Search This Blog

Monday, May 28, 2018

கோடை விடுமுறை

கோடை விடுமுறை

விடுமுறை என்றாலே
வீட்டில் விசேஷம் தான்

குட்டிச் சுட்டிகளுக்கு
கும்மாளமோ கும்மாளம்
நினைத்தபடி உறங்களாம்
நேரங்கடந்து எழுகலாம்..

வீட்டுப் பாடங்கள் இல்லை
வகுப்பு தொல்லையில்லை
வாய்க்கு நல்ல ருசியாக
வகையாக புசித்திடலாம்..

வெயிலில் திரிந்திடலாம்
வீதியில் அலைந்திடலாம்
நண்பர்களுடன் சேர்ந்து
நாள்முழுதும் சுற்றிடலாம்..

கல்லாங்காய் கிட்டி புல்லு
கண்ணாமூச்சி கோலியென
கபடி கிரிக்கெட்டும் சேர்த்து
காலத்தையும் ஓட்டலாம்..

பச்சை குதிரை
நொண்டி ஆட்டம்
நீச்சல் அடித்தும்
குஷிக்கலாம்..

உறவினர்கள் வீட்டிற்கு
உற்சாகமாய் போகலாம்
விருந்துகள் பல உண்டு
வாய் ருசிக்க மகிழலாம்..

அய்யகோ !!!!!

கோடை விடுமுறை
கூடிய விரைவில்
முடிவுக்கு வருகுதே
கவலையை தருதே..

இரண்டு மாதங்கள்
இன்பமாய் கழிந்தது
பத்து மாதங்கள் பின்
பாரமுடன் கழியும்..

வேலைக்கு சேர்ந்த பின்னே
விடுமுறை இருப்பதில்லை
வீட்டில் இருந்தாலும் நமக்கு
உற்சாகம் பிறப்பதில்லை..

எதையோ தேடியபடி
எதையும் இழந்தபடி
ஏமாற்றமாய் நகரும்
ஏகாந்த வாழ்க்கை..

குழந்தைகளே ! மாணவர்களே !

அனுபவித்து வாழுங்கள்
அனுதினமும் ரசியுங்கள்
கழிந்த நொடி மீண்டும்
திரும்ப வருவதில்லை..

ஆண்டராய்டு போனில்
அடைபட்டு இருக்காமல்
அக்கம் பக்கத்தாருடன்
அளவளாவி கூடுங்கள்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.05.18

Saturday, May 26, 2018

அம்மா

 அம்மா

எங்கே போய் விட்டாய்
நீ அம்மா ??

நீ இல்லாத நேரத்திலே
தினம் ஒரு போராட்டம்
புதுசு புதுசா கட்சிகள்
தினுசு தினுசா காட்சிகள்..

ஆலைக்கெதிரா
போர்க்கொடி
அரசுக்கெதிராவும்
போர்க்கொடி..

எதிர் கட்சிகள்
எதிரி கட்சிகளாகி
போராட்ட களத்தில்
கைகோர்த்து நிற்குது..

விலாசம் இல்லாத
வெட்டிப் பயலுகளும்
வீதிக்கு வந்து நித்தம்
போராடி வருகின்றனர்..

மறியல் நடக்காத
மாவட்டம் இல்லை
வம்போன்றும் காணாத
ஊரெதுவும் இல்லை..

இனம் புரியா கிளர்ச்சியும்
வகையறியா புரட்சியும்
தினந்தோறும் இங்கு
வாடிக்கையாகுது..

நேற்று முளைத்த காளான் கூட
கோட்டையின் கனவு காண்கிறது
தமிழனை முட்டாள் என நினைத்து
தேசத்தை பிரிக்க நினைக்கிறது..

அடங்கி கிடந்த தலைகளெல்லாம்
ஆட்டம் போட்டு அலைகின்றன
அம்மா நீ இல்லா துணிவில் இன்று
அட்டகாசம் செய்கின்றன..

தமிழகத்தை வழிநடத்த உனது
தம்பிகள் முயன்று வருகின்றனர்
தினமும் காணும்  சவால்களால்
தடுமாறித்தான் போகின்றனர்..

இரும்புக் கரம் கொண்டு
அடக்கி ஆண்ட இதயமே !!!

மெரினாவில் நடக்கும்
போராட்டத்தை சற்றே
துயில் களைந்து நீயும்
வெளியே வந்து பார்..

விழி பார்வையில் நீ
வழி நடத்தி வந்தாய்
வழி அறியாமல் இன்று
வலி சுமந்து உள்ளோம்..

கம்பீரமே !!!!

உனது அதிகாரத்தில் தமிழகம்
அன்று கட்டுப்பட்டு இருந்தது
இன்று நீ இல்லாத தருணத்தில்
வெட்டுப்பட்டு கிடக்குது..

கட்சித் தொண்டனாக
நான் இதை எழுதவில்லை
நின் நிர்வாகத் திறன் வியந்து
எழுத நினைத்தேன்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
27.05.18

Sunday, May 20, 2018

தலைநிமிர் தமிழா

தலைநிமிர் தமிழா

எத்தனை காலம் தான்
பழம் பெருமைகளை நீ
பேசிக்கொண்டு பொழுது
கழிப்பாய் தமிழா ??

இராஜராஜ சோழனும்
கரிகால் வளவனும்
ஆற்றிய பங்கு
அளப்பறியாதது..

கம்பனும் காளமேகமும்
அவ்வையும் கூத்தரும்
தமிழில் எழுதிட்ட  ஏடுகள்
படிக்க ஆயுசும் போதாது..

கட்ட பொம்மனும்
மருது பாண்டியரும்
பாளையங்கோட்டை
சிங்கங்கள்..

பாரதியும் வ.உ.சியும்
பாதி வாழ்க்கையை
சிறையில் கழித்து
பாரதம் காத்த வீரர்கள்..

அன்றைய காலத்தையே
அலசிக் கொண்டிருந்து
இன்றைய நாட்களை நீ
இழக்கின்றாய்..

அரசியல்வாதிகள்
ஆதாயம் காணவே
சாதியை முதலில்
கையாண்டனர்..

அற்பத்தனமாய்
இனம் வாரிப் பிரித்து
தமிழனை தனித்திட
முயலுகின்றார்..

பாரதத் தாயின்
ஒருதாய் மக்களை
மொழிவாரிப் பிரித்து
முடக்கச் செய்வார்..

அந்நிய கைக்கூலிகள்
திடீர் தமிழின தலைவர்கள்
அன்னை பாரதத்தை
பிரிக்க முனைகின்றனர்..

மவுசு குறைந்த சில
திரைத்துறையினரும்
கட்சிகள் துவக்கியே
குழப்பி விடுகின்றனர்..

திராவிட கட்சியின்
சூழ்ச்சியை புரிந்து
தமிழின மாயையில்
சிக்காது இரு..

வீண் பேச்சுகளை
வெட்டி புரட்டுகளை
புறந்தள்ளி விட்டு
போய்விடவும்..

நாளைய பாரதம்
நம் இளைஞர் வசமே
நயவஞ்சகர்களை நீ
எதிர்த்திடவும்..

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
துண்டு பட்டால் மாண்டு வீழ்வு

வாழ்க வளர்க !!!

ஜெய் ஹிந்த், வந்தே மாதரம்

💪💪💪💪💪💪💪

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
20.05.18

Friday, May 18, 2018

பதட்டம்

பதட்டம்

பதட்டத்தில் நாமும்
பயணம் செய்திட
பாதி உயிர் போய்
மீதி உயிர் வந்திடும்..

வீட்டில் பதட்டம்
வெளியே பதட்டம்
அலுவலகத்தில் பதட்டம்
அனைத்திலும் பதட்டம்..

பதட்டத்தில் எடுக்கும்
முடிவுகள் யாவுமே
பாரமாய் என்றும்
முடிவுறாது போகும்..

வியர்வையும் நா
வறட்சியும் சேர்ந்து
உடலை வறுத்தும்
உணர்வை இறுக்கும்..

கன்னத்தில் கை வைத்து
கைவிரலை பிசைதலும்
நகங்களை கடித்தலும்
பதட்டத்தை வெளிக்காட்டும்..

மாளாத வேதனையில்
மனமும் அல்லாடும்
மகிழ்ச்சி இல்லாமலே
மூளை செயலிழக்கும்..

தாமதிப்பதை தவிர்த்து
திட்டமிடுதலை துவக்கி
பதட்டத்தின் பயத்தினை
பந்தாடி விடலாம்..

நிதானம் என்னும்
நண்பனும் சேர்ந்திட
நிச்சயம் பதட்டத்தை
நில்லாது போக்கலாம்..

தைரியத்தை கூடவே
துணையிருத்தி நாமும்
தடுமாற்றத்தை அறவே
தகர்த்தெறியலாம்..

இயலாமையை
இல்லாது போக்க
இன்றே நம் மனதில்
இருத்தி கொள்வோம்..

குற்ற உணர்ச்சியும்
காழ்ப்புணர்ச்சியும்
பதட்டத்தை பெருக்கும்
நினைவிலே கொள்வோம்..

பதட்டமில்லா மனதும்
நடுக்கமில்லா பொழுதும்
தினந்தோறும் கிட்டிடவே
தியானமும் செய்வோம்..

பாலாவின் பதட்டத்தை
பக்கங்களில் கூற இயலாது..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
19.05.18

Thursday, May 17, 2018

ஸ்ரீமூலநாதமே

ஸ்ரீமூலநாதமே

ஒரு காலைத் தூக்கி
ஓங்கார வடிவத்தில்
ஓயாமல் ஆடுகின்ற
நடராஜா..

அடிமுடி காணவியலா
அகண்ட ஜோதியாகி
அண்டத்தில் வெளிவந்த
அண்ணாமலையே..

ஸ்ரீமூலநாதமே உன்
ஆதிமூலம், அதனுள்
சிவசக்தி ஸ்வரூபமாய்
இணைந்திருந்தாய்..

புலியும் பாம்பும்
தவமும் புரிந்திட
திருநடனமாடி இவ்
உருவம் கொண்டாய்..

அடியவர்க்கு அருளிட
அகமகிழ்ந்து உருகிட
ஆனந்த தாண்டவமும்
ஆடுகின்றாய்..

குஞ்சிதபாதத்தை நாம்
கோடி முறை கண்டாலும்
எப்போதும் தரிசிக்க நீ
ஏக்கம் வைப்பாய்..

சிவகாமியோடு சேர்ந்து
சிருங்கார நடனமாடும்
சபாபதியை சேவிக்க
சிதம்பரம் செல்வோம்..

நான்மாட வீதிகளை
நயமாக வலம் வந்து
நாயன்மார் வழிபட்ட
நடேசனைப் பணிவோம்..

ஆடிய பாதத்தை கண்டு
அனுபவித்து மெய்மறக்க
ஆயுசும் போதாது உனது
அடியவர்க்கு..

இலிங்க ரூபத்தில் இறைவா
நீ திவ்யமாய் இருந்தாலும் எம்
இதயத்தை ஆட்கொள்வது
நின் திருநடன ரூபமே..

அம்மைக்கு இடமளித்த ஐயனே
ஆலகால விடமுண்ட மெய்யனே
பிட்டுக்கு மண் சுமந்த பொய்யனே
பிறவா வரமருள்வாய் அப்பனே..

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

திருச்சிற்றம்பலம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
17.05.18

Tuesday, May 15, 2018

பாலகுமாரன்

பாலகுமாரன்

தமிழ் இலக்கிய உலகில்
சுஜாதாவும் பாலகுமாரனும்
தொட்ட உயரங்களை எளிதில்
சொல்ல மாளாது..

எழுத்துத் துறையிலும்
திரைத்துறையிலும் தம்
வார்த்தைகளை வடித்து
வானளவு உயர்ந்தவர்கள்..

எண்பதுகளில் பிரயாணத்தில்
இவர்களது படைப்பேடு இலாத
யாத்திரிகர்கள் எவரும் தமிழகத்தில்
இல்லை எனலாம்..

உணர்வுகளை உணர்ச்சியோடு
படைப்பினில் வார்த்தெடுத்து
உள்ளத்தைக் கொள்ளை கொல்லும்
ஒப்பற்ற மனிதர் இவர்..

பல புதிய எழுத்தாளர்களுக்கு
பயிற்சி அளிக்கும் பெட்டகமாய்
புத்தகங்கள் ஒவ்வொன்றையும்
முத்தாகப் பதித்தவர்..

சீரியல் பார்த்து இன்றைய மக்கள்
சிந்தனையைத் தொலைக்கும் நேரம்
சீரியசாக அன்றைய தலைமுறையினர்
இவரது படைப்பில் லயித்திருந்தனர்..

ஆன்மீகத்தில் அதிக நாட்டமுற்று
ஆழ்ந்தெழுதிய வரிகள் யாவும்
ஆலமரமாய் தமிழுக்களித்த
அன்பளிப்பெனவே கூறலாம்..

பல்துறையிலும் பங்களித்து
படைப்பாற்றலில் பிரகாசித்து
பல்கலைக்கழகமாய் விளங்கிய
பிதாமகன் இவர்..

மோனப் புன்னகையேந்தி
மெய்மறக்கும் வரிகளையிட்டு
மக்களனைவரையும் ஈர்த்த
மாமனிதர் இவர்..

எழுபத்தி ஒன்றில் மறைந்த
எழுத்துச் சித்தரே, உமக்கு
எங்களது இதயத்தில் எவரும்
எட்டாத இடம் உண்டு..

அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனைப் பிரார்த்திப்போம்..

😢😢😢😢😢😢

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
15.05.18

Sunday, May 13, 2018

ராஜாவின் இசை

ராஜாவின் இசை

நீண்டதொரு பயணத்தில்
வாகனத்தை ஓட்டுகையில்
தூக்கம் தழுவாத கண்கள்
வேண்டும்..

அலுவலகத்து அலைச்சலிலே
அயர்ந்துறங்க இரவினிலே
அமைதியான மனமும் இருக்க
வேண்டும்..

குடும்பத்து சிக்கலிலே
குழப்பத்தின் நடுவினிலே
கவலை மறந்திட நல்மனமும்
வேண்டும்..

எங்கே கிட்டும் இவையெல்லாம்
எவரிடம் கிட்டும் இவையெல்லாம்
எப்படி கிட்டும் இவையெல்லாம்
எதனால் கிட்டும் இவையெல்லாம்

ராஜாவின் இசையை
ரசித்துப் பாருங்கள்
ரம்மியமான சூழலை
உணர்ந்து பாருங்கள்..

களைப்பு தீர்ந்திடவும்
அலுப்பு மறைந்திடவும்
துடிப்பு ஓங்கிடவும் நல்
மருந்து இசையாகும்..

கண்ணை மூடி சற்றே
கணநேரம் கேட்டாலும்
காதின் உள்நுழைந்து
கவலை போகச் செய்யும்..

ஆயிரமாயிரம் பாடல்கள்
அவையும் அல்வா துண்டுகள்
ஆழமாய் மனதில் இறங்கி
ஆத்மாவை குளிர்ச் செய்திடும்..

இசையின் மூலமாக
இரத்த அழுத்தத்தை
இருதய ஓட்டத்தை
இயக்கும் ராஜன் அவன்..

இரைச்சலின் நடுவினில்
இசை வரும் வேளையில்
இன்னிசை கொடுக்கும்
இறைவன் ஆவான்..

சரிகமபதநி யை
சாதி மதம் கடந்து
சாமானியருக்கும்
சேர்த்தவராம்..

நாத்திகம் பேசும்
நரிகளின் நடுவே
ஆத்திகம் போற்றும்
அண்ணல் அவர்..

பழுத்த மரமான
பண்ணைபுரம்
பக்தி மணம் கமழும்
திண்ணைப்புரம்..

தேனமுத இசையினை
தந்து வந்த கரங்களால்
தெய்வீக இசையும் கூட
தர இயலும்..

திருவாசகம் நமக்கு தந்த
தெய்வம் இன்று நாலாயிர
திவ்யப்பிரபந்தமும் விரைவில்
தரவுள்ளது..

நோய் நொடியில்லாமல்
நூறாண்டு வாழ்ந்திட
ரமணரும் சங்கரரும்
அருள் புரிக..

இசைஞானியே
இன்னிசை கேணியே
இன்னும் பல பிறப்பு நீர்
எடுக்க வேண்டும்..

எங்கள் செவிகளுக்கு
என்றும் இனிய நல்
இசையினை வாரி
வழங்க வேண்டும்..

தமது கோடானு கோடி
ரசிகர்களில் ஒருவனாக....

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
13.05.18

அன்னையர் தினம்

அன்னையர் தினம்

தவம் புரிந்திட
தேவையில்லை
தனியாய் பூசிக்க
வேண்டியதில்லை..

தாயின் காலடி
மண்ணை எடுத்து
திருநீரென்று நாம்
இட்டுக் கொள்வோம்..

வேண்டிய செல்வமும்
வரமாய்க் கிட்டும்
தெய்வத்தின் அருளும்
தானாய் அமையும்..

எழும் போதும் கீழே
விழும் போதும் வாயில்
வரும் வார்த்தை அதுவே
அம்மா ஆகும்..

அம்மா பிள்ளை என
கூறிக் கொள்வதில்
ஆண்களுக்கு எப்பவும்
ஆயிரம் சந்தோஷம்..

தாயும் தாரமும்
இணங்கி இருந்திட
புண்ணியம் பலவும்
செய்திடல் வேணும்..

உதரத்தில் சுமந்து நமை
உலகிற்கு தந்தவளை
உயிர் உள்ளவரையிலும்
உடனிருந்து காப்போம்..

மாயக் கண்ணனும்
மண்டியிட்டு கிடந்தது
மாதா யசோதையின்
மடியினில் தானே..

ஆதிசங்கரரும் கூட
ஆர்யாம்பிகையை
அக்கினியில் இடவே
காலடிக்கு திரும்பினார்..

அம்மா என்று நாம்
அன்போடு கூறுவது
ஓம் என ஓராயிரம் முறை
கூறுவது போலாகும்..

அன்னையை போற்றுவோம்
அன்பினை பரப்புவோம்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
13.05.18

Saturday, May 12, 2018

குழந்தை

குழந்தை

கள்ளமில்லாத
குழந்தை ஆகனும்
கபடு சூதில்லாத
குழந்தை ஆகனும்..

காமம் கொள்ளாத
குழந்தை ஆகனும்
கர்வம் வாராத
குழந்தை ஆகனும்..

பொறாமையற்ற
குழந்தை ஆகனும்
பொய்யுரைக்காத
குழந்தை ஆகனும்..

அன்புக்கு ஏங்கும்
குழந்தை ஆகனும்
அழுது தீர்த்திடும்
குழந்தை ஆகனும்..

பணத்தை சேர்க்காத
குழந்தை ஆகனும்
பாசத்தை மறுக்காத
குழந்தை ஆகனும்..

வயது ஏறிலும்
குழந்தை ஆகனும்
வாழ்க்கை முழுமையும்
குழந்தை ஆகனும்..

கவலையை மறக்க
குழந்தை ஆகனும்
குவலய அமைதிக்கு
குழந்தை ஆகனும்..

கவிஞரின் பாடல் வரிகளில்;

******************************
குழந்தையும் தெய்வமும்
குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும்
மனத்தால் ஒன்று..

பிறந்து வந்த போது
நெஞ்சம் திறந்திருந்தது
அந்தப் பிள்ளையோடு
தெய்வம் வந்து குடியிருந்தது..

வயது வந்த பிறகு
நெஞ்சில் மயக்கம் வந்தது
அங்கு வாழ்ந்திருந்த தெய்வம்
கொஞ்சம் விலகிச் சென்றது..

பிள்ளைகளாய் இருந்தவர்தான் பெரியவரானார், அந்தப்
பெரியவர்கள் கோபத்தினால் சிறியவரானார்..

கள்ளமில்லா உள்ளத்தினால்
பிள்ளைகள் எல்லாம்
என்றும் கண்ணெதிரே
காணுகின்ற தெய்வங்களானார்..

********************************

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
12.05.18

Thursday, May 10, 2018

ஜடா விநாயகா

ஜடா விநாயகா

கும்மென்று கொலுவிருக்கும்
கணபதியை தரிசிக்க நாம்
குருவைய்யர் அக்ரஹாரம்
போக வேண்டும்..

ஜம்மென்று வீற்றிருக்கும்
ஜடா விநாயகரைக் காண
குருவைய்யர் அக்ரஹாரம்
போக வேண்டும்..

அழகான ஆனைமுகனை
அகங்குளிர காணவே நாம்
குருவைய்யர் அக்ரஹாரம்
போக வேண்டும்..

பிரம்மாண்டமாய் அமர்ந்திருக்கும்
பெரிய பிள்ளையாரைப் பார்க்க
குருவைய்யர் அக்ரஹாரம்
போக வேண்டும்..

தில்லையின் வடமேற்கில்
கோவில் கொண்டவனை காண
குருவைய்யர் அக்ரஹாரம்
போக வேண்டும்..

கிழக்கு முகமாய் வீற்றிருக்கும்
கணபதியைப் பணிந்திடவே
குருவைய்யர் அக்ரஹாரம்
போக வேண்டும்..

சாதி மதம் மொழி பேதம்
பார்க்காது கும்பிடவே
குருவைய்யர் அக்ரஹாரம்
போக வேண்டும்..

சகோதரத்துவமாய் அவன்
சன்னதியில் வழிபடவே
குருவைய்யர் அக்ரஹாரம்
போக வேண்டும்..

ஸ்ரீ சபாபதியை சேவிக்க
சிதம்பரத்திற்கு வாருங்கள்
ஆனைமுகனை ஆராதிக்க
அக்ரஹாரத்தினை நாடுங்கள்..

ஸ்ரீமத் ஜடா விநாயக மூர்த்திகி ஜெய்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன் சிதம்பரம் ஆர்.வீ. பாலா
10.05.18

ஜடா விநாயகா

ஜடா விநாயகா

நந்தியாவட்டை
பூ வைத்து நித்தம்
நாங்கள் உனை
வழிபட்டோம்..

சிவந்த செம்பருத்தி
மலர் கொண்டும்
ஐயனே அன்று
அர்ச்சித்தோம்..

சிறு வயதில் பக்தியுடன்
பூசித்த நாட்களெல்லாம்
சிந்தனையில் அலையிட்டு
பசுமையாய் வருகின்றதே..

வெண் வஸ்திரம் தரித்து
கருஞ்சிலையின் அழகோடு
கண்டவர்கள் மயங்க செய்யும்
கம்பீர கணபதியாம்..

அலங்காரம் கண்டவர்கள்
அகங்காரம் தொலைத்திடுவர்
அக்ரஹார அய்யனே உனை தம்
அகத்தினுள்ளே இருத்தி கொள்வர்..

மலர் கொண்டு பூசித்து
மனமார மகிழ்ந்திடலாம்
வெண்ணெய் காப்பும் சாத்தி
உளமார உருகிடலாம்..

விபூதியால்  அலங்கரித்து
உருக்கமாய் துதித்திடலாம்
சந்தன காப்பும் செய்து
சந்தோஷம் அடைந்திடலாம்..

எந்த அலங்காரமும் இல்லாது
ஏகாந்தமாய் பார்க்கையிலே
எல்லா இறை மூர்த்திகளையும்
என் ஐயனிடம் கண்டிடலாம்..

தீக்ஷித பெருமகனார்
திவ்யமாய் பூசிக்க எம்
தேகத்தை இங்கு வைத்து
தியானத்த்தில் உனை வைத்தோம்..

குருவைய்யர் அக்ரஹாரம்
கொலுவிருக்கும் கணபதியால்
குவலயத்தின் பாகத்திலே விரைவில்
கோலோச்சும் நாள் வருமாம்..

ஜடா விநாயக மூர்த்திகி ஜெய்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
09.05.18

Wednesday, May 9, 2018

நினைவலைகள்

நினைவலைகள்

முற்றுப் பெறாத வாக்கியமாக
ஒவ்வொரு நாளும் நீ எனை
கடந்து செல்கையில் நித்தமும்
நான் உணர்கின்றேன்..

கடந்த காலத்து கற்பனை உலகில்
கால் நூற்றாண்டு வாழ்ந்தவைகள்
கண்ணே உனை நினைத்தபடியே
கன்னத்தினை நனைக்கின்றேன்..

உன்னையே நான் நினைத்து
உள்ளுக்குள்ளே தித்தித்து
ஊரைச் சுற்றி வந்த நாட்கள்
உள்ளமெல்லாம் நிறைந்திருக்கு..

கல்லூரி முடித்த பின்னே
கை நிறைய சம்பளத்தில்
கண்ணே நீ என்னை விட்டு
கடல் கடந்து சென்றனையே..

ஆண்டுகள் சில கழிந்து
ஆவலுடன் நான் காத்திருக்க
திருமண பத்திரிக்கை தந்து
திகைப்படைய செய்து விட்டாய்..

விளக்கொளியில் நீ படிக்க
வீதியிலே காவல் கொண்டு
விடியும் வரை சேவகித்தவை
வீணாகப் போனதடி..

மணம் வீசிய பின்னே
தூர எறியப்படுகின்ற
கருவேப்பிலையைப் போலே
என்னை நீ தொலைத்தனையோ..

சைக்கிளில் உனையேற்றி
ட்யூஷனுக்கு விட்ட நாட்கள்
சத்தமின்றி என் நெஞ்சில்
ஈட்டியாய் தைக்கின்றதே..

குமுதம் விகடன் என்று
மாதப் பத்திரிக்கைகள்
கண்மணிக்கு பிடிக்குமென
காசு கொடுத்து வாங்கி தந்தேன்..

அத்தனையும் மறந்து விட்டு
அன்பு அத்தான் என்னை விட்டு
அமெரிக்கா மாப்பிள்ளையை
அழகே நீ தேடிச் சென்றாய்..

இப்பவும் உன் வீட்டில்
ரேஷன்  பொருட்கள் யாவும்
இளிச்சவாயனாக இன்னும்
வாங்கித் தருவேனடி..

உன் வீட்டின் கூடத்தில் உள்ள
உன் புகைப்படத்தை நோக்கிடவே
உயிரை சுமந்து கொண்டு வெறும்
உடல் கொண்டு திரிகின்றேன்..

எங்கிருந்தாலும் வாழ்க பாடல் காதில்
இனிமையாக இனிக்கும், ஆனால்
ஏமார்ந்து போன வலியோ மனதில்
கடுமையாக இருக்கும்..

மாமன் மகளைப் பறிகொடுத்த
மாடசாமியின் சார்பாக மடல்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
10.05.18

மலரே மடலே

மலரே மடலே

நீ எழுதும்
வரிகளுக்குள்
வார்த்தையென
வைத்து விடு..

நினைவு கொண்டு
எழுதுகையில்
நெஞ்சொடு எனை
சுமந்துவிடு..

தீராத மையாக நான்
தங்கமே துணையிருப்பேன்
பாராத உன்னிடத்தில்
பக்கங்களை நிரப்பிடுவேன்..

கூறாத வார்த்தையினை
கோலெழுத்தில் கூறி விடு
காணாத உன்னழகினை
கருத்தினில் நீ இட்டு விடு..

மலரே உன் மௌனத்தை
மடலெழுதி கலைப்பாயா
மனதில் நீ எனையிருத்தி
மகிழ்ச்சியிலே திளைப்பாயா..

கைப்பேசி இல்லாத காலம்
குறுஞ்செய்தி வாராத காலம்
தபால்காரர் வரவினை பார்த்து
வழி மேல் விழி வைத்த காலம்..

காதலியின் கடுதாசிக்கு
கால்கடுக்க ஏங்கி நிற்கும்
காதலனின் வரி(லி)கலாக
பதிவு செய்ய ஆசையுற்றேன்..

💐💐💐💐💐💐💐💐💐💐

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
09.05.18

Tuesday, May 1, 2018

உழைப்பாளர் தினம்

உழைப்பாளர் தினம்

உழைப்புக்கு ஏற்ற
ஊதியம் இல்லை
வியர்வைக்கு ஏற்ற
உயர்வும் இல்லை..

காக்கிச் சட்டைக்கு
சொந்தக்காரன், நிதம்
கடின உழைப்புக்கு
குத்தகைக்காரன்..

இவன் முதலாளிக்கு
என்றும் முதுகெலும்பு,
உழைத்து தேய்ந்திடும்
அவனது குறுத்தெலும்பு..

விடுப்பு எடுக்காது
வேலையும் செய்திட
அடுப்பும் எரிந்திடும்
இவன் இல்லத்தில்..

வேலைக்கு பங்கம்
வராமல் இருந்திட
சங்கம் அமைத்து
ஒன்றாய் இருப்பர்..

போற்றி வணங்குவோம்
தொழிலாளர்களை, அவர்க்கு
உரிய ஊதியத்தையும் அளித்து மகிழ்ந்திடுவோம்..

வாழ்க தொழிலாளர் நலம்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ.பாலா
01.05.18

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...