருவாயா.

வெள்ளம் ஒத்த
பாசமும் பொழிவேன்
இல்லறம் நடத்திட
வருவாயா.

கண்ணே மணியே
காதலியே என்று
கவிதையாய் எழுதி
கவர்ந்திடுவேன்.

கண்ணுக்குள்ளே
கருவிழி போலுனை
கலங்காது என்றும்
காத்திடுவேன்.

உலகிற்கு எல்லாம்
உதாரணமாக நாம்
ஒன்றாய் கூடியே
வாழ்ந்திடலாம்.

ஊரார் மெச்சிட
பிள்ளைகள் பெற்று
உற்சாகமாய் நாமும்
வாழ்ந்திடலாம்.

இந்த ஜோடிக்கு
ஈடு இல்லையென
காண்போர் யாவரும்
கூறிடுவர்.

இணை பிரியாது
இருப்பதைக் கண்டு
பொறாமையும் கூட
கொண்டிடுவர்.

இன்பத்தில் உய்ய
சந்தர்ப்பம் ஏற்று
என்னுடன் நீயும்
வருவாயா.

இந்திர லோகத்து
சுகத்திற்கு ஈடாய்
இல்லறம் பேணிட
வருவாயா.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
30.11.18

Thursday, November 29, 2018

மூன்றின் சிறப்பு

மூன்றின் சிறப்பு

மூன்று உருவநிலை
சிவனின் சிறப்பு
முப்பெரும் தேவியர்
சக்தியின் சிறப்பு

மூன்று தொழில்கள்
படைத்தலின் சிறப்பு
முக்கண்ணன்
முழுமுதற் சிறப்பு

மூன்று காலங்கள்
காலத்தின் சிறப்பு
மூன்று வேளைகள்
நாளின் சிறப்பு

மூன்று ஆசைகள்
மனிதனின் சிறப்பு
மூன்று குணங்கள்
மக்களின் சிறப்பு

மூவகை பாலினம்
பிறப்பின் சிறப்பு
மூன்று நிலைகள்
பாலின் சிறப்பு

மூன்றாம் பிறை
பார்த்தால் சிறப்பு
மூன்று தமிழ்
கற்றால் சிறப்பு

முப்படைகள்
நாட்டின் சிறப்பு
மூன்று முடிச்சு
வீட்டின் சிறப்பு

மூவுலகம்
அண்டத்தின் சிறப்பு
மூன்று தலைமுறை
பிண்டத்தின் சிறப்பு

முக்கனிகள்
சுவைத்திட சிறப்பு
மும்மூர்த்திகள்
வணங்கிட சிறப்பு

மூன்று நாமம்
வைணவ சிறப்பு
மூன்று பட்டை
சைவத்தின் சிறப்பு

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ.பாலா
29.11. 18

Wednesday, November 28, 2018

மஹா பெரியவா

மஹா பெரியவா

இனி ஒரு துறவி இவ்
உலகில் வருவரோ
எம்மைக் காத்து
இரட்சித்தருள்வரோ.

கும்பிட்டு நின்று
பணிந்தால் போதும்
குறையாவும் சடுதியில்
தீர்ந்தே போகும்.

வாய்த் திறந்து
பேசவும் வேண்டாம்
வேண்டும் வரங்கள்
தானாய்க் கிட்டும்.

ஒரு பிடி அவல் உண்டு
எளிமையாய் வாழ்ந்து
வாரத்தில் பல நாட்கள்
உபவாசம் இருந்தார்.

தன் காலடி கொண்டு
யாத்திரை செய்தே
பாரதம் வலம் வந்த
காலடி ஆவார்.

நம்பிக்கையோடே
நாளும் பணிந்தால்
நல்லது செய்திடும்
நடமாடும் தெய்வம்.

சந்திரசேகரா என
சரணாகதி அடைய
சத்தியமாய் நமமை
காத்திடும் தெய்வம்.

அவர் ஓரடி வைத்து
ஈரடி நடநதிட்டால்
ஓட்டத்தில் அடியோர்
தொடர்வராம்..

நாலடி இடத்தில்
குறுகலாய் துயின்று
மாலடி ஜெபித்திட்ட
பெரியவராம்.

மஹா பெரியவா
மஹிமை உணர்ந்து
மனக் கவலை தீர
சரணடைவோம்.

மஹேஸ்வரனின்
மறு அவதாரமாம்
ஸ்ரீ மடத்து ஸ்வாமி
பதம் பணிவோம்.

இனி ஒரு துறவி
இவ்வுலகில் வருவரோ
எம்மைக் காத்து
இரட்சித்தருள்வரோ.

ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர
காலடி சங்கர
காமாக்ஷி சங்கர !!!

அன்பன், சிதம்பரம் ஆர்.வி. பாலா
29.11. 18

Tuesday, November 27, 2018

புதன் கிழமை

புதன் கிழமை

பாதி வாரம்
கடந்து இன்று
மீதி வாரத்தில்
நிற்கிறேன்.

வெள்ளிக் கிழமை
செல்லும் வழியில்
வழி மேல் விழியுடன்
இருக்கிறேன்.

மூன்று நாட்கள்
முடிந்தால் போதும்
முழுதாய் களிக்க
விடுப்பு கிட்டும்.

நள்ளாறு கிழமை
வந்தால் நாளும்
மிகவும் நலமாய்
அமையும்.

ஐந்து நாட்கள்
அலுப்பும் தீர
சனியும் ஞாயிறும்
சத்தியம் தேவை.

சந்தோஷமாய்
சேர்ந்து குஷிக்க
சீக்கிரம் சனியின்
வரவும் தேவை.

சும்மா புதன் கிழமை
நையாண்டி 😎😎😎

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.11.2018

Monday, November 26, 2018

சின்னக் காதல்

சின்னக் காதல்

என் தாய்க்கும்
தாரத்திற்கும்
அடுத்தபடியாக
எனது கனவில்
அதிகமாக வரும்
அம்பிகையே !!

என்னவென்று
உன்னைப் பற்றி
எழுதுவது ?

உன்னைக் கண்டாலே
உடை ஒழுங்கு பெறும்
நடையும் தெளிவு பெறும்.

சின்ன வயதில் உனை
சிநேகித்ததால் அதை
பாலினக் கவர்ச்சியென
பெரியவர்கள் கூறிடுவர்.

உன்னிடம் நேரில் கூற
எனக்கு புரியவில்லை
காதல் என்பதே அன்று
தெரியவில்லை.

இந்த வயதிலும்
உனது நினைவு
வருகையிேலே
தென்றல் தீண்டும்
கார்மேக மழை போல
கண்ணீர் மழை என்
கன்னத்தில் விழுகிறது.

உனது பிம்பம் என்றும்
மனதில் இருந்ததினால்
எந்த ஒரு காதலும் என்
பின்னாளில் வந்ததில்லை.

ஆம்,

என் மனைவியை மட்டுமே
இன்று காதலித்து வருகிறேன்.

காதல் செத்து போனது
என ஒருபோதும் கூறாதீர்
மணமாகாத காதல் தான்
வெகுகாலம் வரை உயிர்ந்து
மணம் வீசும் மல்லிகையாம்.

🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ பாலா 27.11.18

Sunday, November 25, 2018

விடி வெள்ளி

விடி வெள்ளி

வானத்தில் திங்கள்
தேய்வதைப் போல
வாரத்தில் திங்களும்
தேயும் விரைவில் விடி
வெள்ளி பிறக்கும 😎

வாரக் கடைசி தின
எதிர்பார்ப்புகளுடன்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
26.11. 18

ஞாயிறு போற்றுதும்

ஞாயிறு போற்றுதும்

அண்டத்தின்
தொடக்கத்தில்
இருந்தவன் நீயே

அண்ட வெளியில்
ஒளிர்ந்திடும்
அருணனும் நீயே

நில்லாமல்
நகர்ந்திடும்
திவாகரன் நீயே

நவ கோள்களை
வழி நடத்தும்
நாயகனும் நீயே

புவியினை
உயிர்ப்பிக்கும்
புரவலன் நீயே

நாத்திகனும்
நம்பி தொழும்
நவக்கிரகமும் நீயே

பயத்தினைப்
போக்கிவிடும்
பகலவன் நீயே

பாபத்தை
நீக்கி விடும்
பாஸ்கரனும் நீயே

உழவுக்கு
உதவிடும்
உத்தமன் நீயே

உலகத்தை
இயக்கிடும்
சக்தியும் நீயே

அருளைப்
பொழிகின்ற
ஆதித்தன் நீயே

இருளை
அகற்றுகின்ற
இறைவனும் நீயே

மக்களைக்
காத்திடும்
மித்திரன் நீயே

ரதத்திலேறி
ரட்சிக்கும்
ரவியும் நீயே

சஞ்சலத்தைப்
போக்கிடும்
சூரியன் நீயே

பால்வெளியில்
சஞ்சரிக்கும்
பானுவும் நீயே

கண்ணுக்குப்
புலனாகும்
ககபூஷண் நீயே

ஞாலத்தை
இயக்கிடும்
ஞாயிறும் நீயே.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
25 .11 .18

Thursday, November 22, 2018

திருக்கார்த்திகை

திருக்கார்த்திகை

சிவாலயங்களில்
அருஉருவம் கொண்டு
சிவலிங்க ரூபமாய்
காட்சியும் தருவான்.

சிதம்பரத்தில் அவன்
உருவம் பெற்று
தில்லை நடராஜனாக
அருள்பாளிப்பான்.

திருவண்ணாமலையில்
அருவ ஸ்வரூபமாய்
அக்கினி ரூபத்தில்
ஆட்சியும் புரிவான்.

மேல் நோக்கி எரியும்
தீப ஒளியைப் போல
எண்ணமும் மேலாய்
இருத்தல் வேண்டும்.

திருக்கார்த்திகை
திருநாளில் ஈசனின்
திருவைந்தெழுத்து ஓதி
திருவடி பற்றிட வேண்டும்.

திருச்சிற்றம்பலம் !!!!

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
22.11. 18

Monday, November 19, 2018

இயற்கையோடு இணைவோம்

இயற்கையோடு
இணைவோம்

கொசுவை அடிக்க
கத்தியை எடுத்தேன்
ஈ யினை விரட்டவே
ஈட்டியைப்பிடித்தேன்
பல்லியை ஒழிக்க
பாய்ந்து சென்றேன்
பூராணை விரட்ட
பதுங்கி நடந்தேன்
கரப்பான் பூச்சியை
கண்டாலே பயந்தேன்
நத்தை அட்டைக்கு
நடுங்கிப் போனேன்
மரவட்டை பார்த்து
மயக்கம் அடைந்தேன்
எறும்பினைக் கண்டு
எகிறிக் குதித்தேன்
எலியைப் பார்த்து
கிலியும் அடைந்தேன்.

இத்தனையும் மிஞ்சி
படமெடுதது வந்தான்
பாம்பு என்கின்ற
பயங்கரவாதி !!!

விவசாய நிலத்தில்
வீட்டைக் கட்டினால்
ஜந்துக்கள் யாவும்
வரத்தானே செய்யும்.

அவற்றின் இடத்தை
ஆக்கிரமித்து இன்று
பட்டாவும் போட்டு
குடியமர்ந்துள்ளோம்

விவசாயம் இல்லை
விளைச்சல் இல்லை
விலைவாசி  ஏற்றமோ
விண்ணை எட்டும்.

தூர்வாராத தரிசு நிலங்கள்
நீராதாரங்கள் படு பாதாளம்
ஆறு கிணறுகள் யாவும்
இன்று ஆக்கிரமிப்புகள்.

முந்தைய தலைமுறை
விட்டுச் சென்றதை நமது
பிந்தைய தலைமுறைக்கு
தருவது மரபாம்.

இயற்கைக்கு மாறாய்
இன்னல்கள் புரிந்து
அனைத்தையும் அழித்து
ஆக்கிரமித்துள்ளோம்.

இனியாவது திருந்துவோம்
இயற்கையோடு இணைந்து
வளமான உலகினை நமது
வாரிசுக்கு பரிசளிப்போம்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
20.11.18

ஆண்கள் தினம்

ஆண்கள் தினம்

சாண் பிள்ளை ஆனாலும்
ஆண் பிள்ளை நானென்று
சிறுவயதில் கேட்டதுண்டு.

சட்டை காலரை அன்று
சற்றே தூக்கி விட்டு
சுற்றி நான் வந்ததுண்டு.

ஆணாதிக்கம் ஓங்கி
பெண் அடங்கிய காலம்
இன்று கனவாக ஆவதுண்டு.

ஆணுக்கு சரிநிகராய்
இட ஒதுக்கீடும் கேட்டு
பெண்கள் சேர்வதுண்டு.

படிப்பிலும் பல காலம்
பெண்டிரே முதன்மையாய்
மதிப்பெண் எடுப்பதுண்டு.

வேலைக்கு சேர்வதிலும்
வித்தியாசம் பாராமல்
வஞ்சிகள் அடைவதுண்டு.

திருமணம் புரிந்த பின்
திணருகின்ற ஆண்களை
வழக்கமாய் காண்பதுண்டு.

சம்சாரம் நடத்துகையில்
சமாளிக்க முடியாமல் ஆண்
சோர்ந்தும் போவதுண்டு.

தாயிடம் தாரத்திடம்
சேயிடம் என்று தினம்
மிகவும் தடுமாறுவதுண்டு.

ஆனால் இன்றும்;

சாண் பிள்ளை ஆனாலும்
ஆண் பிள்ளை தானென்று
பெருமளவு கேட்பதுண்டு.

சர்வதேச ஆண்கள் தின
நினைவுகளுடன் ....

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ.  பாலா
19.11. 18

Sunday, November 18, 2018

என் ஆசை காதலியே

என் ஆசை காதலியே

கள்வனாய் பரி ஏறி
காதலி உனை நான்
கவர்ந்து செல்ல வேணும்.

கண்மணி உனையே
வர்ணித்து வரிகளில்
கவிதை எழுத வேணும்.

காமம் இல்லாது
காவியம் படைக்க
கண்ணே நீ வேணும்.

கடுகு நுழையாத சிறு
இடைவெளி விட்டு நாம்
இணைந்திருக்க வேணும்.

விலைவாசி ஏற்றத்தில்
விரக்தியும் அடையாமல்
வீட்டை பேணல் வேணும்.

இருப்பதைக் கொண்டு
இன்முகத்துடனே நாமும்
இல்லம் நடத்த வேணும்.

விடுப்பு எடுக்காமல்
வஞ்சியே உன்னருகில்
என்றும் இருக்க வேணும்.

ஆண்டுக்கொரு முறை
பிரசவ வலியெடுத்து நீ
பிள்ளை பெற வேணும்.

ஆண்பிள்ளை நானென
ஆகாயத்தில் குதித்து
மகிழ்ச்சி எய்த வேணும்.

சொத்து சுகத்தை
பெரிதாய் நினைத்து
துவளாதிருக்க வேணும்.

சொந்தத்தின் முன்னே
தலை நிமிர வாழ்ந்து
சாதித்து காட்ட வேணும்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வி. பாலா
18.11.18

Friday, November 16, 2018

தாயே ஈஸ்வரி

தாயே ஈஸ்வரி

காஞ்சியிலே
கொலுவிருக்கும்
காமாக்ஷி

கருணை உள்ளம்
கொண்டவளே
காமேஸ்வரி

காசியிலே
வீற்றிருக்கும்
விசாலாக்ஷி

காசினியை
காப்பவளே
விஸ்வேஸ்வரி

மதுரையை
ஆளுகின்ற
மீனாக்ஷி

மக்கள் குறை
தீர்ப்பவளே
மாகேஸ்வரி

பர்வத ராஜனின்
திருக்குமாரி
பார்வதி தேவி

தட்சனின்
திருமகளாம்
தாக்ஷாயிணி

தரணியை
ஆளுகின்ற
காத்யாயினி

மங்களம்
நல்கிடும்
முத்துமாரி

மாங்கல்ய
பலமருளும்
மாரியம்மா

சங்கடத்தை
தீர்த்து வைக்கும்
சாம்பவியே

சன்முகணை
ஈன்றெடுத்த
அம்பிகையே

பிள்ளையாரைப்
பெற்றெடுத்த
பரமேஸ்வரி

புவனத்தை
காத்தருளும்
புவனேஸ்வரி

தாயே உனை
சரணடைவேன்
காத்தருள்வாயே

தவறு செய்யின்
பிழை பொறுத்து
ஆட்கொள்வாயே.

🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
16.11.18

Wednesday, November 14, 2018

செல் லுக்குள் செல்லாதே

செல் லுக்குள் செல்லாதே

முகநூல் பக்கத்துக்கு
மொத்தமாய் இப்போ
முழுக்கு போட்டாச்சு.

வாட்ஸப் தளத்துக்கும்
கொஞ்சமாய் இனிமே
பூட்டு போடணும்.

எப்பப் பார்த்தாலும்
எல்லா இடத்திலும்
செல்லும் கையுமாய்.

காலையிலிருந்து
இரவு வரைக்கும்
குனிந்த தலையுடன்.

நிறுத்த வேண்டும்
இப்போக்கிலிருந்து
விடுபட வேண்டும்.

புத்தகம் படிக்கலாம்
செய்திகள் கேட்கலாம்
சேர்ந்து களிக்கலாம்.

நண்பர்களுடனே
நலம் விசாரிக்கலாம்
நல்லது அறியலாம்.

உறவினர்களுடனே
பேசி மகிழலாம் கூடி
பேரானந்தம் அடையலாம்.

கோவிலுக்குச் சென்று
கும்பிடு போடலாம்
குறைகளைத் தீர்க்கலாம்.

இன்னும் எவ்வளவோ
இரசிப்பதை விட்டு விட்டு
இயந்திர வாழ்க்கை ஏன் ?

செல் லுக்குள் செல்லாமல்
செயலிழந்து போகாமல்
செயல்பட வேண்டும்.

கைப்பேசியே இனி
என் கிட்டே வாராதே
தொல்லை தாராதே..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
14.11.2018

Friday, November 9, 2018

பூவே செம்பூவே

பூவே செம்பூவே

சின்ன கொலுசு கட்டி
சிணுங்கி நடக்கும்
செவ்வந்தியே

மத்தாப்பு சிரிப்பிலே
மனதை மயக்கும்
மல்லிகையே

தெற்றுப் பல்
தெரிய சிரிக்கும்
தும்பைப் பூவே

மூச்சு வாங்க உனைப்
பார்க்கத் தோணும்
முல்லை மலரே

அழகாய் அன்ன
நடை போடும்
அல்லி மலரே

கடைவிழியில்
காதல் சிந்தும்
கனகாம்பரமே

உதட்டை சுழித்து
நடந்து வரும்
நந்தியாவட்டையே

மகாராணி போல
ரோட்டைக் கடக்கும்
ரோஜா மலரே

சத்தமின்றி
சாகடிக்கும்
சாமந்தியே

திகைப்பூட்டி
சிலிர்ப்பூட்டும்
திசம்பர் பூவே

சொன்னபடி
அருகில் வாராய்
செவ்வரளியே

பல்லக்கில் நிதம்
சுமப்பேன் என்
பாரிஜாதமே

உனை நெஞ்சில்
தாங்கிடுவேன்
தாமரைப் பூவே

பூப்பறிக்க வருகிறேன்
பொட்டு வைக்க வருகிறேன்
பொழுது போக்க வருகிறேன்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
10.11.18

பூவே செம்பூவே

பூவே செம்பூவே

சின்ன கொலுசு கட்டி
சிணுங்கி நடக்கும்
செவ்வந்தியே

மத்தாப்பு சிரிப்பிலே
மனதை மயக்கும்
மல்லிகையே

தெற்றுப் பல்
தெரிய சிரிக்கும்
தும்பைப் பூவே

மூச்சு வாங்க உனைப்
பார்க்கத் தோணும்
முல்லை மலரே

அழகாய் அன்ன
நடை போடும்
அல்லி மலரே

கடைவிழியில்
காதல் சிந்தும்
கனகாம்பரமே

உதட்டை சுழித்து
நடந்து வரும்
நந்தியாவட்டையே

மகாராணி போல
ரோட்டைக் கடக்கும்
ரோஜா மலரே

சத்தமின்றி
சாகடிக்கும்
சாமந்தியே

திகைப்பூட்டி
சிலிர்ப்பூட்டும்
திசம்பர் பூவே

சொன்னபடி
அருகில் வாராய்
செவ்வரளியே

பல்லக்கில் நிதம்
சுமப்பேன் என்
பாரிஜாதமே

உனை நெஞ்சில்
தாங்கிடுவேன்
தாமரைப் பூவே

பூப்பறிக்க வருகிறேன்
பொட்டு வைக்க வருகிறேன்
பொழுது போக்க வருகிறேன்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
10.11.18

Thursday, November 8, 2018

அவளும் நானும்

அவளும் நானும்

சனி ஞாயிறு தான்
நமக்கு இனிதாகிடும்
கண்ணே வேறெப்படி
உன்னிடம்  சொல்லுவது

சனியனே என்று நிதம்
சலித்தபடி பயணிப்பேன்
சடுதியில் கிளம்பும் உனை
என்னவென்று சொல்லுவது.

பம்பரமாய் சுழலும் உன்னை
பாக்கியமாய் நான் பெற்றேனடி
சம்சாரத்தை நோகடிப்போரை
என்னவென்று சொல்லுவது.

அலுவலகத்து அசதியென்பது
அனைவர்க்கும் உண்டாகினும்
அடுப்பங்கரையிலும் பணி செய்து
உன் அலுப்பை தூர வீசுகின்றாய்.

நாலு மணிக்கு எழுகின்றாய் நிதம்
நாலு மணி நேரமே துயில்கின்றாய்
நம் நாலு பேருக்கும் உழைத்துவிட்டு
நாராய் கிழிபட்டு கிடக்கின்றாய்.

வார இறுதி விடுமுறை என்பது
வஞ்சியே உனக்கு இருப்பதில்லை
வாரத்தின் ஒரு நாளில் கூட
ஓய்வாய் நீ உட்கார்ந்து கண்டதில்லை.

உப்பு அதிகம் என்று அவளிடம்
உரக்க கூச்சல் போடாதீர் சற்று
கண்ணீர்த் துளி விழுந்திருக்கும்
கன்னத்தை உற்று திருப்பி பாரீர்.

கறி காய் நறுக்கித் தந்து தினம்
குழம்பு வைத்திட உதவிடலாம்
கால் கை அமுக்கி விட்டு அவள்
களைப்பை கொஞ்சம் நீவிடலாம்.

குழந்தைகளுக்கு பயில்விப்பதில்
சின்னதாய் உதவியும் புரிந்திடலாம்
இரவில் இம்சை புரியாது கொஞ்சம்
இங்கிதத்தோடு இருந்திடலாம்.

இரு கை தட்டவே ஓசை எழும்
இசைந்து தட்டினால் இசை எழும்பும்
இசையோ ஓசையோ எதுவாகிலும்
இல்லத்தினுள்ளே இருத்தல் நலம்.

சனி ஞாயிறு தான்
நமக்கு இனிதாகிடும்
கண்ணே வேறெப்படி
உன்னிடம்  சொல்லுவது....

பி.கு: கணவன், மனைவி இருவரும் பணிக்குச் செல்லும் சூழலுக்கேற்ப  எழுதியுள்ளேன்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
09.11.18

வெள்ளிக்கிழமை சிறப்பு கவிதை

வெள்ளிக்கிழமை சிறப்பு கவிதை

களைத்து வருகையில்
காபியைத் தருவாள்
கனத்த மனதினை
இலகிடச் செய்வாள்.

அனைத்து கவலையை
அணைத்து தீர்ப்பாள்
சமைத்து ருசியாய்
சுவைத்திட வைப்பாள்.

தனித்து கிடக்கையில்
நினைப்பைத் தருவாள்
இனித்துப் பேசியே
இரசிக்கச் செய்வாள்.

இன்முகத்தோடு என்றும்
இயங்கியே வருவாள்
இல்லத்து அரசியாய்
உள்ளத்தில் இருப்பாள்.

மறு பிறவி இருப்பின்
மஹேஸ்வரா என்னை
மனைவியாய் அவளுக்கு
அமையச் செய்வாய்.

கடன் பட்ட கணக்கைத்
தீர்க்க வேண்டும் என்
கணவனாய் அவளும்
அமைய வேண்டும்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
09.11.18

உஷார் உஷார்

உஷார் உஷார்

வாணிபம் செய்ய
உள்ளே வந்தவர்கள்
கலகம் செய்வித்து
குடியைக் கெடுத்தனர்.

மரபணு மாற்றப்பட்ட
காய் கனிகளால் ஆபத்து
அது போல மதம் மாறிய
மனிதர்களால் பேராபத்து.

உடலைக் கெடுப்பது
முன்னது என்றால்
உள்ளத்தை கெடுப்பது
பின்னது அறிவீர்.

வாங்கிய காசுக்கு
வித்தியாசமின்றி
வீதிகள் தோறும்
வலையினை விரிப்பர்.

கடவுள் மறுப்பு கூறும்
நாத்திகர்களை விட தம்
கடவுளையே மாற்றிய
இவர்களிடம் உஷார்.

நினைத்தேன், எழுதுகிறேன்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
08.11.18

மனமே

மனமே

மனமும் மனமும்
லயித்திருக்க
மணமாய் பொழுது
கடந்து போகும்.

மனமும் மனமும்
கனத்திருக்க
கணமாய் பொழுது
கடந்து போகும்.

மனமும் மனமும்
தனித்திருக்க
ரணமாய் பொழுது
கடந்து போகும்.

மனமும் மனமும்
பிரிந்திருக்க
பிணமாய் பொழுது
கடந்து போகும்.

பொழுதைக் கடத்துவது
மணி நேரமல்ல அன்றி
மனமே என்பதை இங்கு
உணர்ந்து கொள்வோம்..

சும்மா நினைத்தேன், எழுதுகிறேன்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
08.11.18

Tuesday, November 6, 2018

சர்கார்

சர்கார்

நடிகன் ஒவ்வொருவனுக்கும்
நாளையே முதல்வர் ஆகிடும்
கனவு மேலோங்கி வருகிறது.

ஆரம்ப காலத்தில் நாயகியோடு
மரத்தைச் சுற்றி பாட்டு பாடிவிட்டு
திடீர் ஞானோதயம் ஏற்பட்டதால்
நாட்டிற்கு தலைவனாகி விடுவராம்.

தனி மனிதனாக களத்தில்
நின்று அனைவரையும்
எதிர்த்து நிற்பாராம் இவர்
ஊழல் பெருச்சாளிகளைப்
பிடித்து போடுவாராம்..

ஒவ்வொரு படமும்
வெளிவரும் நேரம்
ஊடகத்தில் தெரிவாராம்
வசூலை வாரிக் குவிப்பாராம்.

கதையும் இல்லை ரசிக்க
நல்ல வசனமும் இல்லை
காதிற்கு இனிதாய் ஒரு
இனிய இசையும் இல்லை.

பாடல் வரிகள் எதுவும்
மனதில் பதிவது இல்லை
இசை என்னும் பெயரில்
இரைச்சலையே கேட்கிறோம்.

பாலச்சந்தர் பாலுமகேந்திரா
பாக்கியராஜ் மகேந்திரன் என
கதைகளை அள்ளித் தெளித்து
மிச்சம் வைக்காது வேட்டையாடினர்.

இசைஞானி இளையராஜாவோ
சங்கீத சகாப்தமாக உருவாகி
வேறு இசையை கேட்க முடியாதபடி
நம்மை கட்டிப் போட்டு விட்டார்.

இன்றைய தலைமுறையினரை
நினைத்து மனம் வருந்துகிறேன்
கூச்சலையும் இரைச்சலையும்
கேட்பதைத் தவிர வேறு வழியில்லை.

இரண்டரை மணி நேரம் நம்மை
இருட்டு அறையில் சிறைபிடித்து
நம் காதுமடல் கிழியுமளவு பெருத்த
சத்தத்தை கேட்கச் செய்கின்றனர்.

சர்கார் படத்தை சங்கடத்தோடு
சினிமா கொட்டகையில் கண்டு
மனம் வெதும்பி வார்த்த வரிகள்.

பி:கு: நானாக இன்று படத்திற்கு
செல்லவில்லை மாறாக
வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டேன். 😢😢

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
06.11.18

Monday, November 5, 2018

தீபாவளி

தீபாவளி

நாமெல்லோரும்
நரகாசுரனின்
அ(வ)ம்சங்களே.

காம, குரோத,
மத, மாத்ஸர்யம்
எனும் தீய எண்ணம்
நம்முள் உள்ளதால்
நரகாசுரனின்
அ(வ)ம்சங்களே.

இந்த தீப ஒளித்
திருநாளில்
சத்யபாமா சமேத
ஸ்ரீகிருஷ்ணனின்
பாதம் பணிவோம்.

நம்முள் குடிகொண்ட
தீய எண்ணங்களை
தீக்கிரையாக்கி
திருமாலின் திருவடி
பற்றிட சபதமெடுப்போம்.

நம்முள் உள்ளே
நரகாசுரனை
விடுவிப்போம்.

தித்திக்கும் தீபாவளி
நந்நாளாம் இன்று
நம் எல்லோர் வாழ்விலும்
வளமும் நலமும் என்றும்
பெருகட்டும்.

தீப ஒளி வாழ்த்துக்களுடன்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
06.11.18

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...