Search This Blog

Thursday, June 28, 2018

மணநாள் வாழ்த்து

மணநாள் வாழ்த்து

ஆண்டுகள் பல கடந்தும்
அலுக்காத உறவென்றால்
குடும்ப உறவினைத்தான்
கோடிட்டு குறிப்பிடுவேன்..

வெளியே சென்ற பின்னே
வீடு திரும்பியதும் முதலில்
நம் கண்கள் தேடுவது தமது
கட்டிய மனைவியைத் தான்..

கால் பாதி தாய் வளர்த்து
மிச்சத்தில் தாரம் வளர்த்து
முப்போதும் பெண் வளர்ப்பில்
கழிகின்றது ஆண் வாழ்க்கை..

மகிழ்ச்சியாக வாழ்ந்திடவே
மனைவியை நேசியுங்கள்
அலுவலக அழுத்தங்களை
அவளிடம் தவிர்த்திடுங்கள்..

அழுகுரல் ஒலிக்கும் வீட்டினை
அஷ்டலக்ஷ்மியும் நீங்கிடுவாள்
அரவணைத்து ஆனந்தமாய் வாழ
ஐஸ்வர்யமும் பெருக்கிடுவாள்..

அம்மையப்பனாய் நாம்
அருமையாய் வாழ்ந்திட
இல்வாழ்வும் சிறக்கும்
நல்வாழ்வும் பிறக்கும்..

பன்னிரு வருடங்கள் கழிந்தும்
பிணைப்போடு வாழ்கின்றேன்
மணநாள் வாழ்த்திற்க்காக நான்
மனமார பணிகின்றேன்..

💐💐💐🙏🙏🙏👏👏👏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.06.18

Wednesday, June 27, 2018

பொன்விழா மடல்

பொன்விழா மடல்

பஞ்சாட்சர படியேறும்
புண்ணிய மூர்த்தியே
பரமசிவனை பூசிக்கும்
பேரருள் கீர்த்தியே

தில்லைவாழ் அந்தணராய்
திவ்யமாய் பிறப்பெடுத்து
தூக்கிய திருவடியை நிதம்
தொழுதிடும் பாக்கியமே

சபாநாயக மூர்த்தியை
சிரத்தையாய் பூசிக்கும்
சந்ததியை சார்ந்தவரை
சிரந்தாழ்த்தி பணிகின்றேன்

உமாநாத தீக்ஷிதரின்
ஜெயேஷ்ட புத்திரரே
தானியம்மை கரம்பிடித்த
சிரேஷ்ட பொக்கிஷமே

பொன்விழா காணும்
பொது தீக்ஷிதர் ஐயா
பல்லாண்டு நீர் வாழ
பரமனருள் புரியட்டும்

ஆறுகால பூசை செய்யும்
ஐயப்பன் சபேசன் ஐயா
ஆடல் வல்லான் அருளோடு
ஆயுசு நூறு வாழ்ந்திடனும்.

💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

தங்கள் பாதம் பணியும்..
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
27.06.18

Tuesday, June 26, 2018

பாலகவி

பாலகவி

நித்தமும் நடக்கும்
விஷயங்களை நான்
கவி நடையில் சற்றே
வடிக்க நினைத்தேன்

உணர்வினை வெளியிட
உணர்ச்சியை பகிர்ந்திட
ஊடகமாய் கவிதையை
கையிலெடுத்தேன்

எதுகை மோனையிட்டு
எகத்தாளம் கூட சேர்த்து
சிந்தனையை சிதறடிக்க
சின்னதாய் ஆசையுற்றேன்

பைத்தியம் இவனென்று
படிப்போர் நினைத்தாலும்
பா எழுதும் என் ஆசையோ
பெறுகவே செய்கிறது

சிந்தையை நிறுத்தி
சிவனை நினைத்து
சரம்சரமாய் வரிகளில்
சஞ்சரிக்கலானேன்

அரசியல் சமூகம்
ஆன்மீகம் காதலென்று
அழகான வார்த்தைகளால்
அடுக்கிக் கொண்டு போனேன்

தட்டிக் கொடுப்போரும் கூடவே
தலையில் குட்டு வைப்போரும்
விமர்சனங்கள் செய்திடினும்
விமரிசையாய் எழுதலானேன்

எழுதிய கவிதைகளை
ஏட்டினில் பதிவிடவே
முயற்சியும் மேற்கொள்ள
முனைந்திட நானுள்ளேன்

ஊக்கம் பெறுவதினால்
உற்சாகமாய் படைப்பேன்
உள்ளத்து கற்பனையை
ஊற்றாக பெருக்கிடுவேன்

ஆசி கோரும் அன்பன்
சிதம்பரம் ஆர்.வீ. பாலா
26.06.18

தாமதம்

தாமதம்

தாமதத்திற்கு
காரணம் கேட்டால்
லேட்டாயிடுச்சு என்பர்

ஏன் லேட்டாச்சு என்று
கேட்டால் காரணத்தை
பலவிதமாய் சொல்வர்

வண்டி பஞ்சர்
பஸ் லேட்டு கூடவே
போக்குவரத்து நெரிசல்

பலவிதமாக நமக்கு
பொய்யுரைப்பதே
பழகிப் போய்விட்டது

பள்ளியில் தொடங்கிய
பழக்கம்  மெல்ல மெல்ல
அலுவலகத்திலும் தொடரும்

திட்டமிடாத நேரங்களும்
திணறுகின்ற சமயங்களும்
தாமதத்தின் காரணிகளாம்

விவேகமற்ற வேகமும்
வேகமற்ற விவேகமும்
தாமதத்தின் காரணங்களாம்

பயிற்சியெடுத்து பழகிட
முயற்சி செய்து பார்த்திட
தாமதத்தை தவிர்க்கலாம்

கூனிக்குறுகி வெட்கப்படாமல்
தாமதத்தை தவிர்த்து நித்தம்
தலை நிமிர்ந்து வாழுவோம்

தாமதமாக அலுவலகத்தில்
நுழைந்து திட்டு வாங்கிய
வேதனையில் வடித்தது 😢

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
26.06.18

Monday, June 25, 2018

சோமவார பிரதோஷம்

சோமவார பிரதோஷம்

ஈசனே

இடைவிடாது உனை
இறைஞ்சி நின்றும்
இறைவா ஏக்கம்
அகலவில்லை

நடராஜனே

நியமமாய் உனை
நெக்குறுக துதித்தும்
நெஞ்சம் நிறைவு
கொள்ளவில்லை

உமாபதியே

உள்ளும் புறமும்
அல்லும் பகலும்
வணங்கி நிற்பினும்
வேதனை குறையவில்லை

சதாசிவமே

சகலமும் நீ என்று
சர்வேஸ்வரன் உனை
சரணாகதி அடைந்தும்
சஞ்சலம் தீரவுமில்லை

சோமாஸ்கந்ததா

சோமவார பிரதோஷத்தில்
சாயங்கால வேளையிலே
சந்நிதியில் வலம் வந்தும்
சங்கடங்கள் தீரவில்லை

பரமேஸ்வரா

பாவம் தீர வேண்டி நிதம்
பணிந்து நானிருப்பேன்
பக்தன் பாலன் எனை நீயும்
ஆட்கொள வேண்டுகிறேன்..

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

திருச்சிற்றம்பலம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
25.06.18

Sunday, June 24, 2018

புகைப்படம்

புகைப்படம்

புகைப்படப் பதிவு
வேண்டாமென்றும்
வீடியோ எடுக்கக்
கூடாதென்றும்
ஆயிரம் முறைகள்
அடித்துக் கூறினும்
அயோக்கியர்கள்
அடங்குவதில்லை
நிழலைப் பார்த்து
நிம்மதி அடைந்து
நிஜத்தின் அருமையை
உணருவது இல்லை
செல்போன் ஒன்றை
செல்லமாய் அணைத்து
ஸ்வாமி படங்களை
க்ளிக்கிடுகிறார்கள்..

எங்கு போய் சொல்வது
எவரிடம் முறையிடுவது
எல்லாம் அவன் செயல்..

வருந்துகிறேன் எழுதுகிறேன்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
24.06.18

Friday, June 22, 2018

உண்மையாய் இரு

உண்மையாய் இரு

கை வலிக்க நித்தம்
கைப்பேசி குடைந்து
குறுஞ்செய்தி தட்டி
குதூகலம் அடைவோர்
வாட்ஸப் அரட்டையில்
வீணாகத் திரிவோர்
முகநூல் மோகத்தில்
முப்போதும் தொலைவோர்
எண்ணிக்கை பெருகுவது
வேதனையாய் இருக்குது
நல்லதும் கெட்டதும்
உண்மையும் பொய்யும்
ஒன்றையும் உணராது
வந்த மாத்திரத்தில்
வகையிலாது பகிர்வது
வேடிக்கையான செயல்
வருந்தத்தக்க செயல்
ஒன்றை பத்தாக்கி
புரளியிட்டு புரட்சியூட்டும்
பொய்யர்கள் மத்தியில்
கவனமுடன் இருக்கவும்
உதவி செய்யாவிடினும்
உபத்திரவமாய் இல்லாது
ஊருக்கு ஒத்துழைப்பாய்
உண்மையாய் வாழ்ந்திடுவோம்.

நினைத்தேன் எழுதுகிறேன்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
23.06.16

பகுத்தறிவு

பகுத்தறிவு

கடவுள் இல்லையென
காலத்திற்கும் கூவியவர்
கால பயம் வந்தவுடன்
கோவிலுக்கு போவதென்ன

பகுத்தறிவு பாசறையில்
பல்லாண்டு உட்கார்ந்து
பிதற்றி வந்த நேரத்திலே
கோவிலுக்கு போவதென்ன

ஆட்சியை கைப்பிடிக்க
அட்டூழியம் செய்தவர்கள்
அரங்கனை தரிசிக்க இன்று
கோவிலுக்கு போவதென்ன

பெரியாரின் பிள்ளைகளாய்
பொய்யுரைத்து திரிந்தவர்கள்
போகுமிடம் அறியாது இன்று
கோவிலுக்கு போவதென்ன

நாத்திக கதைகள் பேசியே
நாற்காலியைப் பிடித்தவர்கள்
நல்ல மனிதர்கள் போல இன்று
கோவிலுக்கு போவதென்ன

பார்ப்பன த்வேஷத்தில்
பல்லாண்டு கழித்தவர்கள்
அந்தணர்களின் ஆசி பெற
கோவிலுக்கு போவதென்ன

இந்து தர்மத்தை இவர்கள்
இழித்து தள்ளி வந்து அதே
இறைவனை வழிபடவே
கோவிலுக்கு போவதென்ன

சனாதன தர்மத்தை தொடர்ந்து
சறுக்க எண்ணி தோற்றவர்கள்
சலித்து சரணாகதி அடைந்து
கோவிலுக்கு போவதென்ன

அம்மணிகள் மூலம் இதுவரை
ஆண்டவனை தொழுதவர்கள்
ஆட்டம் முடியும் நேரம் தானாய்
கோவிலுக்கு போவதென்ன

பூரணகும்ப மரியாதை
பொட்டிட்டு நெற்றியிலே
பூ மாலை கழுத்துடனே
பகுத்தறிவு வீழ்ந்ததய்யா..

நினைத்தேன் எழுதுகிறேன்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
23.06.18

Thursday, June 21, 2018

உலக யோகா தினம்

உலக யோகா தினம்

தேகத்தை பேணிட
யோகத்தை பயிலுவோம்
ரோகத்தை தடுத்திட
யோகத்தை பயிலுவோம்

சிவனார் நமக்களித்த
சூக்ஷ்ம யோகத்தை
சிந்தையிலே இருத்தி
செம்மையாய் வாழ்வோம்

பதஞ்சலி வகுத்து தந்த
பயிற்சி முறைகளையும்
முறையாக செய்து வரின்
முக்காலும் நலம் பெறலாம்

மூச்சுப் பயிற்சியினை
முனைப்போடு செய்திடவே
மூச்சடங்கும் வேளையினை
மும்மடங்கு உயர்த்திடலாம்

ஆசனம் போடுவதால் நம்
ஆயுளும் நீடிக்கும் கூடவே
பிராணாயாமம் செய்து வர
பிராணன் நம் வசமிருக்கும்

கல்விச் சாலையிலே
கட்டாயமாய் யோகத்தை
கற்பிக்கச் செய்வதனால்
கவனத்தை ஈர்த்திடலாம்

மதத்தின் பெயர் கொண்டு
முட்டாளாய் எதிர்க்காமல்
யோகக் கல்வியினை நாம்
எல்லோரும் பயில வேணும்

மன அழுத்தம் நீங்கிட
தியானத்தில் அமரலாம்
அமைதியான வாழ்விற்கு
ஆசனப் பயிற்சி கொள்ளலாம்

சித்தர்களும் முனிவர்களும்
யோகியர்கள் பேணித் தந்த
பண்டைய பயிற்சியினை
பணிவோடு கற்றிடுவோம்

கலாச்சார சீரழிவில்
காலத்தை ஒழிக்காமல்
உடலுக்கு உரமளிக்கும்
உயர் கலையை கற்றிடுவோம்

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

💐💐💐💐💐💐💐💐💐💐

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
21.06.18

Wednesday, June 20, 2018

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

அம்பலத்தில் ஆடுகின்ற
ஆனந்த தாண்டவமே
அடியாரை ஆட்கொள்ளும்
அகிலாண்ட கோடி நாயகா..

மூலவரே உற்சவராகி
தேர் மீது உலாவும் வந்து
தொண்டர்க்கு அருளுவது
தில்லையம்பதியிலே தான்..

ஆனி உத்திரத்தில்
ஆருத்ரா மார்கழியில்
அகங்குளிற தரிசனமும்
தந்து ஆட்கொள்கிறாய்..

ராஜாதி ராஜனாக
வீதி வலமும் வந்து
பக்தர்களுக்கு நீயும்
அருளிச் செல்கிறாய்..

குறைகளை கேட்டறிந்து
கருணையோடு காத்திட
கனகசபையுள் மீண்டும்
எழுந்தருளி விடுவாய்..

இன்னும் ஆறு மாதம்
ஆகிவிடுமே அய்யனே
உன்னை நாங்கள்
அருகினில் தரிசிக்க..

அம்மை சிவகாமியே
ஆலகால விடமுண்ட நேரம்
அருட்கரத்தால் இறுக்கி
காத்தவளும் நீயே..

ஆடிக் களைத்த ஈசனை
அருகில் இருந்து நீயும்
அனுதினமும் சபையுள்
காப்பவளும் நீயே..

எத்துனை முறை தரிசித்தாலும்
ஏக்கம் கொண்டு தொழுகின்றோம்
எழு பிறப்பபெடுத்தாலும் ஐயனே
உனை தரிக்கும் பேறு வேண்டுமய்யா..

" பக்தனாய் பாடமாட்டேன்
பரமனே பரமயோகீ
எத்தினாற் பத்தி செய்கேன்
என்னை நீ இகழ வேண்டா
முத்தனே முதல்வா தில்லை
அம்பலத்த்தில் ஆடுகின்ற
அத்தாவுன் ஆடல் காண்பான்
அடியேனேன் வந்தவாறே "

------- அப்பர் ஸ்வாமிகள் -------

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

ஹர ஹர மகாதேவா 🙏🙏🙏🙏

நடராஜா சித்சபேசா சிவ சிதம்பரம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
21.06.18

நடராஜா நடராஜா

நடராஜா நடராஜா

கருவரையிலிருந்து
காட்சியளிக்க நீயும்
வா வா நடராஜா

கயிலை நாதனே
கனக சபை விட்டு
வா வா நடராஜா

அம்மையோடு
ஆடிக்கொண்டு
வா வா நடராஜா

ஆயுசுக்கும்
ஆராதிப்போம்
வா வா நடராஜா

அடியவர்க்கு
அருளிடவே
வா வா நடராஜா

அம்பலத்தை
விட்டு நீயும்
வா வா நடராஜா

வடம் பிடித்து
இழுக்கிறோம்
வா வா நடராஜா

வீதி வலமும்
புரிந்திடவே
வா வா நடராஜா

சிதம்பரத்து
நகரத்திலே
வா வா நடராஜா

செழுமையாக
வாழ்வும் இனிக்க
வா வா நடராஜா

சிவகாமசுந்தரி சமேத
சித்சபேச மூர்த்திகி ஜெய்..

* இன்று சிதம்பரத்தில் ரதோத்சவம் 💐💐

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
20.06.18

Tuesday, June 19, 2018

தில்லை பெருவிழா

தில்லை பெருவிழா

அதிகாலை வேளையிலே
அதிர்வேட்டு முழங்கிடவே
அம்பலத்தை விட்டு அவன்
வருகிறான்

அம்மை சிவகாமியோடு
ஆனந்த நடனம் போட்டு
ஆடியபடி முன்னும் பின்னும்
வருகிறான்

தில்லைவாழ் அந்தணர்கள்
தீபாராதனை காட்டும் வேளை
தேஜோமயமாய் தரிசனமும்
தருகிறான்

தீட்ஷிதர்கள் தோள் கொடுக்க
தள்ளுமுள்ளு கூட்டம் நடுவில்
தேர் மீது உலா வரவே அவன்
வருகிறான்

பிட்டுக்கு மண் சுமந்த நம்
பெருமான் பிராட்டியுடன்
பிரகாரத்தை வலம் வந்து
அருள்கிறான்

மக்கள் வெள்ளத்திலே
மங்கள வாத்தியம் ஒலிக்க
மகேஸ்வர மூர்த்தி இன்று
வருகிறான்

நம் குறைகளை களையவே
நான்கு வீதியும் உலா வந்து
நடராஜ ராஜன் பவனியும்
வருகிறான்

சாயந்திர நேரத்திலே
செம்படவர் சீரும் ஏற்று
சந்தோஷமாய் தேரடிக்கு
வருகிறான்

மாலை நேர பூசை ஏற்று
மண்ணாதி மன்னன்
மீண்டும் மாடவீதியை விட்டு
வருகிறான்

அம்மையோடு அய்யனும்
அடியவர்க்கு காட்சி தந்து
ஆயிரங்கால் மண்டபத்துள்
வருகிறான்

அர்ச்சனை முடிந்த பிறகு
ஆரத்தியும் முடிந்த பிறகு
அம்பலவன் அபிஷேகம்
ஏற்கிறான்

பாலும் தேனும் இளநீருடன்
பன்னீரும் சந்தனமும் கூடி
புஷ்ப அபிஷேகமும் அவன்
ஏற்கிறான்

பஞ்சமூர்த்தி வீதி உலா
பாங்குடனே முடிந்துமே
பக்தியோடு ரகசியத்திற்கு
பூசையும் முடிவடையும்

சர்வாபரணங்கள் தரித்து
சடைமுடி மேல் வில்வத்துடன்
சபாநாயகர் சிவகாமியுடன்
சித்சபைக்கு செல்கிறான்

விண்ணதிர வேட்டு சத்தத்துடன்
வேத கோஷங்களும் முழங்க
வஞ்சியோடு ஆடியபடி அவனும்
செல்கிறான்

பக்தர்களுக்கு அருள் வழங்கிய
பத்து நாள் பிரமோற்சவமும்
பிரமாதமாக கொடியிறக்கத்துடன்
நிறைவடையும்..

நாளை 20.06 தேர்த் திருவிழா
மறுநாள் 21.06 தரிசன உற்சவம்

தில்லைக்கு செல்வோம்
திருநடனம் காண்போம்

மானாட மழுவாட
மதியாட புனலாட
மங்கை சிவகாமியாட,
மாலாட நூலாட
மறையாட திறையாட
மறைதந்த பிரம்மனாட,
கோனாட வானுலகு
கூட்டமெல்லாமாட,
குஞ்சர முகத்தனாட,
குண்டலமிரண்டாட
தண்டைபுலியுடையாட
குழந்தை முருகேசனாட,
ஞானசம்பந்தரொடு
இந்திராதி பதினெட்டு
முனியட்ட பாலகருமாட,
நுரை தும்பை யறுகாட
நந்திவாகனமாட
நாட்டியப் பெண்களாட,
வினை ஓட உனைப்பாட
எனை நாடி யிதுவேளை
விருதோடு ஆடிவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனை ஈன்ற தில்லைவாழ்
நடராஜனே...

"" சம்போ மகாதேவா
ஹர ஹர மகாதேவா
நடராஜா நடராஜா
சித்சபேசா சிவ சிதம்பரம் ""

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

திருச்சிற்றம்பலம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
19.06.18

பூமாலையிட்டு பூசிப்போர் மத்தியில்
பாமாலை இட்டு பாலன் பூசிப்பான்.

Monday, June 18, 2018

ஆனித் திருமஞ்சனம்

ஆனித் திருமஞ்சனம்

ஆனந்தமாய் இருக்குது
அற்புதமாய் இருக்குது
ஆனித் திருமஞ்சனத்தை
அனுபவித்து தரிசித்திட
ஆயுசும் நிறைஞ்சு போகுது

அபிஷேகத்தை ஏற்றபடியே
அலங்காரத்தை பூண்டபடியே
ஆயிரங்கால் மண்டபத்தில்
அம்மையப்பனை தரிசித்திட
ஆயுசும் நிறைஞ்சு போகுது

அடியவர்கள் கோஷமிட
அந்தணர்கள் வேதமோத
ஆடி வரும் அவனழகினை
அகங்குளிர தரிசித்திட
ஆயுசும் நிறைஞ்சு போகுது

ஆழித்தேரின் மீதமர்ந்து
அம்பலவன் சிவகாமியுடன்
அசைந்தாடி வரும் போது
அனுகிரகிக்க தரிசித்திட
ஆயுசும் நிறைஞ்சு போகுது

அமுதினைக் கடையும் வேளை
ஆலகால விடத்தை உண்டவன்
அடி முடி காணவியலா ஜோதி
ஆனந்த தாண்டவத்தை தரிசித்திட
ஆயுசும் நிறைஞ்சு போகுது

சித்சபேசனை தரிசிக்கவே
சிதம்பரத்திற்கு வாருங்கள்
தாண்டவத்தை ரசித்திடவே
தில்லையம்பதிக்கு வாருங்கள்.

நடராஜா !! ஹர ஹர மகாதேவா !!
சித்சபேசா !! சிவ சிதம்பரம் !!

திருச்சிற்றம்பலம் !! திருச்சிற்றம்பலம் !!

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

 ** நாளைய தினம் சிதம்பரத்தில்
சிவகாமசுந்தரி சமேத ஆனந்த
நடராஜ மூர்த்தி ஆனித் திருமஞ்சன
தேர்த் திருவிழா.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
19.06.18

Saturday, June 16, 2018

தந்தையர் தினம்

தந்தையர் தினம்

இல்லறமெனும்
இயந்திரத்தை
இயக்குகின்ற
பொறியாளன்

இல்வாழ்க்கைத்
துணையோடு
இன்முகமாய்
நடத்திடுவான்

பழுதுபடும்
வேளையிலே
பயப்படாமல்
இருந்திடுவான்

குடும்பத்தை
கண்ணுக்கு
இமை போல
காத்திடுவான்

வீட்டிற்கு வெளியே
வீரனாயிருந்தாலும்
வெகுளித்தனத்தையே
விலாசமாய் கொண்டவன்

தாயையும் தாரத்தையும்
தராசு போன்று நிறுத்தி
சரிந்திடாமல் சரியாக
நிறுத்துகின்ற எஜமானன்

உத்யோகம் பார்த்து
பொருளீட்டும் வேளை
ஓயாமல் உழைத்து
பணம் தேடும் வேலை

காசு மிச்சப்படுத்துவதால்
கஞ்சனாக தெரிந்தாலும்
குடும்பத்தை நடத்துவதில்
கடவுளுக்கு நிகரானவன்

சொந்தம் பலரிருந்தாலும்
ஸ்நேகிதர் என்றிருந்தாலும்
சிரேஷ்டமான உறவென்பது
தந்தை என்பதேயாகும்

அப்பா என்றழைக்கும் போது
அந்நியோன்னியம் உண்டாகும்
அம்மா என்றழைக்கும் போது
அமைதியுண்டாகும்..

தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்

💐💐💐💐💐💐💐💐💐

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
17.06.18

இன்வெர்ட்டர்

இன்வெர்ட்டர்

மின்சாரம் தட்டுப்பட்டு
தடுமாறிப் போனேன்
மின்விசிறி சுழலாமல்
கடுப்பாகிப் போனேன்..

நிம்மதியாய் இரவினிலே
நித்திரையும் இல்லை
நட்டநடு ராத்திரியில் இந்த
கொசுக்களின் தொல்லை..

என்ன சோதனையோ என
ஏங்கிப் புலம்பி நானிருக்க
இன்வெர்ட்டர் இயந்திரம்
இல்லத்துள் வந்தது..

மின்சாரம் இல்லாத
மாதங்கள் பலவற்றையும்
சிறிய பிராயத்திலே நான்
மகிழ்ச்சியாய் கடந்ததுண்டு..

கைவிசிறி கொண்டே
காலந்தள்ளிய நாட்கள்
கனாவாக என்முன்னே
கைகொட்டி சிரித்தது..

காற்றுப் பற்றாக்குறையால்
என் மகனும் புரள்கையிலே
குளிரூட்டும் சாதனத்தை கூட
அறையில் வைக்க உள்ளேன்..

சுகத்திற்கு பழகிப் போய்
செலவுகள் பல செய்யும்
வாழ்வியல் மாற்றங்கள்
சகஜமாய்ப் போய்விட்டது..

இயற்கைக்கு புறம்பாக நாம்
செயற்கைக்கு அடிபணிந்து
மெல்ல மெல்ல வாழ்க்கையில்
வெகுதூரம் சென்று விட்டோம்..

தொடர் மின்சார நிறுத்தத்தால்
சம்சாரத்தை சமாளிக்க உடனே
இன்வெர்ட்டர் ஒன்றை வாங்கி
இல்லத்தினுள் வைத்துள்ளேன்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
17.06.18

தமிழ் மறை

தமிழ் மறை

மறையோதும் எண்ணம் கொண்டு
மனப்பாடம் செய்து பார்த்தேன், வேத மறையோதும் எண்ணம் கொண்டு
மனப்பாடம் செய்து பார்த்தேன்.

மனதிற்குள் பதியவில்லை, வரிகள்
மூளைக்கும் புரியவில்லை, எனது
மனதிற்குள் பதியவில்லை, வரிகள்
மூளைக்கும் புரியவில்லை.

பாடசாலையில் பயின்றிருந்தால்
வேதியராய் இருந்திருப்பேன், வேத
பாடசாலையில் பயின்றிருந்தால்
வேதியராய் நான் இருந்திருப்பேன்.

நான்மறையும் நாவாலே நித்தமும்
நன்றாக ஜெபித்திருப்பேன், நானும்
நான்மறையும் நாவாலே நித்தமும்
நன்றாக ஜெபித்திருப்பேன்.

கலக்கம் மிக கொண்டேன், எங்ஙனம்
கடவுளை நான் தொழுவேன், ஐயகோ
கலக்கம் மிக கொண்டேன், எங்ஙனம்
கடவுளை நான் தொழுவேன்,

ருத்ரமும் சமகமும் சூக்தமும் அறியாது
பூசனை எவ்வாறு செய்வேன், சிவனை
ருத்ரமும் சமகமும் சூக்தமும் அறியாது
பூசனை எவ்வாறு நான் செய்வேன்.

வடமொழி அறியாத வேதனையகல
தமிழ்மறையை பற்றிக்கொண்டேன்
வடமொழி அறியாத வேதனையகல
தமிழ்மறையை பற்றிக்கொண்டேன்.

தேமதுர தேவார திருவாசக வரிகளை
தினமும் நெக்குறுக படிக்கலானேன்
தேமதுர தேவார திருவாசக வரிகளை
தினமும் நெக்குறுக படிக்கலானேன்.

நால்வர் அருளிய பாக்கள் யாவும்
நன்மறைகளுக்கு ஈடாய் கூறலாமே
நால்வர் அருளிய பாக்கள் யாவும்
நன்மறைகளுக்கு ஈடாய் கூறலாமே.

உலகெலாம் என்று அடியெடுத்தருளி
உலகிற்கு சேக்கிழார் மறை தந்தார்
உலகெலாம் என்று அடியெடுத்தருளி
உலகிற்கு சேக்கிழார் மறை தந்தார்.

ஆயிரங்கால் மண்டபத்தில் அன்று
அரங்கேற்றம் செய்தார், தில்லையில்
ஆயிரங்கால் மண்டபத்தில் அன்று
அரங்கேற்றம் செய்தார்,

நடராஜப் பெருமானை நாவாலே பாட
நலம் யாவும் பயக்கும், ஆனந்தமாய்
நடராஜப் பெருமானை நாவாலே பாட
நலம் யாவும் பயக்கும்.

அப்பரும் சம்பந்தரும் சுந்தரரும்
மாணிக்கவாசகரும்  போற்றி
அப்பரும் சம்பந்தரும் சுந்தரரும்
மாணிக்கவாசகரும்  போற்றி.

" வான் முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன் முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான் மறை அறங்கள் ஓங்க
நல்தவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி
விளங்குக உலகம் எல்லாம் "

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
16.06.18

முடி திருத்தகம்

முடி திருத்தகம்

முடி திருத்தம் செய்து கொள்ள
கடைக்குள் நான் அடி வைத்தேன்
எனக்கு முன்னே வந்தோரெல்லாம்
அழைப்புக்காக இருக்க கண்டேன்.

தொலைகாட்சி ஒரு மூலையில்
அலறிக் கொண்டு இருந்தது
செய்தித்தாள்கள் இங்குமங்கும்
கசங்கியபடி சிதறிக் கிடந்தது.

ஆங்காங்கே வெட்டப்பட்ட முடி
அசிங்கமாக பரவிக் கிடந்தது
சவரம் செய்த நுரை பொங்கி
சேர்ந்து ஓர் ஓரமாய் இருந்தது.

சிறியோர் பெரியவர் ஆனமாதிரி
பெரியோர் சிறியவர் ஆனமாதிரி
கட்டிங் முடிந்ததுமே தனக்குள்ளே
கனாப் பல காண்பதுண்டு.

முடி திருத்தம் செய்த பின்னே
மன்மதனாகி விடுவதாக அங்கு
மனதிற்குள் ஆயிரம் கற்பனை
சுமந்தோர் அநேகம் கண்டேன்.

ஸ்டேப் கட்டிங், மாஸ்டர் கட்டிங்
ஆர்மி ஸ்டைல், மெஷின் கட்டிங்
நடிகர்கள் மாதிரி தினுசாக வேறு
ஹேர் கலரிங் இத்யாதி இத்யாதி.

ஒவ்வொருவர் விருப்பத்தையும்
ஒதுக்காமல் மகிழ்ந்தபடி அங்கு
ஒரே ஒரு கத்திரிக்கோலால்
ஒப்பனை செய்து வந்தார்.

கட்டிங் ஆன பிறகு அங்கே
கண்ணாடியைப் பார்த்தபடி
நெடுநேரம் அழகு பார்க்கும்
முகங்கள் அதிகமெனலாம்.

சாதிமத வேறுபாடில்லாமல்
சமத்துவமாய் சேருமிடம்
மூச்சிருக்கும் போது சலூன்
மூச்சடங்கும் போது சுடுகாடு.

முகத்தின் அழகைத் கூட்ட
முப்போதும் முயன்றாலும்
அகத்தின் அழகு கொண்டே
எப்போதும் உயர்வடைவோம்.

சலூன் கடையில் இருந்த போது
சந்தடிசாக்கில் எனக்குள்ளிருந்து
சிதறிய சில வரிகள் 😊😊😊😊

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
16.06.18

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...