Search This Blog

Thursday, May 30, 2019

புகையிலை ஒழிப்பு தினம்

புகையிலை ஒழிப்பு தினம்

புகையை உள்ளிழுத்து
நுரையீரலுக்குள் நிரப்பி
மூக்காலும் வாயாலும்
வெளித் தள்ளுவர்.

கண்ணிமை மூடி கச்சிதமாய்
இரு விரல் இடுக்கில் செருகி
வாய்க்குள் வைத்தெடுத்து
புகை விடுவர்.

தானும் சீரழிந்து தனது
பக்கத்திலும் புகை விட்டு
சுற்று வட்டாரத்தை இவர்
நாசம் செய்வர்.

நெருப்புத் துண்டு இழுப்போர்
தனக்கே கொள்ளி வைப்பதை
எந்நாள் உணர்வரோ அந் நாள்
அவரது நன்னாளாகும்.

புகையிலையின் பிள்ளைகள்
பெயர் உருவம் பலவும் பெற்று
பாக்கெட்டில் அடைபட்டு இவர்
பாக்கெட்டில் அமர்ந்திருக்கும்.

மிக அதிக வரியும் விதிக்கனும்
மோசமான நிலை உணர்த்தனும்
பொது இடங்களில் புகைப்போரை
கண்டதும் கைது செய்யனும்.

புகையிலையில்லா புவி வேண்டும்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
31.05.2019

பாவம் நம்ம நேசமணி

பாவம் நம்ம நேசமணி

இன்றைக்கும்
வயிறு வலிக்க
சிரிக்க வெக்கறது
தொலைக் காட்சியில்
அவரது நகைச்சுவை

பல மொக்கை
படத்துக்கெல்லாம்
முட்டுக் கொடுத்து
ஜெயிக்க வெச்சது
அவரது நகைச்சுவை

தன்னைத் தாழ்த்தி
அசிங்கப்பட்டு நடித்து
நம்மையும்  திரையில்
பிரதிபலித்து காட்டினது
அவரது நகைச்சுவை

எத்தனையோ நடிகர்கள்
காமெடியைத் தொட்டாலும்
கிட்டே நெருங்க முடியாமல்
தனித்து இன்றும் நிற்பது
அவரது நகைச்சுவை

மிகப்பெரிய வெற்றிடம்
இன்னும் நிரம்பவில்லை
மதுரையம்பதி மைந்தனே
மீண்டு(ம்) நீர் வர வேண்டும்
சிரிப்பு மாத்திரை தர வேண்டும்

சுத்தியலால் அடிபட்ட நம்ம
காண்ட்ராக்டர் நேசமணி
விரைவில் குணமடைந்து நம்
வயிறு வலிக்க சிரிப்பும் தர
கூட்டாகப் பிரார்த்திப்போம்.

😁😁😁😂😂😂😆😆😆

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
30.05.2019

Tuesday, May 28, 2019

குடும்பத் தலைவி

குடும்பத் தலைவி

கையில் வளையலணிந்து
கால் வெள்ளி கொலுசோடு
கருங்கூந்தல் பின்னலிட்டு
காதில் ஜிமிக்கியும் போட்டு
நேர் வகிடெடுத்து நன்றாய்
நெற்றி நிறைய குங்குமமும்
மேனியெங்கும் மஞ்சள் பூசி
தழைய தழைய சேலை கட்டி
ரெட்டைவட மூக்குத்தியுடன்
மல்லிச்சரம்  மணக்கச் சூடி
நீர்த் தெளித்து கோலமிட்டு
சுத்தமாக வீட்டைப் பேணி
வாய்க்கு ருசியாக அறுசுவை
உணவையும் சமைத்து விட்டு
குழந்தைகளை வளர்த்து கூட
கணவனையும் உபசரித்து
வயர் கூடை கை வேலையென
சின்னதாக தையுலும் கற்று
பகலிரவென அயராது அவள்
பம்பரமாய் இயங்கிடுவாள்
கண்ணுக்கு இமை போல
காலமெல்லாம் காத்திடுவாள்.

சும்மா ஒரு அதீத கற்பனையே 😎

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.05.2019

Friday, May 24, 2019

உலக சகோதர தினம்

உலக சகோதர தினம்

சகோதரனாகப் பிறந்தவன்
எப்பவும் தன் சம்சாரத்துடன்
சுமூகமாகவே இருப்பான்.

அவர்கள் படும் வலி தெரியும்
அனுசரித்து செல்லக் கூடிய
வழியும் தெரியும்.

இரண்டாவது தந்தையாக
இல்லத்தை வழி நடத்தும்
ஆண்மகனும் இவனே.

உடன் பிறந்த சகோதரன்
உடனிருந்தால் ஒவ்வொரு
பெண்ணும் மஹாராணியே.

ஒவ்வொரு ஆண் நண்பனும்
சகோதரனாகவேப் பழகினால்
அப்பெண்ணிற்கு பாதுகாப்பே.

அண்ணனோடு பிறந்த தம்பி
தம்பியோடு பிறந்த அண்ணன்
முதலில் நண்பர்களே ஆவர்.

தம்பி உடையான் படைக்கஞ்சான்
அண்ணன் உடையான் எதற்குமே
அஞ்சான்.

உலக சகோதர தினத்திற்காக
எழுதிய வரிகள் .....

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
24.05.2019

Thursday, May 23, 2019

தமிழா !!

தமிழா !!

மல்லாந்து
துப்பும் எச்சில்
நம் மீதே விழும்.

மத்திய ஆட்சி
எதிர்ப்பு என்றும்
நம்மையே சுடும்.

உலகமே போற்றும்
உத்தம தலைவன்
உன் பார்வையில் ??

பழைய எச்சங்கள்
இ(ற)ருக்கும் வரை
நீ வேர்வையில் ...😔

தமிழா !!!

என்று உணர்வாய் ?
சிந்தை தெளிவாய்.

விசனத்துடன் பாலா 😧😭

தேர்தல் முடிவுகள்

தேர்தல் முடிவுகள்

தேர்வு முடிவுகள்
வீட்டைப் பாதிக்கும்

தேர்தல் முடிவுகளோ
நாட்டைப் பாதிக்கும்.

ஒட்டு மொத்த பாரதமும்
ஓரணியில் !!!

ஒதுங்கி  நாம் தனியே
சீரணியில் !!!

நம் தாய் நாட்டின்
திருவடி தமிழ்நாடு

நாம் தனித்து இருந்தால்
கிடைக்குதடி திருவோடு !!

இந்தியனாக இன்று சந்தோஷம்
தமிழனாக சற்றே ....... !!

விசனத்துடன் பாலா 😧😧
23.05.2019

Sunday, May 19, 2019

கண்ணே !!

கண்ணே !!

விழியோரத்தே
வழியும் நீரினை
வியர்வையென்று
பொய்யுரைப்பேன்.

உவர்ப்பு நீரை
துடைத்து விட்டு
உலகோர் மத்தியில்
உலவிடுவேன்.

வீணாய்ப் போன
காதலைப் புரிந்து
விட்டத்தை வெறித்து
நான் பார்க்கின்றேன்.

வருத்தம் சுமந்து
விரகத்தில் மடியும்
வேதனையைத் தான்
எவர்க்குச் சொல்வேன்.

வெற்றுப் பக்கத்தில்
விடை இருக்காது
உற்று பார்க்கையில்
வழி கிடைக்காது.

கல்யாணமென்பது
கனவாய் ஆனது
காதல் கொண்டதே
கடைசியாய் நின்றது.

ஆசை கொண்டது
அற்பமாய் முடிந்தது
அனுதினமுமெனக்கு
அவஸ்தையானது.

அனைத்தையும் நீ
மறைத்துப் போட்டு
அந்நியனொருவன்
கரம் பிடித்தாய்.

அம்பிகாபதியாய்
காதலைச் சுமந்து
வாழும் நிலைக்கு
வரம் கொடுத்தாய்.

ஒவ்வொரு முறையும்
காணும் போதெலாம்
குறு குறுக்க பார்த்து
கொல்லுகிறாய்.

வெவ்வேறு தருணமும்
பேசிய பொழுதெலாம்
துரு துருவென சிரித்து
கொள்ளுகிறாய்.

சும்மா ஒருதலைக் காதல் கவிதை 😎

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
19-05-2019

நடிகனே !!

நடிகனே !!

கைது செய்தால்
கலவரம் வெடிக்கும் !!!

எழுதித் தந்ததை
படித்து நடித்தவனே
இன்னும் யார் உன்னை
மறைவில் இயக்குகிறார் ?

கூத்தாடிக்கு சேரும்
கூட்டம் ஒரு நாளும்
கோட்டைக்கு அவனை
கூட்டிச் செல்லாது.

மீசையை முறுக்கியும்
மொத்தமாய் வழித்தும்
முக பாவம் மாற்றுவாய்
அகம்பாவமும் காட்டுவாய்.

புரியாத மாதிரி பேசியே
மக்களை குழப்புகின்ற நீ
முன்னுக்கு பின் கூறியே
மீடியாக்களிடம் மழுப்புவாய்.

நல்ல வேளை நீ இப்போது
அரசியலில் இறங்கியதால்
உன்னுடைய அசல்  முகம்
அம்பலமாயிற்று.

சொந்த வாழ்க்கையில்
சேற்றைக் கண்டவன்
பொது வாழ்க்கையில்
சோற்றையா காண்பான் ?

இன்னுமோர் காமராஜருக்கு
எத்தனை காலம் தான் நமது
தமிழகம் காத்துக் கிடக்கும் ?

வருத்தத்துடன் எழுதியது...

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
19.05.2019

அனுஷ பெரியவா

அனுஷ பெரியவா

துறவுக் கிலக்கணமாய்
தரணியில் அவதரித்த
அத்வைத ஆதி சங்கரா

நூறாண்டுகள் வாழ்ந்து
நியம நிஷ்டைகள் காத்த
அத்வைத ஆதி சங்கரா

ஜாதி மத பேதம் இன்றி
சகலரையும் ரக்ஷித்த
அத்வைத ஆதி சங்கரா

சந்நியாச தர்மத்தை
சத்தியமாய் அனுஷ்டித்த
அத்வைத ஆதி சங்கரா

வேதமும் தழைத்தோங்க
வேள்விக்கும் வழி செய்த
அத்வைத ஆதி சங்கரா

வந்து சேர்ந்த பக்தர்களின்
வாட்டத்தை துடைத்த குரு
அத்வைத ஆதி சங்கரா

காற்றை மட்டும் சுவாசித்து
கடுமையாக விரதமிருந்த
அத்வைத ஆதி சங்கரா

காலமெலாம் காலடியால்
பாரதத்தை வலம் வந்த
அத்வைத ஆதி சங்கரா

சிவ விஷ்ணு ரூபம் நீ
காமாஷியின் அம்சம் நீ
அத்வைத ஆதி சங்கரா

சிந்தையில் உனையிருத்தி
செய்யும் செயல் ஜெயமே
அத்வைத ஆதி சங்கரா

அனுஷ நன்னாளில்
மஹா பெரியவா சரணம் 🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
19.05.2019

Friday, May 17, 2019

வார இறுதி சிறப்பு கவிதை

வார இறுதி சிறப்பு கவிதை

விடுமுறை விட்டபின்
ஊருக்குச் செல்லும்
சின்னப் பையனாய்
எனை உணர்கிறேன்.

விருவிருவென்று
வாரத்தின் நாட்கள்
திங்களில் தொடங்கி
வெள்ளியில் முடிந்தது.

வேலை செய்யவும் இஷ்டம்
வீட்டில் இருக்கவும் இஷ்டம்
தொடர்ச்சியாய் இருந்தால்
இரண்டிடத்திலும் கஷ்டம்.

தொய்வில்லாது பணி புரிய
ஓய்வு கண்டிப்பாய் வேணும்
மலர்ச்சியுடன் இருக்க சற்று
சாய்வு அவசியம் வேணும்.

மனதளவில் குழந்தையாக
உடலளவில் இளங்குமரனாக
மதிநுட்பத்தில்  அறிஞனாக
உயர்வாக இருக்க வேணும்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
17.05.2019

நவீன காதல்

நவீன காதல்

உயிருள்ள ஓவியமாய்
உள் மனதில் நீ இருக்க
நேரில் ஏனோ பார்க்கத்
தோணவில்லை.

உன்னுள்ளே நானிருக்க
என்னுள்ளே நீ யிருக்க
நமக்கு இடையே என்றும்
தொலைவில்லை.

கவர்ச்சியாலான காதலும்
காதலைக் கடந்த காமமும்
காமத்தாலான குரோதமும்
கண்டிப்பா யிங்கில்லை.

காற்றொலியிலும்  கூட
குரலையே கேட்கிறேன்
கண் மூடிக் கிடக்கையிலும்
கனவில் நான் பார்க்கிறேன்.

அம்மாவைப் பிடிக்கும்
ஆண்டவனைப் பிடிக்கும்
அது போல தான் எனக்கு
எப்பவுமே உனைப் பிடிக்கும்.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

என்றும் அன்புடன்.......

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
17.05.2019

Tuesday, May 14, 2019

நடிகனே !!

நடிகனே !!

யாரிடம்
காசு வாங்கி
கூவுகின்றாய் ?

எழுபதாண்டுகளைக்
கடந்த ஓர் கொலைக்கு
மதச்சாயம் பூசுகின்றாய்.

நேற்றும் முன் தினமும்
நடந்த தீவிரவாதத்துக்கு
ஏனோ மெளனிக்கிறாய்.

இந்து மதத் துவேஷத்தை
திரைப்படத்தில் காட்டிய நீ
தெருவிலும் துவக்கியுள்ளாய்.

சேற்றில் எறிந்த கல்
சேதாரம் இல்லாமல்
உன்னிடமே சேருமய்யா.

சேர்த்த புகழ் யாவும்
க்ஷண நேரத்திற்குள்
உம்மை விலகு மய்யா.

விருமாண்டியே !!!

உமது விளையாட்டை
வெள்ளித் திரையோடு
நிறுத்திக் கொள்ளும்.

வீதிக்கு கொண்டு வந்து
அசிங்கப் பட வேண்டாம்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
15.05.2019

Saturday, May 11, 2019

தாயே வணக்கம்

தாயே வணக்கம்

ஆய் எடுத்த
தாயை நீயும்
அழ வைக்காதே

காய் கனிகளை
ஊட்டி விட்டவளை
கண் கலக்காதே

பெரிசானாலும்
அவளுக்கு நாம
சின்னஞ்சிறுசு தான்

பெத்தவளுக்கு
எப்பவும்  ரொம்ப
பாசம் அதிகம் தான்

பத்து புள்ளைங்க
பெத்தாக் கூட அவ
புலம்பிட மாட்டா

பாத்து பாத்து
வளர்க்கவும் அவ
மறந்திட மாட்டா

தாயைப் போல
அனுசரனையா
தாரம் வேணுமே

வாழ்க்கைக்கு
அதுவே பெரும்
அச்சாரம் ஆகுமே.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
12.05.2019

அன்னையர் தினம்

அன்னையர் தினம்

ராப் பகலா
கண் முழிச்சு
ஆத்தா வளர்த்தா

ருசிக்க ருசிக்க
சமைச்சு போட்டு
ரசிச்சு வளர்த்தா

கல்யாணத்த
ப்ண்ணிக்கிட்டு
கழட்டி விடாதே

கோவில் குளம்
சுத்தினாலும்
பாவம் விடாதே

பத்து மாசம்
சுமந்தவளை
பந்தாடாதே

பாத்து பாத்து
வளர்த்தவளை
புறந்தள்ளாதே

அப்பா கிட்ட
எப்பவும் அவ
தூது போவாளே

அவரடிச்சாலும்
முதலடியை தன்
முதுகில் ஏற்பாளே

முந்தானையில்
முடிச்சுகிட்டு நமை
தூங்க வெச்சாளே

முழு தூக்கத்தை
எப்பவும் அவள்
மறந்து போனாளே

அம்மா போல
உறவில் சொல்ல
யாரும் இல்லையே

அவளை மறந்தா
துறவில் கூட
மதிப்பும் இல்லையே.

அன்னையர் தினத்தில்
அவரடி பணிந்து எழுதியது.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
12.05.2019

Sunday, May 5, 2019

அன்றும் இன்றும்

அன்றும் இன்றும்

நேரில் பார்ப்பதை விட
நெட்டில் பார்ப்பதிலே
சுவாரஸ்யம் அதிகம்.

எல்லைகளைக் கடந்து
எங்கோ ஒரு மூலையில்
காத்து கிடப்போம்.

ஆசை கொண்டவரை
ஆன்லைனில் பார்த்தே
ஆனந்தமடைவோம்.

மென்பொருளில் பேசுவோம்
மெஸேஜ் போட்டு பேசுவோம்
மெளன மொழியில் பேசுவோம்.

இரவுப் பொழுதில் இமை மூடி
இசையோடு கழிந்த காலங்கள்
இப்போதோ இன்டர்நெட்டோடு.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
05-05-2019

விரகமும் விரதமும்

விரகமும் விரதமும்

உறவாமல்
இருந்தால்
விரகமாகும்

உண்ணாமல்
இருந்தால்
விரதமாகும்

சிற்றின்ப
சிந்தனை
விரகமாகும்

பேரின்ப
சிந்தனை
விரதமாகும்

பிரிந்து
இருப்பது
விரகமாகும்

புரிந்து
இருப்பது
விரதமாகும்

ஆடவரை
நினைப்பது
விரகமாகும்

ஆண்டவனை
நினைப்பது
விரதமாகும்

கட்டிலை
நினைப்பது
விரகமாகும்

கடவுளை
நினைப்பது
விரதமாகும்

விரகமிருந்தால்
விரதமெதற்கு
விரதமிருந்தால்
விரகமெதற்கு ?

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ பாலா
05.05.2019

நடராஜா

நடராஜா

ஒரு முறை சிதம்பரம்
வாருங்கள் எங்கள்
சபாபதியை தரிசித்து
பாருங்கள்.

உயர்த்திய கையால்
உமை இழுப்பான் நம்
உயிருள்ள வரைக்கும்
வழி கொடுப்பான்.

தூக்கிய திருவடியை
தரிசிக்கவே தினமும்
தேடியே  வருவோர்
தில்லையிலே.

ராஜாதி ராஜனவன்
நடராஜனாம் அருகே
கோவிந்தராஜனுடன்
இருப்பவனாம்.

நான்மாட வீதிகளை
வலம் வருவோம் நம்
நாயன்மார் துதித்தவனை
வழிபடுவோம்.

ஆண்டிற்கு இரு முறை
வலம் வருவான் நம்மை
ஆட்க்கொண்டு அருளி
நலம் தருவான்.

சம்போ மஹாதேவா என
கூறிடுவோம் சிதம்பரம்
சித்ஸபேஸன் திருவடியைப்
பற்றிடுவோம்.

நடராஜா நடராஜா நடராஜா !!

திருச்சிற்றம்பலம்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
05.05.2019

Thursday, May 2, 2019

கோடை விடுமுறை

கோடை விடுமுறை

காபியா
டீயா என
யோசித்து
முடிப்பதற்குள்
நேரம் கடந்து
விடுகின்றது.

இரண்டுமே
சுடுநீரின்
வேறுபாடு
இருந்தும்
தயாரிப்பில்
முரண்பாடு

தண்ணீராய்
டிகாஷனைக்
காணும் போது
வெந்நீரையே
குடிக்க மனதில்
தோணும்

ஏலத்தை
சேர்ப்பதா
இஞ்சியை
போடுவதா
முடிவுக்கு வர
முடிவதில்லை

அவளிருந்த போது
ஐயம் வந்ததில்லை
அசதியாய் வரும் நேரம்
அவளை மறப்பதற்கில்லை.

கோடை விடுமுறையே
நீ முடிவது எப்போது ?

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
02.05.2019

Wednesday, May 1, 2019

பிரதோஷம்

பிரதோஷம்

பித்தனாய் உனைப் பாட
பெருமானே அருள் புரிவாய்

பக்தனாய் அடி பணிய
பரமசிவனே  அருள் புரிவாய்

நித்தமும் சரணடைய
நீலகண்டா அருள் புரிவாய்

நியமத்துடன் பூசிக்கவே
நமச்சிவாயா அருள் புரிவாய்

உருகி உருகி உனைத் துதிக்க
உமாபதியே அருள் புரிவாய்

உள்ளத்தை ஒப்படைத்தேன்
ஓங்காரமே அருள் புரிவாய்

சர்வமும் நீயே என்று
சபாபதியே சரணடைவன்

சங்கடங்கள் தீர்த்து வைத்து
சர்வேஸ்வரா ஆட்கொள்வாய்

நடராஜா  நடராஜா வென
நாமஞ்சொல்லி தொழுதிடுவேன்

நாயன்மாராய் எனை நினைத்து
நின் திருவடியில் இருத்திடுவாய்

திருச்சிற்றம்பலம் 🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வி. பாலா
02.05.2019

வேண்டாமே....

வேண்டாமே....

காணாத கண்ணிற்கு
கவிதையும் வேண்டாம்
கேட்காத காதிற்கு நற்
பாடலும் வேண்டாம்

அழையாத இடத்திலே
நுழையவும் வேண்டாம்
அன்பில்லா உறவோடு
குழையவும் வேண்டாம்

மதியாத மாந்தரோடு
உறவிட வேண்டாம்
மாறத புன்னகையை
இழக்கவும் வேண்டாம்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
01.05.2019


நல்லது எது

நல்லது எது

தெளிவில்லா
சிந்தனையை
துறப்பதுவே
நல்லது

துணிவில்லா
காரியத்தை
தவிர்ப்பதுவே
நல்லது

வாயில்லா
ஜீவன்களை
நேசிக்க
நல்லது

நோயில்லா
வாழ்வுதனை
போஷிக்க
நல்லது

பண்பில்லா
மாந்தர்களை
விலக்குவது
நல்லது

அன்பில்லா
உறவினையே
ஒதுக்குவது
நல்லது

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
01.05.2019

உழைப்பாளிகள்

உழைப்பாளிகள்

ஆலைக்கு உண்டு விடுப்பு
அடுப்புக்கு ஏது விடுப்பு ??

ஊதியம் பெறாத
ஒரே உழைப்பாளி
இல்லத்துள்ளிருக்கும்
உணவின் படைப்பாளி

ஆண்டு முழுமைக்கும்
அடுப்பங்கரையே ஆபீஸ்
பிரமோஷனும் இல்லை
பெரிய சம்பளமும் இல்லை

குட்டி சுட்டிகளும் கூட
கிண்டலடித்து மகிழ்வர்
உணவின் ருசிக்கு ஏற்ப
நையாண்டியும் செய்வர்

காரமும் உப்பும் இவர்க்கு
பேனா பென்சிலைப் போல
சரியாக இல்லா விட்டால்
சர்வமும் நாசமாகும்.

கணிப்பொறி முன்னமர்ந்து
தட்டச்சு செய்வதைப் போல்
குக்கரில் பருப்பினை வைத்து
காய்கறிகள் நறுக்கிடுவர்.

ஆண்டுக்கு ஒரு முறை தான்
அலுவலகத்தே அப்ரைஸல்
ஆனால் அடுப்பங்களையிலே
அனுதினமும் அப்ரைஸல்கள்.

ஊதியமும் கிடையாது
யூனியனும் கிடையாது
தொலைக்காட்சி பெட்டி
துணைக்கு உடனிருக்கும்

ஸ்ட்ரைக் செய்யாது நம்
ஸம்சாரம் இருப்பதாலே
ஸ்மூத்தாக வாழ்க்கையும்
ஓடுகிறது எனலாம்.

அனுசரணையான மருமகள்
மாமியாருக்கு கொடுப்பினை
அக்கறையான ஓர் மாமியார்
மருமகளுக்கு தக்க படிப்பினை

இவர்கள் இருவரும் இணைந்து
பணிபுரிகின்ற தொழிற்சாலை
என்றுமே லாபத்தில் இயங்கும்
கார்ப்பரேட் கம்பெனி போலாகும்.

ஆலைக்கு உண்டு விடுப்பு
அடுப்புக்கு ஏது விடுப்பு ??

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
01.05.2019

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...