Search This Blog

Wednesday, January 31, 2018

ஜோதி

ஜோதி

ஆதியில் வந்தது
அழிவிலும் இருப்பது
அரனார் கையினில்
அக்கினியாய் உள்ளது..

காலையில் கதிரவன்
கனலாய் உமிழ்வது
கனன்று எரியும்
அனலிலும் தெரிவது..

ஒவ்வொரு உயிரிலும்
ஒருங்கே இருப்பது
உள்ளத்தினுள்ளே
ஒளிந்து இருப்பது..

வடலூர் வள்ளலார்
ஏற்றி வைத்தது
தைப்பூச நந்நாளில்
தெய்வமாய் தெரிவது..

ஒன்றுமிலாதது
அனைத்துமானது
மகர ஜோதியாய்
மங்காமலும் இருப்பது..

கற்பூர ஆரத்தியில்
கடவுளை காண்பது
இருள் விலகியதும்
அருளைப் பொழிவது..

எங்கும் ஜோதி
எதிலும் ஜோதி
எவரும் ஜோதி
என்றுமே ஜோதி

அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை

🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
31.01.18

Tuesday, January 30, 2018

தைப்பூச தாண்டவம்

தைப்பூச தாண்டவம்

புலியும் பாம்பும்
பூசித்து நிற்க
புவியினில் வந்த
தாண்டவம் இது
பரமேஸ்வரனின்
தாண்டவம்..

படைத்தலும் காத்தலும்
அழித்தலும் மறைத்தலும்
அருளலும் ஒரு சேர்ந்த
தாண்டவம் இது
பக்தர்களை ஆட்கொள்ளும்
தாண்டவம்..

ஐந்தொழில் புரிகின்ற
அம்பலவானனின்
அடியவர் மகிழும்
தாண்டவம் இது
ஆதிசிவனின் ஆனந்த
தாண்டவம்..

ஆலகால விடமுண்ட
அம்மையப்பனின்
அம்பலத்தே ஆடும்
தாண்டவம் இது
அம்பிகாபதியின்
தாண்டவம்..

திருமூலநாதரின்
திருமேனி விடுத்து
தில்லையில் ஆடிய
தாண்டவம் இது
தேவர்கள் தொழுதிட்ட
தாண்டவம்..

சனகாதி முனிவர்கள்
சபாபதியைத் துதிக்க
சிதம்பரத்தில் ஆடிய
தாண்டவம் இது
சித்சபேசனின் ஊர்த்துவ
தாண்டவம்..

நாகாபரணங்கள்
கழுத்தினில் ஆட
நடராஜ மூர்த்தியின்
தாண்டவம் இது
நமச்சிவாயத்தின்
தாண்டவம்..

தும்புரு இசைத்திட
டமருகம் ஒலித்திட
திருச்சிற்றம்பலத்தில்
தாண்டவம் இது
தேவாதி தேவனின்
தாண்டவம்..

அகிலத்தை காத்திட
அக்கினி கழலேந்தி
அரனார் ஆடுகின்ற
தாண்டவம் இது
ஆதிசேஷனுக்கருளிய
தாண்டவம்..

மால் அயனுக்கும்
காணக் கிடைக்காத
கயிலை நாதனின்
தாண்டவம் இது
மகேஸ்வர மூர்த்தியின்
தாண்டவம்..

உருவம் அருவம்
அருவுருவம் என
உலகை ரக்ஷிக்கும்
தாண்டவம் இது
உச்சிவேளை வந்த
தாண்டவம்..

தைப்பூச தினத்தன்று
தில்லையம்பதியிலே
தூக்கிய திருவடியின்
தாண்டவம் இது
தேவார நாயகனின்
தாண்டவம்..

மானாட மழுவாட
மதியாட புனலாட
மங்கை சிவகாமியாட
மாலாட நூலாட
மறையாட திறையாட
மறைதந்த பிரம்மனாட
கோனாட வானுலகு
கூட்டமெல்லாமாட
குஞ்சர முகத்தனாட
குண்டலமிரண்டாட
தண்டைபுலியுடையாட
குழந்தை முருகேசனாட
ஞானசம்பந்தரொடு
இந்திராதி பதினெட்டு
முனியட்ட பாலகருமாட
நரை தும்பை யறுகாட
நந்தி வாகனமாட
நாட்டியப் பெண்களாட
நடராஜ ராஜரின்
நர்த்தனமும் அரங்கேறிய
நந்நாளாம் தைப்பூசமாம்..

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
30.01.18

Monday, January 29, 2018

பிரதோஷம்

பிரதோஷம்

அந்தி மாலை வேளையிலே
அம்மையப்பனைத் தொழுது
அகம் குளிர அபிஷேகத்தை
ஆலயத்தில் காண்போம்..

இல்வாழ்வு சிறந்திடவே
இமயமலை வாசியிடம்
இம்மையும் மறுமையும்
ஈசன் பதம் பணிவோம்..

உலகெலாம் உணர்ந்தவனை
உய்விக்கும் பரம்பொருளை
உமா மகேஸ்வரனை நிதம்
ஊர் கூடி இறைஞ்சிடுவோம்..

எத்திக்கும் நிறைந்தவனை
எம பயத்தைத் தீர்ப்பவனை
எல்லாம் வல்ல நாயகனை
ஏகமாய் துதித்திடுவோம்..

ஒளி உமிழும் அக்கினியை
ஒலி உமிழும் டமருகத்தை
ஒருமித்தே வைத்து ஆடும்
ஓங்காரத்தை நாடிடுவோம்..

பிரதோஷ நந்நாளில்
பரமேஸ்வரனை வணங்கி
பொற்பாதம் பணிந்திடவே
பாவங்கள் விலகிவிடும்..

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
29.01.18

Sunday, January 28, 2018

இளையராஜா ஐயர்

இளையராஜா ஐயர்

இளையராஜா அந்தணர் ஆக
விரும்புவதாக பாரதிராஜா
உ(கு)ரைக்கிறாராம்..

பிறப்பால் அந்தணர் ஆவோர் பலர்
தனது சிறப்பால் / அறத்தால்
அந்தணர் ஆவோர் மிக சிலர்..

எங்கள் இசைஞானி இதில்
இரண்டாம் வகை..

போற்றுவோம் அவர் புகழை
வயிற்றெரிச்சலில் புழுங்கட்டும்
மற்றைய மனிதரெல்லாம்..

பாரத ரத்னாவிற்கு
பத்மவிபூஷன் கிடைத்தது
பாரதிராசாவிற்கு நெஞ்சு
பொறுக்கவில்லை போலும்..

புலம்பியே சாவட்டும் இந்த
பொய்முகத்து மாந்தர்கள்
என் இனிய தமிழ் மக்களே என
இனி ஏமாற்றுவது பலிக்காது..

விவாத மேடை வைத்து
ஊடகங்கள் கூட தினம்
உள்நோக்கத்துடனே
உளறித் தீர்க்கின்றன..

சாதியக் கண்ணோட்டத்தில்
சலித்துப் பார்ப்பதே என்றும்
சாக்கடைகளுக்கு வாடிக்கையாம்..

உயர்சாதி மக்கள் என்றும்
பிற சாதி மனிதர்களை
தரம் பார்த்து பிரிப்பதில்லை
தமிழர்களுக்கும் தெரியும்..

சாதி மத துவேஷம் மூலம்
சச்சரவை மூட்டுகின்ற
சதிகார கும்பல்களுக்கு
சாவுமணி அடிக்க வேண்டும்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.01.18

உஷார் உஷார்

உஷார் உஷார்

சைவத்திற்கும்
வைணவத்திற்கும்
சண்டையினை மூட்டுவர்
சனாதன மார்க்கமென்று
சமயத்தையும் சாடுவர்
திராவிடம் ஆரியம் என்று
திரித்து பலவாய்க் கூறுவர்
வேதபாஷை வடமொழியை
வேற்று பாஷை என்பர்
சாதி மத கலவரத்தில்
சண்டையிட்டு மகிழ்வர்
பாமர மக்களை நித்தம்
திசை திருப்பி விடுவர்
நாத்திக போர்வையிலே
நஞ்சை விதைத்து விடுவர்
நாட்டு மக்கள் அமைதிக்கு
நாசம் செய்து வைப்பர்
சிறுபான்மை காவலென
சச்சரவும் தினம் செய்வர்
சிந்திக்கும் மதியின்றி
சோம்பேறியாய்த் திரிவர்
கள்ள ஓட்டு போட்டு விட்டு
நல்லவராய் நடிப்பர் இவர்
மொள்ளமாறித்தனத்தில்
முதன்மை இடம் பெறுவர்..

உஷார் உஷார் உஷார்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.01.18

Saturday, January 27, 2018

பத்மவிபூஷன்

பத்மவிபூஷன்

பண்ணை புரத்து
மனிதருக்கு பத்மவிபூஷன்
பாட்டினை மெட்டினில்
அழகித்தவர்க்கு பத்மவிபூஷன்
சிம்பொனி இசையால்
மகிழ்வித்தவருக்கு பத்மவிபூஷன்
பின்னணி இசையின்
அரசருக்கு பத்மவிபூஷன்
மெலடியால் மக்களை
மயக்கியவர்க்கு பத்மவிபூஷன்
கிராமத்து இசையை
கொடுத்தவருக்கு பத்மவிபூஷன்
கர்நாடக இசையையும்
குழைத்தவருக்கு பத்மவிபூஷன்
மொத்தத்தில் பாரத ரத்னாவிற்கு கிட்டியது பத்மவிபூஷன்..

இவ்வளவு பெருமையையும்
தலித் சாதி என்று சிறுமையிட்டு
இசையின் ராஜாதி ராஜனை
சிறு வட்டத்துள் சுருக்குவதை
சாமானிய ரசிகனாக என்னால்
சகித்துக் கொள்ள இயலவில்லை.

சாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்டு
சாதிக்கும் மனிதரை தாழ்த்த வேணாம்.

நெஞ்சு பொறுக்குதில்லையே
நிலை கெட்ட மனிதரை இங்கு நினைக்கையில் என்றென்றும்
நெஞ்சு பொறுக்குதில்லையே..

அன்பன், சிதம்பரம், ஆர்.வீ. பாலா
27.01.18

இரைச்சல்

இரைச்சல்

காதைக் கிழிக்கும்
பேரிரைச்சல், இது
கவனத்தை குலைக்கும்
பேரிரைச்சல்.

மண விழா நாட்களில்
ஊர்வலம் செல்கையில்
வாத்திய ஓசைகள்
விண்ணைப் பிளக்கும்.

பண்டிகை காலத்தில்
பட்டாசுகள் வெடித்து
பெரிசுகளின் காதை
பெயர்த்தெடுப்பர்.

கோவில் விழாக்களில்
ஒலிப்பெருக்கி கட்டி
பாட்டுச் சத்தத்தில்
பட்டையை கிளப்புவர்.

சாலையில் செல்கையில்
ஊர்திகள் யாவும்
சத்தத்தை எழுப்பி
சங்கடம் புரிவர்.

தேர்விற்கு படிக்கும்
மாணவ மணிகள்
இரைச்சல் கேட்டு
இம்சை அடைவர்.

சிகிச்சை பெற்றிடும்
நோயாளிகள் எல்லாம்
இரைச்சல் ஒலியால்
நொந்து போய் விடுவர்.

வயதினில் மூத்த
வயோதிகர் எல்லாம்
வேதனை அடைந்து
வருத்தம் கொள்வர்.

காது மடல் கிழியும்
சத்தமும் வேண்டாம்
கவனத்தை சிதைக்கும்
காரியமும் வேண்டாம்.

அச்சுறுத்துகின்ற
ஆரவாரம் வேண்டாம்
அமைதியாய் பொழுது
அமைந்திடல் வேண்டும்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
27.01.18

ஸ்வர்ணலதா

பாலமுரளி

சாவித்திரி அத்தை

மனைவி

கவிதைத் துளிகள்

நவீன இரட்டுற மொழிதல்

கவிதைத் துளிகள்

மகள்

கவிதைத் துளிகள்

திருமண நாள் வாழ்த்து மடல்

விநாயகர்

தாய் தந்தை

விநாயகர் சரணம்

இல்லத்தரசி




களைத்து வருகையில்
புன்சிரிப்பேந்தி சூடாய்
காபியும் தந்திடுவாள்..

சந்தோஷமாக நித்தம்
சமையலும் செய்து
பசியினைப் போக்கிடுவாள்..

மாதக் கடைசியில் தனது
சேமிப்பு பணத்தையும் பகிர்ந்து
குடும்பத்தை நடத்திடுவாள்..

அவளும் சராசரி மனுஷியாவாள்
அலுவலகத்தின் ஆத்திரங்களை
அம்மணியிடம் காட்ட வேண்டாம்..

பிறந்த வீட்டின் சுகத்தை விடுத்து
புகுந்த வீட்டிற்கு சேவகம் செய்யும்
சம்பளம் வாங்காத வேலைக்காரி..

ஆணிற்கு நிகர் பெண்ணென்று
ஆயிரம் முறையில் கூறிடினும்
அடுப்பங்கரையே அவளுக்கு கதி..

துவைத்த துணியை காயப்போடவும்
சமைக்கும் போது காய்கறி நறுக்கியும்
சின்ன சின்னதாய் கூட உதவிடுங்கள்..

உப்பு காரம் சுவையினில் சரிந்தால்
கூச்சலிட்டு அவளிடம் சண்டையிடாமல்
அன்பாய் எடுத்துக்கூறி அனுசரியுங்கள்..

பெண்ணில்லாமல் ஆணில்லை என
வளரும் பருவம் தாயுடனும் பிறகு
மிச்சப் பருவம் தாரத்துடனும் உண்டு..

இட ஒதுக்கீடு எவ்வளவு இருந்தும்
இஷ்டமாய் வேலையை இழுத்து செய்யும்
இவளுக்கு இல்லமே என்றும் ஒதுக்கீடு..

பெண்மையைப் போற்றுவோம் 🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
26.10.17

காவிரித் தண்ணீர்

இராம்பிரகாஷ் ராஜன்




மெல்ல பேசிடும்
வெள்ளை மனிதர்
புறம் பேசாத மிக
நல்ல மனிதர்..

அதிர்ந்து பேச என்றும்
அவருக்குத் தெரியாது
அவசரத்தில் முடிவேதும்
எடுப்பதும் கிடையாது..

கைரேகை பார்த்து
கணிக்கும் வித்தகர்
பெண்டிர் மொய்க்கும்
பிரபலமான சோதிடர்..

நிதானம் தவறிடாத
நேர்மையானவர், இவர்
நிலைமையினையறிந்து
நடையெடுத்து வைப்பவர்..

செல்ல மகனாக இவர்
சிறப்போடு வளர்ந்தவர்
தாலாட்டிய தந்தையர்க்கு
சேவகித்து வருபவர்..

அன்னையை காத்திட
குடும்பத்தையும் பிரிவார்
சென்னைக்கு அனுப்பி
கடமையும் செய்வார்..

யதார்த்தத்தைப் புரிந்த
இல்லாளும் பெற்றார்
தந்தை சொல் கேட்கும்
செல்வங்களை கொண்டார்..

நிம்மதியான வாழ்வும்
நிறைவான வளமும்
பெற்று தாங்கள் என்றும்
நீடூழி வாழ வாழ்த்துகிறேன்..

💐💐💐💐💐💐💐💐💐💐

இயற்கையின் கொடை




இனியதொரு பொன்
மாலைப்பொழுதில்
சிறிதாகப் பெய்யும்
மழைநீர்த் துளிகள்..

நிலத்தில் விழுந்திடும்
நீரினால் எழுந்திடும்
மண்வாசனைக்கு
ஈடு இணை இல்லை..

ஈர மண்ணும் கூடவே
சில்லென்ற காற்றும்
மனதிற்கு மிகவும்
மகிழ்ச்சியைத் தரும்..

தாகம் தீர்த்திட
தண்ணீர் தேவை
தாவர வகை வளர
மழைநீர் தேவை..

நீரும் நெருப்பும்
காற்றும் நிலமும்
ஆகாயத்தின் கீழே
உயிர் வாழத் தேவை..

இயற்கையோடு ஒன்றாய்
இணைந்த வாழ்க்கை
இறைவன் நமக்களித்த
நன்கொடை ஆகும்..

பச்சை காய்கறிகள்
பழவகைகள் யாவும்
படைத்தவன் அருளினால்
பயிர் விளைகின்றன..

பசியைப் போக்கிடும்
தானிய வகைகளும்
மண்ணில் இருந்தே
விளைகின்றது..

மானம் காத்திடும்
துணிமணி நெய்ய
பருத்தியும் நிலத்தில்
கிடைக்கின்றது..

ஆறறிவு கொண்ட
மனிதன் தனக்கு
வசதியைப் பெருக்க
ஆசை கொண்டான்..

ஆண்டவன் அருளிய
இயற்கையை அழித்து
செயற்கை சுகத்திற்கு
அடிமையானான்..

மண் வளம் அழிந்து
மாசு பட்ட காற்றுடன்
நீராதாரமும் நிறையவே
குறைந்தது..

மரங்களை வெட்டி
வீட்டினைக் கட்டினோம்
வளங்களை அழித்து
வசதியைக் கூட்டினோம்..

உலகின் தட்பவெப்பத்தில்
மாற்றங்கள் நேர்வது
பின்வரும் சந்ததிக்கு
பேராபத்தில் முடியும்..

மரங்களை நடவவும்
மழை நீரைத் தேக்கவும்
மண்வளத்தைக் காக்கவும்
உறுதி ஏற்போம்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
08.10.17

(மாலை நேரத்தில் சுகமாய் காபி அருந்தியபடியே, பெய்த மழை நீரை
கண்டு ரசித்து எழுதிய கவிதை வரிகள்)

இடைத் தேர்தல்




தஞ்சையை
தனதாக்கிய
தன்னிகரற்ற
தலைவி..

ஆஸ்பித்திரியில்
அடைபட்டு இருந்தும்
அரவக்குறிச்சியை
அரவனைத்த
அம்மா..

திருப்பரங்குன்றத்தை
திமுகவிடம் இருந்து
திரும்ப எடுத்த
தெய்வம்..

வாரிசு அரசியலுக்கு
வேட்டு வைத்து, தமிழக
ஓட்டு வங்கியில் அதிமுக
பூட்டு போட்ட புரட்சித்
தலைவி எங்கள் அம்மா
நீவிர் நிரந்தர முதல்வர்...

வாழ்க நீடுழி...
அன்பன், ஆர்.வீ. பாலா..
22.11.16..

புதிய தலைமுறை

இசைஞானி இளையராஜாவின் பாதங்களில் எனது இக்கவிதையை சமர்ப்பிக்கிறேன்


## இசைஞானி ##

பண்ணைபுரத்தில்
பிறந்தவன் நீ
பின்னணி இசைக்கு
புகழ் சேர்த்தவனும் நீ..

ஞானதேசிகனாய்ப் பிறந்து
டேனியல் ராசய்யாவாய் வளர்ந்து
இளையராஜாவாய் இசையுலகை
ஆக்கிரமித்த இசை சக்கரவர்த்தி நீ..

பெயரில் தான் இளையராஜா
இசையில் எவரையும் முந்திய ராஜா
ஆர்மோனியத்தில் நீ விரலை வைத்தால்
ஆச்சரியத்தில் பிறர் மூக்கில் வைப்பர்..

அன்னக்கிளிக்கு முன்னர்
மெல்லிசை மன்னர்
அன்னக்கிளிக்குப் பின்னர்
பண்ணைபுரத்து மன்னர்..

உன் ஆர்மோனியத்திற்கு
உட்காராத வரிகள் இல்லை
உன் இசைக்கு மயங்காதோர்
உலகில் எவரும் இல்லை..

தயாரிப்பாளர் தலையில் விழ
இருந்த துண்டினை நின் இசையால்
அவர்தம் தோளில் விழ வைத்த
இசை வள்ளல் நீ..

கர்நாடக சங்கீதம் கோலோச்சிய
காலத்தில் நாட்டுப்புற சங்கீதத்தை
நடு வீட்டினில் கேட்கச் செய்த
இசை அரசன் நீ..

பின்னணி இசையினைக் கொண்டு
படத்தின் பெயரையும், முழுத் திரைக் கதையினையும் எம் மனத் திரையினில்
காட்டிய முடிசூடா மன்னவன் நீ..

ஆயிரம் படங்கள் அதிலே படைத்த
ஆறாயிரம் பாடல்கள் எவர்க்கும்
ஆயுசு போதாது அவ்வளவையும்
அலசி ஆராய..

பிடித்தது, பிடிக்காதது என்று பிரித்து
பார்க்க இயலாத வகையில் ஒவ்வொரு
பாடலுக்கும் மிகப் பிரமாதாமாய் இசை
உருவம் படைத்த பிரம்மா நீ..

பாட்டுக்கு மெட்டானாலும், உன்
மெட்டுக்குப் பாட்டானாலும் எதிலும்
முன்னனி வகுத்து நிற்பது நின்
பின்னணி இசையே ஆகும்..

ராகமும் தாளமும் ரசிகனுக்கு
நீ இட்ட இசைப் பிச்சை, பாடலின்
சரணமும் பல்லவியும் உன்னிடம்
சம்மணமிட்டு கிடக்கும்..

கதா நாயகன் பெயரிலும்
இயக்குனர்கள் பெயரிலும்
படங்கள் வெளி வந்த காலத்தில்
" இளையராஜாவின் இன்னிசையில் "
படங்கள் வந்து சக்கை போடு போட்டது..

சிம்பொனி இசை அமைத்த சிகரமே
சப்த ஸ்வரம் கற்ற ஏகலவ்யனே
ராக தாளம் நாட்டியமாடும் ராகதேவனே
எங்கள் மேஸ்ட்ரோ ராசாவுக்கு இனிய
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..

02.06.17 அன்று 74 ஆவது பிறந்த நாள்
கண்ட எங்கள் இசைஞானி இளையராஜாவின் பாதங்களில்
எனது இக்கவிதையை சமர்ப்பிக்கிறேன்.

இனிய இரவு வணக்கம்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ.பாலா
03.06.17..

ஆசிரியர் தினம்

அப்பா என்னும் ஆவா


ஆவா

அப்பா என்பதற்கு
பதிலாக
ஆவா என்றே
அழைக்கப்பட்டார்,
அறியப்பட்டார்..

வாமன ரூபராய்
தெரிந்தாலும்
வானுயர தம்
பிள்ளைகளை
உயர்த்தி நின்றார்..

நாகம்மையார் தந்த
நம்பிக்கையிலே
நன்றாக, நலமாக
நாள் கழித்தார்..

வருமானம் குறைவானாலும்
தன்மானம் குறையாமல்
வாழ்ந்து வந்தார்..

சதாபிஷேகம் கண்டு
சந்தோஷ வாழ்வு வாழ்ந்த
தெம்மூர் சாம்பமூர்த்தி ஐயர் , ஓர்
சகாப்தம்...

ஆலய அர்ச்சகர்



சாதிமத ஒற்றுமைக்காக எழுதப்பட்ட கவிதை வரிகளே தவிர, இது வீண்
விதண்டாவாதத்திற்கு எழுதியதல்ல..


கடையர் ஒருவரை
அர்ச்சிகராக்கி
அழகு பார்த்ததாம்
கேரள அரசு..

ஊடகங்கள் இதை
ஊதிப் பெரிசாக்கும்
விஷயத்தைக் கண்டு
வருத்தம் எமக்கு..

கடவுளைத் தொழாத
கயவர்கள் எல்லாம்
கோவில் பூசையில்
குறுக்கிடுவதேனோ..

அந்தணர்களை
அவமதிப்பதில்
அலாதி ஆசை
அவர்கட்கு உண்டு..

ஆகம விதி உள்ள
ஆலயங்களுக்கு
அந்தணர் முறையே
அர்ச்சிப்பதுண்டு..

காவல் தெய்வங்களாம்
மாரியம்மனுக்கும்
முனீஸ்வரனுக்கும்
பூசை செய்வது யாரோ..

கிராமக் கோவில்களில்
இன்றும் ஆராதிப்பது
அந்தணர் அல்லர்
அடியவர் தானே..

தனியே சட்டங்கள் இயற்றி
சமூக நியதியைக் குலைத்து
அரசியல் செய்வது என்றும்
ஏற்புடையதல்ல..

இளிச்சவாயர்களாய்
இருக்கும் வரையிலும்
இந்து மதத்தினை இவர்
இழிவு படுத்துவர்..

அவரவர் வழியினில்
அவரவர் சென்றால்
அவதிப்படுகின்ற
அவலம் வராது..

🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
10.10.17

பி.கு: சாதிமத ஒற்றுமைக்காக எழுதப்பட்ட கவிதை வரிகளே தவிர, இது வீண்
விதண்டாவாதத்திற்கு எழுதியதல்ல..











புதுவை

ஆர்.கே.நகர்




சென்னையைப் கைப்பிடித்த
மண்ணை மைந்தன், செல்வி
ஜெயலலிதாவைப் போற்றும்
மண்ணின் மைந்தன்..

உடலால் மறைந்தாலும்
உயிர் பிரிந்து சென்றாலும்
உள்ளத்தில் குடி கொண்ட
உயர்வான தலைவி அவள்..

எம்.ஜி.ஆர் என்ற மந்திரம் போல
அம்மா என்கிற மூன்றெழுத்தும்
ஆர்.கே நகர் வாசிகளிடையே
வாக்கு வங்கியை அள்ளியது..

காசை அள்ளித் தெளித்தாலும்
கால் கடுக்க சுற்றித் திரிந்தாலும்
கட்சிக்காக ஓட்டு போடாமல்
கரிசனப்பட்டே ஓட்டு இட்டனர்..

ஓரணியில் ஒன்று திரண்ட
ஒட்டு மொத்த தலைமையும்
ஓட்டு வங்கி சேர்க்காமல்
உருக்குலைந்து போனது..

சுட்டெரிக்க சூரியன் முயன்றும்
அதிமுக இரண்டாய் பிரிந்தும்
அம்மா என்ற பெயர் ராசிக்கே
இறுதியில் வெற்றி உரித்தானது..

தள்ளாத தலைவரும் கூடவே
தணியாத செயல் தலைவரும்
தமிழகத்து தலையெழுத்தை
மாற்ற எண்ணி ஓய்ந்தனர்..

தமிழா,

உன்னை ஆள புதிதாக
ஒரு மூன்றெழுத்து இன்று
உருவாகியுள்ளது, ஆம்
டி. டி. வி எனும் புது எழுத்தே..

அப்பல்லோ மர்மம் இனி
அடங்கிப் போய் விடும்
ஆதாரங்கள் எல்லாம் கூட
அஸ்தமனமாகி விடும்..

சட்ட மன்றத்தில் இனி
வேடிக்கை நடக்கும்
சகட்டு மேனிக்கு கட்சி
தாவல்களும் இருக்கும்..

கோட்டையை பிடிக்க
குக்கரில் வெந்ததை
இலையை வி(பி)ரித்து
பங்குண்டு திளைப்பர்..

ஊழல் வழக்கில் சிலர்
விடுதலை பெறுவர்
ஊழல்வாதி என்போர்
வாக்குகள் பெறுவர்..

தமிழக செய்திகள் தினம்
தலையங்கத்தில் வருகுது
தீபாவளி தள்ளுபடி போல்
அதிரடி அறிவிப்பும் நடக்குது..

கொண்டாட வேண்டியதா
திண்டாட வேண்டியதா என
சற்று பொறுத்திருந்து தான்
பார்க்க வேண்டும்..

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
24.12.2017









தத்துவ வரிகள்

ஆருத்ரா தரிசனம்




அற்புதமாய் அபிஷேகம்
அகங்குளிர காணலாம்
ஆயிரங்கால் மண்டபத்தில்
அம்மையோடு பார்க்கலாம்.

பால் தயிர் சந்தனம் என்று
பல திரவியங்களில் நீராட்டி
பரமனையும் ஈஸ்வரியையும்
பூசை செய்ய களிக்கலாம் .

இராஜ சபைதனிலே அழகாய்
இராஜாதி ராஜன் நடராஜன்
அலங்காரமும் ஏற்றபடி நமக்கு
திவ்ய தரிசனமும் தந்திடுவார்.

சித்சபைக்கு செல்லும் வழி
சிவகாமி அம்மையுடன்
அவனாடும் நடனடத்திற்கு
அகிலத்தில் இணை வேறில்லை.

வெட்டி வேர் வாசத்திலே
வழியெங்கும் மணமணக்க
வீறு நடை போட்டபடி அவன்
வஞ்சியுடன் சபை புகுவான்.

வேதம் ஓதும் வேதியரும்
திகட்டாமல் ஜெபித்திடுவர்
திருவாசக பதிகங்கள் சேர
சிவனடியார்கள் பாடிடுவர்.

உச்சி வேளைப் பொழுதினிலே
வேட்டுச் சத்தம் விண்ணதிர
ஆயிரங்கால் மண்டபத்தில்
அம்பலவன் ஆடிடுவான்.

அம்மையும் அப்பனும் ஒன்றாய்
முன்னும் பின்னும் அசைந்தாடி
அடியவர்கள் மனதையெல்லாம்
கொள்ளை கொண்டு போவார்கள்.

சூரிய ஒளி முகத்தில் பட்டு
பிரகாசமாய் ஒளிர்ந்திடுவான்
சுற்றியுள்ள பக்தர்களை அவன்
ஆட்கொண்டு அருளிடுவான்.

குடும்பத்து லக்ஷணமாய்
குலவிளக்காம் சிவகாமி
அப்பனுக்கு முன்னாலே
பொற்சபையுள் புகுந்திடுவாள்.

அடியவர்கள் கூட்டத்திற்கு
ஆனந்தத்தைத் தரும் ஈசன்
அம்பிகையின் பின்னாலே
சித்சபைக்குள் சென்றிடுவான்.

மார்கழி திருவாதிரையில்
கயிலாய மலையிலிருந்து
மங்கை சிவகாமியுடன்
மண்ணுலகில் ஈசன் வந்தான்.

பத்து நாள் உற்சவங்கள்
பாங்குடனே முடிவு பெரும்
தீக்ஷித பெருமகனார்களின்
சிரத்தையாலே பொலிவு பெறும்.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

" இன்று தில்லை சபாநாயகர்
ஆலயத்தில் ஆருத்ரா தரிசன
மகோத்ஸவத் திருநாளில்
ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து
சிவகாமசுந்தரி சமேத ஆனந்த
நடராஜ மூர்த்தி சித்சபா பிரவேசம் "

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
02.01.2018










ஆண்மகன்




சிங்கம் போல இவன்
சிலிர்த்து கிடந்தாலும்
சங்கடம் வந்தால்
சிதைந்து போவான்..

அன்பினை ஆழ்மனதில்
அமுக்கி வைத்தபடி
அலைந்து திரிந்திடும்
அப்பாவி வர்க்கம் இவனே..

தனக்கென வாழாமல் தனது
குடும்பத்திற்காகவே வாழ்வதால்
கனவுலகில் கால் நூற்றாண்டு
கவலையுலகில் அரை நூற்றாண்டு..

சொந்த வீடும் சொகுசு காரும்
வாங்க எண்ணியே வயசு கழிந்து
வருந்தியே வாழ்க்கை நடத்தும்
வாலிப கூட்டம் அநேகம் உண்டு..

கல்யாணக் கனவு கண்டு
கை நிறைய சம்பளம் நோக்கி
காலத்தை கடத்தி செல்லும்
காளையர்கள் கோடி உண்டு..

தனக்கு கிட்டாத சுகத்தினை
தன் பிள்ளைக்கு அளித்திட
உழைத்து ஓடாய்த் தேய்பவன்
அப்பாவெனும் ஆண்மகன் ஆவான்..

அடுத்த வருடத்திற்கு
மிச்ச வரிகளை வைக்கிறேன்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ பாலா
19.11.17







ஆகாயம்




முடிவில்லாதது
முற்றுப்பெறாதது
நவகோள்களும் நித்தம்
நகரும் ஆகாயமிது..

சூரியனும் சந்திரனும்
எண்ணிலடங்காத
நட்சத்திரமும் கூடியுள்ள
அண்டவெளி..

அண்ணாந்து பார்க்கையிலே
ஆச்சரியம் தினமும் வரும்
ஆகாய விமானங்கள் வெகு
அழகாக விரைந்து செல்லும்..

ஆகாய ஊஞ்சலிலே
ஆரவாரம் செய்தபடி
பறவைகள் பலவிதமாய்
சிறகிட்டு பறந்திடுமே..

மழைநீரைத் தந்திடும்
கார்மேக கூட்டமும்
உலா வந்து போவது
ஆகாயத்தின் கீழே..

பஞ்சபூத தலங்களில்
ஆகாயத்தைக் குறிப்பது
சிதம்பரத்தில் உள்ள
தில்லை நடராஜர் கோவில்..

புவியனைத்தையும்
போர்த்தி இருக்கும்
நீளவானம் நீலவானம்
பார்க்க என்றும் பிரமிப்பு..

பஞ்சபூதங்களை வரிசைப்படுத்தி
நித்தம் ஒரு கவிதை எழுதும் எண்ணம்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
05.11.17







!! ஆகாய விமானம் !!




ஆகாயத்திலே இது
பறக்குது, என்றும்
அண்ணாந்து
பார்க்கத் தோணுது..

மனிதன் கண்டறிந்த
இயந்திரப் பறவை
இலகுவாய் இணைத்திடும்
மிக நீண்ட தொலைவை..

வசதியுள்ளோரின்
விரைவு வாகனம், ஆனால்
ஏழைக்கு என்றும்
எட்டாத வாகனம்..

ஓடு பாதையில் இதன்
ஓடும் வேகம், உள்ளே
உட்கார்ந்திருப்போர்க்கு
தந்திடும் கலக்கம்..

மேகத்தைக் கிழித்து
மேலேறும்போது நம்
தேகம் சிலிர்த்து சிறு
மயக்கத்தை தாரும்..

வகை வகையான
வான ஊர்திகள்
வசதிக்கேற்ப அதில்
உல்லாச இருக்கைகள்..

அதிர்ந்துப் பேசாத
பணிவிடைப் பெண்கள்
செவிலியம் செய்திடும்
அழகு பொம்மைகள்..

ஒவ்வொரு முறையின்
பயணத்தின் போதும்
நம் குழந்தை மனதினை
கோடிட்டு காட்டும்..

பேருந்தாயினும்
விமானமாயினும், எவரும்
உட்கார நினைப்பது
ஜன்னல் இருக்கையில்..

அன்று
ராவணன் சென்றது
புஷ்பக விமானம்,
இன்று
ரைட் சகோதரர்களின்
ஆகாய விமானம்..

அன்பன், ஆர்.வீ. பாலா
28.11.16..

சாம்பியன் சிந்து

அன்னையர் தினம்


ஐயிரண்டு திங்களாய்
அடிவயிற்றில் எனை சுமந்து
அகிலத்திற்கு தந்திட்ட அந்த
அன்னையை வணங்குகிறேன்..

கார சாரமாய் கால் நூற்றாண்டு
சாப்பிட்டும் மசக்கையானவுடன்
பத்திய உணவிற்கு மாறிட்ட அந்த அன்னையை வணங்குகிறேன்..

மகளாக இருக்கையிலே மணிக்கணக்கில் உறங்கியவள், தாயான பின்னே தன் சேய்க்காக சுகம் தொலைத்த அந்த
அன்னையை வணங்குகிறேன்..

அழகு கெட்டுவிடும் என்று ஆயிரம் பேர்
கூறிட்டும், தன் குழந்தை முகம் முட்டி
மார்பினில் பாலருந்த பரவச நிலை எட்டும்
அன்னையை வணங்குகிறேன்..

தூளியில் ஆடவிட்டு தாலாட்டும் கூட பாடி
தாளிக்கும் ஓசை பட சமையலும் செய்து
தன் குடும்பத்தை நடத்திவரும் அந்த
அன்னையை வணங்குகிறேன்..

தொட்டிலில் ஒரு குழந்தை கட்டிலில் மறு குழந்தை என தன் நேரம் முழுமையையும் இருவர்க்கும் அர்ப்பணிக்கும் அந்த
அன்னையை வணங்குகிறேன்..

சேட்டை பல செய்தாலும் செல்ல மகன் நானென்று சகித்தபடி சந்தோஷமாய்
எனை வளர்த்து ஆளாக்கிய அந்த
அன்னையை வணங்குகிறேன்..

கண்டிக்கும் தகப்பனுக்கு
கடிவாளம் போட்டு வைத்து
கரிசனத்தோடு எனை வளர்த்த
அன்னையை வணங்குகிறேன்..

மதிப்பெண் குறைந்தாலும்
மதிகெட்டு தெரிந்தாலும்
தன் பிள்ளைக்கென போராடும்
அன்னையை வணங்குகிறேன்..

வருடங்கள் பல சுமந்து வளர்த்தெடுத்த
வாரிசுக்கு திருமணம் ஆன பின்னே
மருமகளுடன் சேர்த்து மாமியாராகும்
அன்னையை வணங்குகிறேன்..

மருமகளை மறு மகள் ஆக்கும்
மனம் கொண்ட மனை யாவும்
மாமியாரை மற்றொரு தாயென
நேசிக்கும் மனைவியும் பெற்றவன்
என்றுமே பாக்கியசாலி..

தன் மனைவி சொல் கேட்டு
தாயைப் புறக்கணிக்கும்
தரம் கெட்ட செயலினை
எவரும் புரியாதீர்..

முந்தானை மோகத்தில்
முந்தானை ஈரத்தில் அன்று
உறங்கிட்ட நாட்களை என்றும்
நீ மறவாதே..

உதரத்தில் இடமளித்து
உதிரம் பல பெருக்கி உனக்கு
உயிர்ப் பிச்சை அளித்திட்ட
உன் தாயை நீ மறவாதே..

கஷ்டம் வந்தாலும்
துக்கம் பல நேர்ந்தாலும், அவளை
முதியோர் இல்லம் சேர்க்கும்
முட்டாளாய் ஆகாதே..

கர்ப்பக்கிரகத்துள் உள்ள கடவுளைக்
காட்டிலும் குடி இருந்த தாயின்
கர்ப்ப கிரகம் மிக வலியது எனபதை
என்றும் நீ மறவாதே..

அடுக்கடுக்காய் அன்னைக்கென
அழகு வரிகள் பல படைப்பேன்
அத்தனையும் படித்து முடிக்க
ஆயுசும் போதாது..

அகிலத்து அன்னையர்
அனைவருக்கும் சமர்ப்பணம்..

சிதம்பரம், ஆர்.வீ.பாலா..
14.05.17

வெற்றி உனதே

அறுபடை வீடுகள்


அறுபடை வீடுகள்

திருப்பரங்குன்றம்
திருச்செந்தூர்
திருவாவினன்குடி
சுவாமிமலை
திருத்தணி
பழமுதிர்சோலை

முதலாம் படைவீடாம் நம்
மூஷிகன் அனுஜனுக்கு
தெய்வயானையைத்
திருமணம் புரிந்து
திருக்கோயில் கொண்ட
திருப்பரங்குன்றம்
மலையடிக் கோவில் ஆகும்..

லிங்க வடிவில் இந்த
மலையமைப்பு உள்ளதால்
திரு பரம் குன்றம் ஆனது..

இரண்டாம் படைவீடாம் நம்
இமயவள் மைந்தனுக்கு
சூரபத்மனை வதம் புரிந்து
போரில் வெற்றி பெற்ற
ஜெயந்தி நாதர் என்ற
செந்தில் நாதர் ஆலயம்..

மலையை விடுத்தான் முருகன்
கடற்கரையோரம் கோயில்
கொண்டான் கந்தன்..

மூன்றாம் படைவீடாம் நம்
முக்கண்ணன் மைந்தனுக்கு
மாம்பழம் வேண்டி இந்த
வையத்தைச் சுற்றியும் அது
கிட்டாத கோபத்துடன்
கயிலைமலையைத் துறந்து
குழந்தை சாமியாய் இங்கு
கோயில் கொண்ட திருத்தலம்..

பழம் நீ என்று பெற்றவர்கள்
போற்றியதால் இம்மலை
பழனி எனும் பெயரானது..

நான்காம் படைவீடாம் நம்
நாரணன் மருகனுக்கு
பிரணவத்தை எடுத்துரைக்க
பெற்றவனை குனிய செய்து
சுவாமிநாத சுவாமியாய்
தகப்பன் சாமியாகி இங்கு
கோயில் கொண்ட திருத்தலம்..

அழகிய மலைத்தலம் ஆகையால்
திருவேரகம் எனும் சிறப்பு
பெயரும் இதற்குண்டு..

ஐந்தாம் படைவீடாம் நம்
ஐந்தெழுத்தின் மைந்தனுக்கு
சுப்ரமணிய சுவாமி இங்கு
சூரனை வதைத்து பின்னர்
சாந்தம் கொண்டதால்
திருத்தணிகைமலை என்பது
இத் திருத்தலப் பெயராகும்..

வருடத்தின் நாள் குறிக்கும்
365 படிக்கட்டுகள் அமைந்த
அழகு மலைக்கோயிலும்
அமைந்த தனிச் சிறப்பாகும்..

ஆறாம் படைவீடாம் நம்
ஆறுமுக சாமிக்கு
சுட்ட பழம் வேண்டுமா
சுடாத பழம் வேண்டுமா
அவ்வையை வினவிய
வேல்முருகன் திருத்தலம்
பழமுதிர்சோலை ஆகும்

வள்ளியம்மை கரம் பிடிக்க
ஆனைமுகன் ஆதரவு கேட்ட
அழகிய திருத்தலமும் இந்த
பழமுதிர்சோலை ஆகும்..

எட்டுக்குடி, எண்கண்
சிக்கல் வயலூர்
வடபழனி வல்லக்கோட்டை
குமரக்கோட்டம் குன்றத்தூர்
குன்றுதோராடும் குமரனுக்கு
கோவில் பலவுண்டு நாட்டினிலே..

ஓராறு படை வீட்டில்
ஈராறு கரம் கொண்டு
மூவாறு திசை காக்கும்
வேலனடி பணிந்திட
நாலாறு நேரமும் நலமே..

வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே

!!! முருகா முருகா முருகா !!!

கந்தர்ஷஷ்டி திருநாளில்
கந்தன் பதம் பணிந்து
கவிதை வரிகள் படைக்கும்
பாலசுப்ரமணியன்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
21.10.17

அறிஞர் அண்ணா !!



!! அறிஞர் அண்ணா !!

"மாதமோ சித்திரை,
மணியோ பத்தரை,உங்கள்
விழிகளைத் தழுவுவதோ நித்திரை..
மறக்காமல் இடுங்கள்
எங்களுக்கு முத்திரை.."

"A sentence should not end in because, because, because is a conjunction"

அங்கிலமாகட்டும், அன்னை
தமிழ் மொழியாகட்டும், அடுக்கு மொழிகளால் அனைவரையும்
வசீகரித்த தமிழன் நீ..

காஞ்சி பட்டுக்கு மட்டும் சிறப்பைப் பெறவில்லை, பளிங்கு தமிழ் பேசிய
பச்சைய்யப்பன் கல்லூரி மாணவன்
உன்னாலும் தான் சிறப்பைக் கண்டது..

கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற
கோட்பாட்டை கண்டு பிடித்தவன் நீ
கழகத்தை துவங்கி வைத்து பல
தோழர்களை தட்டி எழுப்பியவன் நீ..

தமிழக மாவட்டம் தோறும் உன்
பெயரில்லா ஒரு தெருவும் இல்லை
அண்ணா நின் பெயர் தழுவாத எந்த
திராவிட கட்சியும் இல்லை..

சமூக நீதியோடு சேர்த்து
சமய நீதிக்கும் பங்கம் வராமல்
காத்திட உன்னுடைய அரசியல்
ஆசானையே எதிர்த்த தலைவன் நீ..

அண்ணா என்பது வெறும் உறவுச்
சொல் மட்டும் அல்ல, ஒவ்வொரு
தமிழனின் மூச்சிலும் கலந்த
உயிர்ச் சொல் என்பதே நிஜம்..

இன்னுமொரு கக்கனும்
கர்மவீரர் காமராஜரும்
கனிவு மொழி பேசி வந்த
அண்ணாதுரையும் தமிழகத்திற்கு
கிடைப்பது எப்போது ???

அண்ணாவின் நினைவு தினத்திற்கு
வடித்த வரிகள், அவர் தம் தமிழுக்காக எழுத்தப்பட்டதே தவிர திராவிட
கட்சிக்காக அல்ல..

இனிய இரவு வணக்கம்
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
03.02.2017..

## அழகு தமிழ் ##





மாறி மாறி விடாமல் பெய்த
மாரியில் நனைந்த
மாரிக்கு
மாரில் சளி கண்டது..

மாரி - மழை, பெயர், நெஞ்சு

இனிய காலை வணக்கம்
அன்பன், ஆர்.வீ. பாலா
27.09.16

சுதந்திர தினம்

அருமை


!! அருமை !!

நிழலின் அருமை
வெயிலில் தெரியும்,
நீரின் அருமை
தாகத்தில் தெரியும்..

உணவின் அருமை
பசியில் தெரியும்,
படையின் அருமை
போரில் தெரியும்..

உழைப்பின் அருமை
உயர்வில் தெரியும்,
ஊக்கத்தின் அருமை
ஆக்கத்தில் தெரியும்..

பணத்தின் அருமை
ஏழைக்குத் தெரியும்,
வேலையின் அருமை
இல்லாதவனுக்குத் தெரியும்..

மருந்தின் அருமை
நோயில் தெரியும்,
விருந்தின் அருமை
விழாவில் தெரியும்..

நண்பனின் அருமை
பண்பினில் தெரியும்,
உழவனின் அருமை
விளைச்சலில் தெரியும்..

கூடலின் அருமை
ஊடலில் தெரியும்,
தேடலின் அருமை
தெளிந்தப் பின் தெரியும்..

தாயின் அருமை
என்றும் தெரியும்,
தகப்பனின் அருமை
வளர்ந்தப் பின் தெரியும்..

பெண்ணின் அருமை
வீட்டில் தெரியும்,
ஆணின் அருமை
வெளியில் தெரியும்..

கணவனின் அருமை
கட்டிலில் தெரியும்,
மனைவியின் அருமை
தொட்டிலில் தெரியும்..

பாலாவின் அருமை
படைப்பினில் தெரியும்..

இனிய மாலை வணக்கம்,
அன்பன், ஆர்.வீ. பாலா..
02.12.16..


ஓம் குருநாதா

அரவிந்த் கல்யாணம்


அரவிந்த் கல்யாணம்

புதுவை மைந்தனுக்கு
புத்தாடை சூட்டிவிட்டு
கோட்டு சூட்டும் மாட்டி
கோலாகலமாய் நடக்கும்
கல்யாணம்..

ஆந்திர தேசத்து
அழகு மங்கையாம்
குமாரி ஸ்வாதியை
கரம் பிடிக்க நடக்கும்
கல்யாணம்..

நாத்தனார் நந்தினியும்
நடை கொளா மகிழ்வுடன்
நெக்குருக பூரித்து
நடனமாடி மகிழ்ந்திட்ட
கல்யாணம்..

சந்தோஷ களிப்பினில்
சுகந்தா மாமியும்
சற்றே பெருத்தது போல்
சம்பந்திகளுடன் குலாவும்
கல்யாணம்..

பந்தி உபசரிப்பில்
பரிவு காட்டி மகிழும்
புதுவை பாலு மாமா
செல்ல மகனுக்கு
கல்யாணம்..

கல்யாணமாம் கல்யாணம்
களிப்பு மிக்க கல்யாணம்
ஸ்வேதாரவிந்த் கல்யாணம்
சிறப்பு மிக்க கல்யாணம்..

ஆந்திராவின் மருமகனாம்
அரவிந்தன் என்றென்றும்
ஸ்வாதியுடன் சேர்ந்து
சந்தோஷமாய் வாழ
வாழ்த்துகிறேன்..

💐💐💐💐💐💐💐💐💐

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
11.11.17

நா. முத்துக்குமார்

அம்மா




வாயில் இருந்து வந்த
முதல் வார்த்தை,
வலி வரும் போது
தானாய் எழும் வார்த்தை..

அனைவரையும் விட
அழகாய்த் தெரிவாள்
அனுசரணையோடு
இல்லம் நடத்திடுவாள்..

அவளின் அடுப்பங்கரை
அலுவலகத்தில்
எஜமானியும் அவளே
தொழிலாளியும் அவளே..

ஒவ்வொரு வீட்டிலும்
தன் குழந்தைகளுக்காக
கணவனிடம் தூது
செல்லும் புறா இவளே..

இவளின் வேலைக்கு
என்றும் விடுப்பு இல்லை
அடுப்பு தான் அவளின்
வீட்டின் எல்லை..

ஓயாத வேலையினால்
உடை நனைந்திருக்கும்
சில சமயம் தண்ணீரினால்
பல சமயம் கண்ணீரினால்..

ஈரம் அவள் உடையிலும்
இருக்கும், என்றும்
இவள் நெஞ்சிலும்
இருக்கும்..

அன்னமிடும்
அன்னபூரணி
மணங்கமழும்
சாம்பிராணி..

அம்மாவைப் போலவே
பெண்ணைத் தேடுவதினால்
பல ஆண்களுக்கு திருமணம்
தாமதமாகிறது..

கருவாய் சுமந்தவளும்
கருவை சுமப்பவளும்
இணக்கமாய் கிடைக்கப்
பெற்ற ஆண் புண்ணியவான்..

அன்னையர் தினத்திற்கு
எழுதிய கவிதை, ஆம்
ஆண்டு முழுவதும் எமக்கு
அன்னையர் தினமே..

இனிய மாலை வணக்கம்
அன்பன், ஆர். வீ. பாலா
25.12.16..

அமைதி வேண்டும்



அமைதி வேண்டும்

அப்பரும் சம்பந்தரும்
மாணிக்கவாசகரும்
மண்ணுலகில் பிறந்து
மதத்தினை மீட்டனர்..

சமண பௌத்த சமயங்கள்
சீர்குலைத்த போதெல்லாம்
செப்பனிட்டு வாழ்வுதனை
சீரமைத்து தந்தார்கள்..

சமயக் குரவர்கள் செய்த
செம்மையான பணியை
மீண்டும் நாம் ஒன்று கூடி
மீட்டெடுக்க வேளை வருது..

சனாதன தர்மத்திற்கு இன்று
சோதனைகள் வரும் போது
சோர்ந்து நாம் போய்விடாமல்
சேர்ந்து காத்திடுவோம்..

பண்டைய பாரதத்தின்
பெருமையை பறைசாற்ற
சாமானியரும் வேண்டும்
சந்யாசியும் வேண்டும்..

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு
பக்தி இலக்கியங்களின் பங்கு
சங்க காலம் முதற்கொண்டு
தொடர்ந்து வருகின்றது..

அயல் நாட்டு அடிமை சிலர்
அற்பப் பணத்திற்காக
சாதி மத உணர்வை தூண்டி
சிக்கல்களை புரிகின்றார்..

இந்து மதத்தின் துவேஷமும்
பார்ப்பன எதிர்ப்பு கோஷமும்
தலைப்புச் செய்தியிட்டு இன்று
ஊடகங்கள் கூட உரைக்கின்றன..

இட ஒதுக்கீடு என்னும்
இடைஞ்சல் குறுக்கிடவே
படித்த மேல் சாதியர்கள்
மேலை நாட்டில் வேலையிலே..

அரசியல்வாதிகளின்
அநியாய சூழ்ச்சிக்கு
பலியாகி கிடப்பது
பாரதத்தின் மக்களே..

எழுபதாண்டு ஆன பின்னும்
எத்தனை காலங்கள் இன்னும்
இலவசங்கள் வேண்டும் இங்கு
இட ஒதுக்கீடும் வேண்டும்..

புதுப்புதிதாய் காரணம் காட்டி
பொய்யான பிரச்சாரம் இட்டு
அமைதியான மக்களிடம்
நஞ்சை விதைக்கின்றார்..

நாத்திகராய் இருப்பவர் மேல்
நமக்கென்றும் வெறுப்பில்லை
நாத்திகத்தின் போர்வையிலே
நயவஞ்சகமும் குறைவில்லை..

எம்மாநிலத்தும் இல்லாத
இடையூறுகள் எல்லாம்
நம்மாநிலத்தே நடக்கையில்
கண்ணீர் தான் வருகுது..

பெரியார் பெயரைச் சொல்லி
பிளவு படுத்துவோர் எல்லாம்
பெரியோராய் மாறும் நந்நாள்
பாலாவிற்கு கிட்டும் பொன்நாள்..

அமைதி நிலவ வேண்டும்
ஆரவாரம் குறைய வேண்டும்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
26.01.18




அமாவாசை




பிண்ட போஜனத்தில்
பெருமிதம் அடையும்
பித்ரு தேவர்களின்
புண்ணிய தினமாம்..

அகிலத்திற்கு நம்மையளித்த
அன்னையும் பிதாவும் தமது
ஆயுசு முடிந்தும் பித்ருக்களாகி
அரவணைத்துக் காப்பர்..

தர்ப்பைப் புல்லிலே ஆவகித்து
எள்ளும் நீரும் கூடவே சேர்க்க
திருப்தியடைந்து தெய்வ ரூபமாய்
நம்மை என்றும் காத்தருள்வர்..

அமாவாசை தினத்தன்று
ஆச்சாரத்தோடு நாம்
காக உருவில் வீட்டைச் சுற்றும்
பித்ரு தேவர்க்கு அன்னமிடுவோம்..

மூன்று தலைமுறையினர்க்கு
தர்ப்பணமும் வார்த்திட நமது
ஏழு தலைமுறைகளை அவர்கள்
ரக்ஷித்து அருள்வர்..

கோவில் குளங்கள்
திரியவும் வேண்டாம்
நித்தம் ஜபமாலையை
உருட்டிட வேண்டாம்..

பெற்றோரை வணங்கி
பூசையும் செய்திட
பரமனும் மகிழ்ந்து
பாபத்தை தீர்ப்பர்..

அன்னையும் பிதாவும்
அகிலத்தின் சாட்சியென
மாம்பழக் கதை மூலம்
மகேசனும் உரைத்தார்..

வாழும் காலத்தில் அவர்க்கு
சேவையும் புரிந்து பின்னர்
விண்ணுலகம் சென்றதும்
பித்ரு பூசையும் புரிவோம்..

தாய் தந்தையரை வணங்கி நிற்றலும்
குலதெய்வ பூசையைக் கைவிடாதலும்
தெய்வ வழிபாட்டினைக் காட்டிலும்
மிக்க மேன்மையாகும்..

சந்ததி செழித்திட
சௌபாக்கியம் பெற்றிட
பித்ருக்களை மகிழ்வித்து
பேரருளைப் பெறுவோம்..

"தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை"

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
18.11.17













அப்பா


அப்பா

ஹோம் ஒர்க் செய்யாத
குழந்தையை அடிக்கும்
அம்மாவிற்கு விழும் அடி
அப்பாவிடமிருந்து..

அம்மாவின் தியாகம்
அடுப்படியில் என்றால்
அப்பாவின் தியாகமோ
அலுவலகத்தில்..

அம்மையப்பனாய் மாறி
அறியாத குழந்தைக்கு
ஆய் அலம்பி விடும்
ஆயாவும் இவனே..

உங்களுக்கு ஒன்னும் தெரியாதுப்பா
என்று தன்னை முட்டாளாக எண்ணும் பிள்ளையிடமே கேட்டு அறிந்து கொள்ளும் இளிச்சவாயனும் இவனே..

சகட்டு மேனிக்கு நித்தம்
சவால்களை சமாளித்து
மேலாளருக்கு முதுகு வளைத்து
தேய்ந்தே போனது இவனெலும்பு..

அம்மாவிடம் கேட்க பயந்து
அப்பாவின் தோளை அணைத்து
ஆசை முத்தமிட்டு சாதித்துக் கொள்ளும்
மகள்கள் ஒவ்வொரு வீட்டிலும் உண்டு..

கேட்டதையெல்லாம் வாங்கித் தந்து
குட்டிச் சுவர் ஆக்காதீங்கன்னு
அம்மாக்களிடம் வசவு வாங்காத அப்பாக்களே இல்லை..

குழந்தையை மகிழ்விக்க யானை
சவாரி ஏற்ற குனிந்த அவன் முதுகு
குடும்ப பாரம் ஏறி காலத்திற்கும்
நிமிர்வதே இல்லை..

பிள்ளைகள் வளர்ந்த பிறகும்
தந்தையை தன் ஹீரோவாக
நினைக்கப் பெரும் தகப்பன்
நிஜத்திலும் ஒரு நாயகனாவான்..

தனக்கென வீடு வாங்குபவனை விட
தன் வருமானத்தில் மாதம் பாதி கட்டி
தன் வாரிசுக்காக வீட்டை வாங்குபவேனே
தகப்பன் ஆவான்..

முதுமையில் தன்னை வைத்து காப்பான்
என்று எந்த தகப்பனும் தன் பிள்ளையை
வளர்ப்பதில்லை, இத் தகவல் ஏனோ
பிள்ளைக்கும் தெரிவதில்லை..

மகனாக தன் தாயிடமும்,
சகோதரனாக உடன் பிறந்தவரிடமும்
தந்தையாக தன் மக்களிடமும் நடந்து
குடும்ப கப்பலை ஓட்டும் மாலுமி இவனே..

தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைக்கு
தோழனாய் இருந்து துவளும் தன்
சேய்க்கு தக்க அறிவுரையும் தந்திடும்
தகப்பன் சாமியும் இவனே..

அம்மா சொல்லியே அப்பன் இவனென்று
அறியும் குழந்தைக்கு அனைத்துமாய் ஆகி
ஆதாரமாய் இருந்து ஆசானுமாய் மாறி
அகிலத்தை காட்டிடும் அற்புதன் அவனே..

குழந்தை கேட்டதை வாங்க இயலாமல்
உடன்பட்டு ரணப்பட்டு முடிவில்
கடன்பட்டு வாங்கித் தந்திடும்
அப்பாவி அப்பனும் இவனே..

பிள்ளையைத் தன் தோளின் மீதேற்றி கடவுளைக் காண்பிக்கும் ஒவ்வொரு தகப்பனும் சாமியே, இதை நாம் உணரும்
வயதில் சாமியிடம் சென்று விடுகிறான்..

கோவிலுக்குச் சென்று கோபுர
தரிசனமும், தீர்த்த ஸ்தலம் சென்று
புண்ணிய நீராடுதலும் தமது
தாய் தந்தையர் பாதம் கழுவிட கிட்டும்..

சிந்தை தெளிந்து தன் தந்தையை
உணர்ந்த பின் விந்தையான உறவு இவனென்று தோன்றிடும் வாடிக்கை
இங்கு வெகுவாக உண்டு..

தந்தையைப் போற்றுவோம்
தரணியில் தலை நிமிர்வோம்..

தந்தையர் தினத்திற்கு வடித்த கவிதை..

அன்பன், சிதம்பரம் ஆர். வீ. பாலா
18.06.17









அப்பா





ஒவ்வொரு
அப்பாவும்
தம் பிள்ளைகளை
அப்பாவித்தனமாய்
வளர்த்து ஆளாக்கும் போது

பின்னாளில் ......

அப் பாவிகள்
தம் அப்பாவை
அலட்சியப்படுத்தி
அலைய விடுவது
எவ்விதத்தில்
நியாயம் ???

தனித்து விடப்பட்ட
தந்தைக்காக எழுதப்பட்ட
கவிதை(கண்ணீர் வரிகள்)

அன்பன், ஆர்.வீ. பாலா







அந்தணர்

பெரியப்பாவின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்



அபி குட்டி

தஞ்சையிலே பிறந்த
தங்க கட்டியே
தரணியை ஆள வந்த
தாமரை கொடியே..

கணேசனுக்கு கிட்டிய
கட்டி கரும்பே, எங்கள்
சிட்டி தம்பிக்கு கிட்டிய
சக்கரை கட்டியே..

இராஜ லட்சுமி ஈன்ற
இரவா லாடே
லலிதா அம்மையாரின்
லட்டு குட்டியே..

பல்லாண்டு வாழ வாழ்த்தும்
பாசமுள்ள பெரியப்பன் பாலா..





அரசியல் ஆதாயம்



அநியாயம் அக்கிரமம்

அற்ப அரசியல் ஆதாயம் வேண்டி
அஸ்திவாரத்தையே அசைத்திடுவர்
அநியாயமாய் மக்களைத் தூண்டி
ஆசை வார்த்தையால் புளுகிடுவர்..

சில்லரை கட்சிகள் பலவும் இன்று
சிறுபான்மை சமூக காவலனாம்
நித்தம் பிரச்சினை கையிலெடுத்து
நாட்டினில் கட்சி நடத்துகின்றார்..

வெளியில் இருக்கும் எதிரிகளை விட
வீட்டினுள் உள்ள எதிரியால் ஆபத்தாம்
இனக்கிளர்ச்சியில் இன்புறுவோரை
இனங்கண்டு ஒழித்திட நிம்மதியாம்.

உச்சி மரக்கிளையின் மீது அமர்ந்து
அடிமரத்தை வெட்டும் மூடனைப் போல
வெளிநாட்டு சதிக்கு கைக்கூலியாகி
தாய்நாட்டிற்குள் கலகம் செய்கின்றார்..

நித்தம் ஒரு சாதிக் கலவரம்
நித்தம் ஒரு இனக் கலவரம்
ஊழல் செய்யும் அரசியல்வாதிகள்
ஒளிந்து கொள்வது அக்கிரமம்..

திரையில் நடிக்கும் மனிதர்கள் கூட
திரை மறைவு வேலை செய்கின்றார்
பாழாய்ப் போன படத்தினை ஓட்ட
பாமர சனத்தினை தூண்டுகின்றார்..

உண்மை உரைக்கும் செய்திகளை
ஊடகங்கள் மறைத்து விடுகின்றன
ஊழலில் திளைக்கும் அரசியலுக்கு
உறுதுணையாக இருக்கின்றன..

அண்டை நாடுகள் அறிவியல் துறையில்
ஆகாயத்தைத் தொட துடிக்கின்றன
அநியாய அரசியல் நடத்துவோர்கள்
அமைதியை குலைக்க முயல்கின்றன..

ஆங்கில ஆட்சியை விரட்டியடிக்க
தம் இன்னுயிர் ஈந்த வீரபூமி அன்று
அடிமைப்படுத்தி அதில் சுகம் காணும்
அரசியல் கட்சிகளின் பூமி இன்று..

பெயரை மறைத்து வேஷம் போட்டு
மக்களை ஏமாற்ற முயலுகின்றார்
பெரியார் பெயரை இன்னமும் கூவி
மத சாதி கலவரத்தை மூட்டுகின்றார்..

க்ஷேமமாயுள்ள சிறுபான்மையினரை
சஞ்சலப்படுத்தி முடுக்குகின்றார்
இந்து விரோத கொள்கையைக் கொண்டு
கோட்டையைப் பிடிக்க முயலுகின்றார்..

அமைதியாய் இருப்பது மூடத்தனமல்ல
அடங்கி இருப்பதும் கோழைத்தனமல்ல
நல்லிணக்கத்தோடு நாம் இருப்பது
நயவஞ்சகர்களுக்கு பிடிப்பதில்லை..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
25.10.17





ஆசை



அதீத ஆசை போகம், பின்னர்
அதுவே தரும் பெரும் சோகம்.
புண்ணிய பலன் நம் தேகம், இது
புரிந்திராவிடில் வரும் ரோகம்.
இளமையில் இருப்பது வேகம், நமை
முதுமையில் காப்பது விவேகம்.
நம் தந்நம்பிக்கையில் உள்ள மோகம்,
தருமே வாழ்வினில் ஆனந்த ராகம்.

இனிய மாலை வணக்கம்.
அன்புடன், ஆர்.வீ. பாலா..

ரஜினி அரசியல் பிரவேசம்



அதிரடி அறிவிப்பு

திசம்பர் 31 ஆம் தேதி
அறிவிப்பு வருமாம் !

எப்ப வருவேன் நான்
எப்படி வருவேன்னு
தெரியாது ஆனா
வரவேண்டிய நேரத்துல
கரெக்டா வருவேன்
ஆண்டவன் சொல்றான்
அருணாசலம் செய்றான்..

ஐயா இம்மாதிரி
தொடர் வசனங்கள்
கேட்டு கேட்டு எங்கள்
காதுகள் இப்போது
கிழிந்து போயுள்ளது.

என்ன பேசுகிறார் என
புரிந்து கொள்ள இயலா
சகலகலா நடிகர் ஒருபுறம்
என்ன பேசுவார் என
என்றும் விளங்க முடியா
உச்ச நடிகர் மறுபுறம்..

அரசியலில் இறங்கி
அஸ்திவாரம் ஆடிப்போன
மதுரைக்கார நடிகர் இன்று
மாயமாய்ப் போனது
உமக்கும் தெரிந்திருக்கும்..

குழப்பம் உண்டு பண்ணி
வசூல் வேட்டை காண்பதும்
புரியாத வகையில் எப்பவும்
புதிர் போட்டு பேசுவதும்
நிறுத்தும் தலைவா, சற்று
தெளிவாய் முடிவெடுங்கள்
தமிழர்களை விடுவியுங்கள்..

அடுத்த வருடமும் இதே நிலை
தொடர்ந்தால் நீங்கள் முன்பு
கூறிய வசனமே எங்களுக்கு

"ஆண்டவன் நினைத்தாலும்
தமிழகத்தை இனி காப்பாற்ற
முடியாது"..

திரைப்பட நடிகர்கள் மட்டுமே
தமிழகத்தை ஆள முடியும்
எனும் கட்டாயம் இல்லையே
நல்ல மனிதரை நாமும்
இனம் காணல் வேண்டும்
கட்சிக்கு வாக்களிக்காமல்
கண்ணியம் பார்த்து நமது
வாக்கினை அளிப்போம்..

ஒரு தமிழனாக
ஒரு ரசிகனாக
இவ்வரிகளை
பதிவிடுகிறேன்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
27.12.17




அண்ணாச்சி கடை !



!! அண்ணாச்சி கடை !!
!! சூப்பர் மார்கெட் !!

தெரு முனையின்
அண்ணாச்சி கடை..

புதிதாக தெருவினுள்
வருவோர் எல்லாம்
விலாசம் விசாரிக்கும்
இலவச மையம்..

அரிசி - பருப்பு வாங்கும் போது
கூட வரும் குழந்தைகளுக்கு
கொசுறு மிட்டாயும் தருவார்..

சக்கரையையும் கட்டுவார்,
வீட்டின் நலம் விசாரித்து மிக
அக்கரையும் காட்டுவார்..

விசாவும், மாஸ்டர் கார்டும்
வருவதற்கு முன்னே
மாதத் தவணையில்
மளிகை சாமான் தந்திட்ட
கிரெடிட் கார்டு மனிதர்..

அன்று
சீட்டினில் எழுதி வைத்த
மளிகை மட்டுமே
வீட்டினில் வந்தது;
இன்று
சூப்பர் மார்க்கெட்
வந்த பின்னர்
கண்ணில் பட்டதெல்லாம்
பையினுள் வந்தது..

பணத்தையும் பதம் பார்த்தது..

பெட்டிக்கடை பூட்டிக்
கிடக்குது, இந்த சூப்பர்
மார்க்கட்டு ஓங்கி நிக்குது..

சூப்பர் மார்க்கட்..

பாக்கெட்டில் அடைத்து வைத்து
பார்ப்பவரை கவர வைத்து
பட்ஜட்டை மீற வைக்குது, இந்த
பிளாஸ்டிக் பணம் பதற வைக்குது..

சூப்பர் மார்க்கட்டு, இது
என்றுமே வைக்கும் நமது
சேமிப்புக்கு பெரும் வேட்டு..

பிக் பஜார் கவுண்டர் வரிசையில்
கால் கடுக்க நிற்கும் போது எழுதியது..

அன்பன், ஆர்.வீ. பாலா..
13.12.16..

அகல்



அகல் விளக்கினில்
எண்ணையை இட்டு
அண்ணாமலையானை
எண்ணத்தில் நிறுத்தி
இல்லந்தோறும் தீபமேற்றி
இனிய மாலையில்
இல்லாள் வழிபடவே
இலக்குமி வாசம் என்றும்
அகலாது காத்து நிற்கும்..





दीप स्तम्भ




नमक की पानी लगने पर भी
चमक कभी कम नहीं होती है
सर्वोत्तम रूप से समुद्र सैर की
सहायता ये रोज़ करती है ।

दूर दूर तक रोशनी देकर
जमीन से जहाज को बचाती है
रात भर में रखवाली करके
रास्ता साफ बताती है ।

समुंदर के तट पर हमेशा
लहरें बहुत गंबीर होती हैं
लहरों के साथ ही खड़ा
कम्बा बडा लंभा होती है ।

जहाज चालकों को
जमीन से दिशा दिखाकर
जबर्दस्त रूप से
ज़िंदा ये खड़ी है ।

रात की पूरे अंधेरे में
आँख बंद नहीं करती है
फिरती हुयी इसकी उजाला से
मुसाफिर खश हो जाते हैं ।







நடராஜர் கவிதைகள்



எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன்,
ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன்.


அன்பன், ஆர். வீ . பாலா
குருவைய்யர் தெரு
சிதம்பரம்.

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது:


https://drive.google.com/open?id=1udnDWZzb8pqv5mgHoKXgRg_I8DB4eBV4

ஒரு பக்க சுய முன்னேற்ற கதை

ரமணா மாமா

கணேஷ் மாமா

ஸ்ருதிலயா

ஒரு பக்க கதை " அடிமை "

ஒரு பக்க கதை - " சும்மா "

இலட்சுமி அத்தை

தில்லி பாட்டி

வாழ்க்கை

குருவடி சரணம்

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...