Search This Blog

Monday, July 30, 2018

அங்காரஹ சதுர்த்தி

அங்காரஹ சதுர்த்தி

வேழமுகத்து விநாயகனுக்கு
விக்னங்களைத் தீர்ப்போனுக்கு
வேண்டும் வரம் தருவோனுக்கு
அங்காரஹ சதுர்த்தி..

கணங்களின் நாதனுக்கு
கயிலையின் ஜ்யேஷ்டனுக்கு
கவலையெல்லாம் தீர்ப்போனுக்கு
அங்காரஹ சதுர்த்தி..

பக்தி சிரத்தையுடன்
பால் தயிர் பஞ்சாமிர்தம்
பாங்குடனே அபிஷேகத்துடன்
அங்காரஹ சதுர்த்தி..

புஷ்ப மாலைகளால் பூசனையும்
மந்திரங்களால் அர்ச்சனையும்
மனமுருகி செய்திட மகிழ்ந்திடும்
அங்காரஹ சதுர்த்தி..

ஆலயம் சென்று ஆனைமுகனை
தோப்புக்கரணமிட்டு துதித்திட
எடுத்த காரியம் ஜெயமாக்கிடும்
அங்காரஹ சதுர்த்தி..

ஸ்ரீமத் ஜடா விநாயக மூர்த்திகி ஜெய்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
31.07.18

Saturday, July 28, 2018

ஜடா விநாயகா

ஜடா விநாயகா

கும்மென்ற கணபதி
கம்பீர கணபதி காணக்
காண கவர்ந்திழுக்கும்
கலையான கணபதி..

கும்பாபிஷேகம் கண்ட
குருவைய்யர் கணபதி
குறையாவும் தீர்த்தருளும்
குறுமுனியின் கணபதி..

ஆனைமுக கணபதி
அழகான கணபதி
அனைவரும் பூஜிக்கும்
அக்ரஹார கணபதி..

அலங்காரம் செய்திட
அசத்தலான கணபதி
அடியாரை ஆட்கொளும்
அம்சமான கணபதி..

விபூதி காப்பும் செய்ய
வரமருளும் கணபதி
வெண்ணை சார்த்திட
உருகி விடும் கணபதி..

சந்தன காப்பும் செய்ய
சந்தோஷிக்கும் கணபதி
சத்தியமாய் அனைவர்க்கும்
சுகமளிக்கும் கணபதி..

ஜென்மம் எடுத்தமைக்கு
சிதம்பரம் வந்திடுவோம்
ஸ்ரீமத் ஜடா விநாயகரின்
பாதம் பணிந்திடுவோம்..

ஜடா விநாயக மூர்த்திகி ஜெய் !!

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.07.18

தலைவரே

தலைவரே

தள்ளாடும் வயதினிலும்
தளராது தமிழ் கொண்டு
தமிழர்களை மகிழ்வித்த
தலைவா நீ வாழ்க !!

ஐம்பது ஆண்டுகளாய்
அயராது கட்சிப் பணியில்
அண்ணாவின் வழி நிற்கும்
அய்யா நீ வாழ்க !!

முத்தமிழில் கரை தேர்ந்து
மூப்படைந்தும் ஓயாமல்
முப்போதும் உழைத்து வரும்
முதல்வா நீ வாழ்க !!

குறளுக்கு விளக்கம் தந்த
குரல் மூலம் கூட்டம் சேர்த்த
கழகத்தின் கதிரவனே
கண்மணியே நீ வாழ்க !!

கரைபுரண்டு காவிரியில்
தண்ணீர் வெள்ளம், கூடவே
கரைபுரண்டு காவிரியில்
கண்ணீர் வெள்ளம்..

அகவை தொண்ணூற்றைத்
தாண்டிய இளைஞரே, உமது
ஆயுசும் நீடிக்க வேண்டும்
ஞாயிறே..

" நான் நீ எனக் கூறும் போது
உதடுகள் ஒட்டாது, ஆனால்
நாம் எனும் கூரும் போது தான்
உதடுகள் ஒட்டும் "

வித்தியாசமாக சிந்தித்து
முத்து முத்தாய் எழுதுவதில்
முத்துவேலர் மகனுக்கு
ஈடாக எவர் உண்டு ?

உயிர்த்தெழுந்து நீங்கள்
வாரும் அய்யா, மீண்டும்
உயிர்மெய் எழுத்துகளில்
விளக்கம் எழுதும் அய்யா..

தங்கள் தமிழை மட்டும்
ரசித்த கோடானு கோடி
ரசிகர்களில் இந்த
அடியேனும் ஒருவன்..

💐💐💐💐💐💐💐💐💐

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.07.18

Friday, July 27, 2018

வெள்ளி சிறப்பு கவிதை

வெள்ளி சிறப்பு கவிதை

ஊடலும் கூடலும்
ஒன்றாக சேர்ந்த
காதல் பயணமே
குடும்ப பயணம்..

தித்திப்பு அதிகமானால்
தின்பது திகட்டி விடும்
ஆகாரத்தில் காரம் கூட்ட
அமுதாக உள்ளிறங்கும்..

ஏற்றமும் தாழ்வும் சேர்ந்து
இணைந்ததே வாழ்க்கை
ஏமாற்றம் கொள்ளாமல்
இணைபிரியாதிருங்கள்..

சின்ன சின்ன சண்டையிட்டு
செல்லமாய் கொஞ்சிப் பேசி
மனக் கவலையெல்லாம் தம்
மனைவியிடம் தீர்த்திடுங்கள்..

கவலைகளை மறந்திட
கண்டபடி திரியாமல்
கட்டிய மனையாளிடம்
காதலுடன் இருந்திடுங்கள்..

💐💐💐💐💐💐💐💐💐

வார கடைசி  தின கவிதை ☺☺
(Week end Spl Kavithai)

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
27.07.18

Thursday, July 26, 2018

கலைஞரே

கலைஞரே

இன்று கிரகணமாம்
கூடவே பௌர்ணமியாம்
தலைவருக்கு ஆகாதென்று
தமிழ் மக்கள் கூறுகிறார்கள்..

எத்தனை கிரகணங்களை
எதிர்த்து வாழ்ந்திருப்பீர்
அமாவாசையும் பௌர்ணமியும்
அசால்ட்டாக கடந்திருப்பீர்..

சத்தியமாய் நீங்கள்
சதம் அடிப்பீர் ஐயா
சாவைக் கண்டு மீண்டும்
எள்ளி நகைப்பீர்..

ஐம்பது ஆண்டுகளாய்
கட்சியின் தலைமை
அமுதத் தமிழ் மொழியால்
கிடைத்த பெருமை..

காவிரி தண்ணீரும்
காவிரி மருத்துவமனையும்
செய்தித் தாள்களின்
தலையங்கமானது..

கடந்த பல ஆண்டுகளில்
உம்மை நலம் விசாரித்த
தலைவர்கள் பலரும் இன்று
உயிரோடு இல்லை..

நூறாண்டு காணப் போகும்
திருக்குவளை மைந்தனே
தேக சுகம் பெற்று நீங்கள்
நீடூழி வாழியவே..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
27.07.18

Monday, July 23, 2018

ஆடி உற்சவம்

ஆடி உற்சவம்

ஆடி மாத உற்சவத்தில்
அழகிய அலங்காரத்தில்
அட்டகாசமாக அம்மன்
பவனி வருகிறாள்.

தாரை தப்பட்டை முழங்க
புஷ்ப மாலைகள் பூண்டு
பல்லக்கில் எறி அவள்
பவனி வருகிறாள்.

ஆளுயர விளக்கொளியில்
ஆரவார கோஷம் நடுவில்
அருள்பாலிக்க நமைத் தேடி
பவனி வருகிறாள்.

வேப்பிலை நாயகியாம் நாம்
வேண்டும் வரம் தருபவளாம்
இல்லம் தேடி இன்முகமாய்
பவனி வருகிறாள்.

காப்புக் கயிறு கட்டியே
கருமாரியம்மனை தொழுதிட
கவலையெல்லாம் தீர்த்திடவே
பவனி வருகிறாள்.

அலகு குத்தி செடல் போட்டு
விரதம் இருந்து தீ மிதித்து
தாயே உனை வணங்கிடவே
தரித்திரம் தீர்ப்பாயே.

நெய் விளக்குத் திரியிட்டு
எலுமிச்சை மாலை சாற்றி
குங்குமத்தால் அர்ச்சிக்க
குளிர்ந்திடுவாய் நீயே..

* என் வீட்டின் பக்கத்தில் உள்ள நாகாத்தம்மன் ஆலய விழாவைக் குடும்பத்தோடு தரிசித்து அந்த
பரவசத்தில் எழுதியுள்ளேன்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
23.07.18

Sunday, July 22, 2018

ஒன்று படுவோம்

ஒன்று படுவோம்

இன்னும் எத்தனை
காலம் தான் எங்கள்
மதத்தின் மீது நீங்கள்
கல்லெறிவீர்கள் ???

திருப்பியடிக்க எமக்கு
தைரியம் இல்லையென
நினைத்தீரா அல்லது
தெம்பில்லை நினைத்தீரா.

இந்துவாக பிறந்து
இந்நாட்டில் வாழ்ந்து
இருக்கின்ற வீட்டிற்குள்
கலகத்தை விளைப்பதேன் ?

தன் தாயினைப் பழித்து
வாடகைத் தாயிடம் போய்
தஞ்சமடைவது போன்றது
தங்கள் ஈனச் செயல்..

மல்லாந்து துப்பும் எச்சில் தம்
மார்பில் தான் விழுமென்கிற
சாமானிய அறிவு கூட இந்த
சனியன்களுக்கு புரிவதில்லை.

இந்து கடவுள்களை மட்டும்
இழித்து பேசி வரும் இவர்க்கு
இதர மதத்து தெய்வங்களை
எதிர்த்து பேச தைரியமில்லை.

மதத்தை மாற்றி விட்டு
பெயரளவில் இந்துவாக
பொய்யர்கள் உலவுவது
வேதனையாய் உள்ளது.

வைரமுத்து பாரதிராஜா
சைமன் க மல ஹாசன்
இன்னும் எத்தனை பேர்
இந்நாட்டில் இறைவா !!!

பெரும்பான்மையாயிருந்தும்
பாரத தேசத்தில் இன்னும்
இந்துக்களை மட்டும் இவர்கள்
வம்புக்கு இழுப்பதேனோ.

மதச்சார்பின்மை நாட்டில்
எம்மதமும் சம்மதம் எனில்
எம் மதத்தையும் கடவுளையும்
தொடர்ந்து விமர்சிப்பதேனோ.

சாமி இல்லையென்று நித்தம்
சத்தம் போட்டு கூறுவோரும்
நோன்பு கஞ்சி குடிக்க மட்டும்
முனைந்து கிடப்பதேனோ.

அந்தணர் சாதியை
வம்புக்கு இழுத்து
அற்பத்தனமாய்
மகிழ்வது ஏனோ..

தனி மனித நம்பிக்கையில்
தலையிட  உரிமையில்லை
நாத்திக நாய்களுக்கு இது
ஒருபோதும் புரிவதில்லை.

காசு வாங்கி கூவுகின்ற
ஊடக வேஷதாரிகளும்
அடிப்படை உண்மையை
சரியாக உணர வேண்டும்.

தாய் மதத்தைப் பற்றி
தரம் குறைத்து பேசுவது
தன்னைப் பெற்ற தாயை
பேசுவது போலாகும்.

நம் மதத்திற்கு ஆதரவாய்
குரல் கொடுப்போரை
மதவாதி என்ற பெயரில்
முடக்குவது ஏனோ.

சண்டை சச்சரவின்றி
சாந்தமாய் வாழ்ந்து வரும்
சனாதன தர்ம வழி வந்த
சந்ததிகள் நாங்கள்.

பொறுமைக்கும் எல்லை
உண்டு போக்கிரிகளே
சாது மிரண்டால் இந்த
காடு கொள்ளாது.

அமைதியை குலைக்கும்
அந்நிய கைக் கூலிகளுக்கு
சாவு மணியடிக்கும் நாள்
வெகு தொலைவில் இல்லை.

ஒன்று படுவோம் உயர்வடைவோம்

ஜெய் ஹிந்த் !!!

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
22.07.18

Saturday, July 21, 2018

கொசு

கொசு

கை வலிக்க உனையடித்து
கண்ணெரிய துயில் துறந்து
கொட்டாவி விட்டபடி தினமும்
படுக்கையில் புரள்கின்றேன்.

கண்ணிமைக்கும் நேரத்தில்
சட்டென்று நீ கடக்கின்றாய்
நறுக்கென்று கொட்டிவிட்டு
உதிரத்தை குடிக்கின்றாய்.

சுத்தமில்லாத இடத்தில் நீ
மொத்தமாக குவிகின்றாய்
சத்தமில்லாமல் கடித்து எம்
நிம்மதியை கெடுக்கின்றாய்.

காலை வேளையிலே
கவலையின்றி நாமிருக்க
மாலையானதுமே நீ உனது
வேலையினை துவக்குகிறாய்.

சிறு மழை பொழிந்தாலும்
சேறும் சகதியும் சேர்ந்தாலும்
செமத்தியான படையல் காண
சுறுசுறுப்பாய் இயங்கிடுவாய்.

டெங்கு மலேரியா சிக்கன்குனியா
யானைக்கால் போன்ற பலவித
கொடிய நோய்கள் உன்னுடைய
கடியின் மூலம் பரப்பிடுவாய்.

சிங்கம் புலி கரடியை விடவும்
சின்ன உயிரினம் நீ தான்
மிகவும் கொடிய விலங்கென்று
உரக்க உலகிற்கு கூறிடலாம்.

கார்காலத்தில் குஷியாகும்
ஆட்கொல்லியே எங்களை
கொல்லாமல் கொள்ளும்
உயிர்க்கொல்லியே..

ஈரெழுத்து நாமம் கொண்ட
எதிரியை விட அச்சுறுத்தும்
குட்டி பிசாசான கொசுவே நீ
எப்போது ஓய்ந்திடுவாய்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
21.07.2018

Thursday, July 19, 2018

வெள்ளி சிறப்பு கவிதை

வெள்ளி சிறப்பு கவிதை

செல்லமாய் சண்டையிட்டு
சாதுர்யமாய் ஏங்கச் செய்து
இல்லாத இடையை இழுத்து
இறுக்கமாய் கட்டியணைத்து
காற்றும் புகாத வண்ணமாய்
கண்ணிமையுள் விழி சேர்த்து
காலனிடம் ஏகும் வரையில்
கட்டியவளை காதலியுங்கள்.

💐💐💐💐💐💐💐💐💐

வார கடைசி  தின கவிதை ☺☺
(Week end Spl Kavithai)

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
20.07.18

Wednesday, July 18, 2018

ஆடிச் சிறப்பு

ஆடிச் சிறப்பு

தெய்வீக மாதமாம்
இந்த ஆடி மாதத்தில்
தள்ள(ஆடி) வராமல்
தெளிவாக வீடு வந்து
சேருமாறு தாழ்மையுடன்
வேண்டிக் கொள்கின்றேன்.

ஆடித் தள்ளுபடியின்
சலுகையில் ஏமார்ந்து
சேர்த்த பணத்தினை
செலவு பண்ணிடாமல்
எச்சரிக்கையுடன் இருக்க
வேண்டிக் கொள்கின்றேன்.

மனைவியைப் பிரிந்த
புது மாப்பிள்ளைகள்
அலைந்து திரியாமல்
அடக்க ஒடுக்கமாக
இருக்கும்படியாய் நான்
வேண்டிக் கொள்கின்றேன்.

அம்பாள் அனுக்கிரகம் பெற
அஷ்ட ஐஸ்வர்யம் பெற்றிட
உள்ளத்தை தூய்மையாக்கி
இல்லத்தையும் சுத்தமாக்கி
பக்தியுடன் பூசிக்குமாறு
வேண்டிக் கொள்கின்றேன்.

ஆடி அமாவாசையில்
பித்ருக்களை மகிழ்வித்து
ஏழைக்கு மனமிரங்கி
இயன்றளவு அன்னமிட்டு
தர்மநெறியில் இருந்திட
வேண்டிக் கொள்கின்றேன்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
18.07.2018

Tuesday, July 17, 2018

ஆடி மாதம்

ஆடி மாதம்

ஆதியும் அந்தமுமில்லா
அகிலாண்டேஸ்வரியை
ஆடி மாதத்தில் வழிபட்டு
அருளை நாம் பெறுவோம்.

அகிலத்தை ஆட்டுவிக்கும்
அன்னை ஆதிபராசக்தியை
ஆடி மாதத்தில் வழிபட்டு
அருளை நாம் பெறுவோம்.

பக்தி சிரத்தையோடு
பார்வதியைப் பணிய
ஆடி மாதத்தில் வழிபட்டு
அருளை நாம் பெறுவோம்.

ஆடி வெள்ளி கிழமையிலே
அம்பிகையை வணங்கிட
ஆடி மாதத்தில் வழிபட்டு
அருளை நாம் பெறுவோம்.

ஆடி கிருத்திகையில்
அம்மனைத் துதித்திட
ஆடி மாதத்தில் வழிபட்டு
அருளை நாம் பெறுவோம்.

பதினெட்டாம் பெருக்கில்
பாவம் தீர காவிரி நீராடி
ஆடி மாதத்தில் வழிபட்டு
அருளை நாம் பெறுவோம்.

அஷ்டலக்ஷ்மி அருள் பெற
வரலக்ஷ்மி விரதம் இருக்க
ஆடி மாதத்தில் வழிபட்டு
அருளை நாம் பெறுவோம்.

தக்ஷிணாயனம் தொடங்கும்
ஆடியில் பித்ரு பூஜை செய
ஆடி மாதத்தில் வழிபட்டு
அருளை நாம் பெறுவோம்.

ஆடி அமாவாசை நாளில்
அர்க்யம் விட்டு பூசிக்கவே
ஆடி மாதத்தில் வழிபட்டு
அருளை நாம் பெறுவோம்.

ஆடி மாத சிறப்பினை
அடியெடுத்து எழுதிடும்
அடியேனது முயற்சிக்கு
ஆசியிட கோருகிறேன்..

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
17.07.2018

Monday, July 16, 2018

இராமேஸ்வர யாத்திரை

இராமேஸ்வர யாத்திரை

தங்கச்சி மடம், அக்காள் மடம்
சேதுக்கரை, தேவிப்பட்டினம், திருஉத்திரகோசமங்கை
திருப்புல்லாணி, தனுஷ்கோடி

வெறுமனே வரலாற்றில்
படித்த ஊர்களையெல்லாம்
நேரில் பார்க்கும் நல்வாய்ப்பு
கிட்டியது.

அக்னி தீர்த்த சமுத்திரத்தில்
அகமகிழ நீராடி, இருபத்தோறு
கிணறுகளில் புனித நந்நீராடி
கோவிலுக்குள்ளே சென்றோம்.

இராமருக்கு அருளிய
இராமநாதஸ்வாமியை
பர்வதவர்த்தினியுடன்
பக்தியோடு வழிபட்டோம்.

மங்களாம்பிகை சமேத
மங்களநாதரை கண்டு
மரகத நடராஜரையும்
மனமுருக தொழுதோம்.

நவபாஷாணத்தால் ஆன
நவக்கிரகங்களை நாங்கள்
கடலுக்கு நடுவினிலே
கண்குளிர தரிசித்தோம்.

இருகடல் சங்கமிக்கும்
தனுஷ்கோடியில் நீராடி
எங்கள் பாவங்களை
எல்லாம் தீர்த்தோம்.

இறுதியில் பேய்கரும்பில்
இருக்கும் ஐயா அப்துல்கலாம்
நினைவிடத்தையும் தரிசித்து
யாத்திரை நிறைவு செய்தோம்.

உறவினர்கள் ஒன்றுகூடி
உளமகிழ்ந்து அளவலாவ
இது பெரியோர்கள் காட்டிய
புண்ணிய வழியாகும்.

தீர்த்த யாத்திரையென்பது
மூத்தவர்களுக்கு மட்டுமல்ல
இளைய வயதினரும் சேர்ந்து
இறையுணர்வோடு இணையவே.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
16.07.2018

Friday, July 13, 2018

இரயில் பயணம்

இரயில் பயணம்

முதன்முறையாக
நீண்டதொரு பயணம்
புகைவண்டியில் போகும்
புனித பயணம்..

வார இறுதியிலே
வசதியாய் புறப்பட்டு
வண்டியில் செல்லும்
உற்சாகப் பயணம்..

மூன்று நாள் பயணத்திற்கு
முன்பதிவு செய்து கொண்டு
மகிழ்ச்சியோடு துவங்கிய
முன்னேற்பாடான பயணம்..

மனைவி குழந்தைகளுடன்
மாமனார் மாமியார் கூடவே
சகலை கொழுந்தியார்கள்
சேர்ந்த குஷியான பயணம்..

நொறுக்கு தீனிகள் தின்ன
நிறையவே உண்டு, கூடவே
நெஞ்சத்தை நிறைத்திடும்
நினைவுகளும் உண்டு..

அரட்டையடித்து கொண்டு
ஆனந்தமாய் பயணித்து
ராத்திரி நேரத்தை ஜாலியாய்
ரயிலிலே கழித்தோம்..

குளிரூட்டிய பெட்டியில்
குழந்தைகள் குதூகளிக்க
கும்மாளமிட்டபடி சென்ற
களிப்பானதொரு பயணம்..

இரயில் பயணத்தில்
இராமேஸ்வரம் சென்று
இராமநாத ஸ்வாமியை
தரிசிக்கும் பயணம்..

இந்த நாளைப் போல
எந்த நாளும் அமைய
இறைவனை வேண்டி
என்றும் பணிகின்றேன்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
13.07.18

Thursday, July 12, 2018

பித்ருக்கள்

பித்ருக்கள்

வயது ஏற ஏற நம்மை
வளர்த்த பெரியோர்கள்
விண்ணுலகம் செல்வது
வருத்தமான விஷயமாம்
வந்தோர்கள் வேலை முடிந்து
வானேகுவது வாடிக்கையாம்
எதையும் தீர்மானிப்பது
நம் கையில் இல்லையாம்
வளர்ந்த போது நமக்கு
அன்னமிட்ட பெற்றவர்க்கு
வயோதிகத்தில் அமுதூட்டி
சீராட்டி வைத்தோமானால்
ஆலயம் செல்ல வேண்டாம்
ஆராதித்து உருக வேண்டாம்
நெஞ்சில் சுமந்தவரை
நெருப்புக்கு இரையாக்கி
நம் கடமை/கர்மா செய்வதே
நாம் செய்யும் செயலாகும்
அமாவாசை நாளன்று
எள்ளும் தண்ணீரும் விட்டு
ஆண்டிற்கு ஒருமுறையே
அண்ணன் தம்பிகளோடு
அனுசரணையாய் திதியிட்டு
பித்ருக்களை பூசித்து வர
ஆசி தந்து வாழ்த்திடுவர்
ஆண்டவனாய் காத்திடுவர்.

ஓம் சாந்தி  ஓம் சாந்தி !!!!

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
12.07.18

Wednesday, July 11, 2018

வாழ்க இந்து மதம்

வாழ்க இந்து மதம்

ஆண்டின் ஆரம்பத்தில்
ஆதிசங்கரர்  வழிவந்த
அத்வைத மூர்த்தியாம்
ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி
ஸ்வாமிகளை இழந்தோம்.

இன்றைய தினத்தில்
இராமானுஜர் வழிவந்த
வைணவ ஆச்சாரிய மகான்
ஸ்ரீ ரங்க ஜீயர் ஸ்வாமிகளை
இழந்து நிற்கின்றோம்..

இந்து மதம் என்பது
சைவம் வைணவம்
இரண்டும் கலந்த
சனாதன தர்மமாகும்..

சமயப் பெரியோர்கள்
சமாதி அடைவதென்பது
சற்றே மனக்கலக்கத்தை
உண்டாக்குகிறது..

மதத்தின் பெயரால் தினம்
மாநாடு போட்டு மக்களை
திசைதிருப்ப நினைக்கும்
திராவிட ஓநாய்கள் அதிகம்..

ஒற்றுமை குலையாமல்
ஒன்றாய்க் கூடி நின்று
சமய நல்லிணக்கம் பேண
சத்தியம் எடுப்போம்..

பெரியோர் சொல் கேட்டு
பக்தி நெறி வாழ்வோம்
பெரியார் வழி வந்தோரின்
பேச்சைப் புறந்தள்ளுவோம்..

இந்து மதம் வாழ்கவென
இடியாய் முழங்கிடுவோம்
சோதனை பல வந்தாலும்
சோர்ந்து விட மாட்டோம்..

வைகுண்ட ப்ராப்தியடைந்த
ஸ்ரீ ஜீயர் ஸ்வாமிகள் பாதம்
பணிந்து ஆன்மா சாந்தியடைய
ஸ்ரீ ரங்கநாதரைத் துதிப்போம்..

நாராயண நாராயண

ஓம் சாந்தி ஓம் சாந்தி

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
11.07.2018

Monday, July 9, 2018

கைப்பேசி (செல்போன்)

கைப்பேசி (செல்போன்)

கண்ணே உன்னை
காதலிக்கிறேன்
கை வலிக்க நிதம்
செய்தியிடுகிறேன்

வராத செய்திக்கு
வருத்தமடைந்து
வேதனையில் நானும்
வாடிக் கிடக்கிறேன்

தொடு திரையைத்
தொட்டு தடவி தடவி
தினமும் நானும்
திருப்தியடைகிறேன்

காது வலிக்க உன்னை
கன்னத்தோடு இடுக்கி
வீட்டிற்கு வெளியே வந்து
வீதியில் நின்று பேசுகிறேன்

படுக்கும் போதும் என்
பக்கத்தில் இருப்பாய்
விழிக்கும் போதும் என்
கையினுள் சிரிப்பாய்

உன்னைப் பிரிந்திருக்கும்
ஒவ்வொரு வினாடியும்
ஒரு யுகமாய் எனக்குள்
நினைத்துப் பார்க்கிறேன்

அருகினில் நீ இருக்க
ஆனந்தமாய் நானிருக்க
அனைத்தையும் மறந்தேன்
அனுபவித்து மகிழ்ந்தேன்

உயிரில்லா உன்னாலே
உயிரோட்டம் பெறுமென்றால்
உன்னத உன் படைப்பை நான்
எங்ஙனம் எடுத்துரைப்பேன்

பசித்த வயிற்றில் உணவுண்டு
மகிழ்வதைக் காட்டிலும் உனது
பேட்டரி ரீசார்ஜ் செய்த பின்னே
காணும் மகிழ்ச்சி அதிகமாகிறது

சகட்டுமேனிக்கு நானும்
சமூகவலைதளத்தில்
சஞ்சரிக்க எனக்கு நீயும்
உதவி செய்கின்றாய்

ஆண்டராய்டு பேசியால்
அகிலமும் சிறுசாகும்
அளவுக்கு மீறினால்
அமுதமும் நஞ்சாகும்

அழுத குழந்தைக்கு அன்று
அம்புலி காட்டி உணவிட்டோம்
ஆண்டராய்டு காட்டி இன்று
அன்னத்தை ஊட்டுகின்றோம்

சீரியல் பார்த்து அன்று
சொந்தங்களை இழந்தோம்
செல்போன் உபயோகித்து
சுத்தமாய் தொலைத்தோம்

காலை எழுந்தவுடன் அன்று
செய்தித்தாளை படித்தேன்
காபி குடித்தபடி இன்று நான்
கைப்பேசியுடன் கிடக்கின்றேன்

நேரில் பார்த்து பேசாதவர் கூட
நெட்டில் கூடி அரட்டையடிப்பது
விஞ்ஞானத்தின் வளர்ச்சியா
அஞ்ஞானத்தின் எழுச்சியா

என் செல்ல செல்போனே
சத்தியமாய் உனை ஒதுக்க
சபதங்கள் போட்டதெல்லாம்
சுக்குநூறாய் போகின்றதே

அளவோடு உபயோகிக்க
ஆனந்தமாய் இருக்கலாம்
அளவுக்கு மீறி களித்திட
அடியோடு ஒழியலாம்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
10.07.2018

Sunday, July 8, 2018

நாகம்மத்தை

நாகம்மத்தை

பிறந்தவர் இறப்பது நியதி
ஆனால் சிலர் இறந்ததும் நம்
நெஞ்சு விம்மி புடைக்கிறதே

நட்பு என்பதாலா இல்லையெனில்
நெருங்கிய சொந்தம் என்பதாலா

ஏதோ ஒன்று இனம் புரியாத ஓர்
வலியை மனதிற்குள் அழுத்தும்
உண்ண உணவு இறங்காது
படுத்திட உறக்கம் பிடிக்காது

அக்கம் பக்கத்தினர் எல்லாம்
அன்னியராய் இருக்கும் பட்சத்தில்
அனைவரையும் ஒருங்கிணைத்து
அம்மாவாய் அன்பு பூண்டு
இதமான வார்த்தை பேசி
ஈஸ்வரியாய் இருப்பவருண்டு

நாற்பதாண்டுகளுக்கும் மேலாக
நமது அக்ராஹாரத்தில் இருந்த
நாகம்மத்தையும் அப்படியே

தனது மறைவின் மூலம்
ஒரு பெரிய வெற்றிடத்தை
இன்று உருவாக்கியுள்ளார்

அக்ரஹாரத்தில் எமது வீட்டின்
வலப்பக்கம் சரோஜா அத்தை
இடப்பக்கம் நாகம்மத்தை என்று
இருபுறமும் இவர்கள் இருந்து
எங்களை வளர்த்தார்கள் அன்று

எங்கு போய்த் தேடுவது இனி
இந்த சொந்த நெஞ்சங்களை

இழந்து வாடுவது இவர்களது
குடும்பத்தினர் மட்டுமல்ல
ஒட்டுமொத்த அக்ரஹாரமும் தான்

அவரது ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
எல்லோரும் பிரார்த்திப்போம்.

ஓம் சாந்தி ஓம் சாந்தி 😢😢😢

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
08.07.2018

Saturday, July 7, 2018

ஜடா விநாயகா

ஜடா விநாயகா

கலக்கமுற்ற நேரத்திலே
கணபதியின் துணையுண்டு
காலத்தை வென்றிடவே
கணேசனின் அருளுண்டு

கவலைகளை களைந்திடவே
கயிலை மகன் தயையுண்டு
வல்வினைகள் போக்கிடவே
விநாயகரின் க்ருபையுண்டு

ஊழ்வினைகள் விலக்கிடவே
உமை மைந்தன் வருவதுண்டு
உற்சாகமும் தந்திட என்றும்
விக்னேஸ்வரன் நமக்குண்டு

குருவைய்யர் கணபதியின்
தாள் படிந்து சரணடைந்தால்
குறையாவும் தீர்ந்து விடும்
குஷியான வாழ்வமையும்

ஜடமாக இருக்கும் நமை
திடமாக மாற்றுகின்ற ஸ்ரீ
ஜடா விநாயகரின் பதத்தை
தணியாது பற்றிடுவோம்.

ஸ்ரீமத் ஜடா விநாயக மூர்த்திகி ஜெய்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
07.07.18

Friday, July 6, 2018

மதிய உறக்கம்

மதிய உறக்கம்
மனதை கிறக்கும்

வயிறு முட்ட உண்டு
வெற்றிலை பாக்கிட்டு
தலைமாட்டில் கைவைத்து
சற்றே சாய்ந்திடனும்

கண்ணயர்ந்து நாமும்
துயில் கொண்டிடவே
சாயந்திர நேரம் வருவது
சத்தியமாய் தெரியாது

படுத்தெழுந்த பின்னே
பில்டர் காபி அருந்த
பிறவிப் பயன் கிட்டும்
பேரானந்தம் எட்டும்

வெள்ளிக் கிழமையிலே
வாரக்கடைசியினை
வரவேற்க காத்திருக்கும்
உற்சாக மனிதன் நான்

சுவையான உணவும்
சரியான உறக்கமும்
அமைந்தால் அதுவே
அமரலோகம் என்பேன்

மட்டற்ற மகிழ்வோடு
மதிய உறக்கம் கொள்ள
சனி ஞாயிறுகளை நானும்
எதிர்நோக்கி இருக்கின்றேன்

வார விடுமுறை வாழ்த்துக்களுடன்

💐💐💐💐💐💐💐💐💐💐

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
06.07.18

Thursday, July 5, 2018

பள்ளி தோழமை

பள்ளி தோழமை

பள்ளி நாட்களை சற்றே
திரும்பி பார்க்க வைத்த
என் நண்பர்களே

கலகலப்பாக குறுஞ்செய்தி
போட்டு கவனத்தையெல்லாம்
பின்நோக்க வைத்தீர்

இரண்டல்ல மூன்றல்ல
இருபத்தெட்டு வருடங்கள்
இன்றோடு சேர்த்து

ஒருதலைமுறை தாண்டிய
பயணத்தை நினைக்கையில்
நெஞ்சம் சிலிர்க்கிறது

பள்ளி நாட்களை சற்றே
அசைபோட்டு காண்கையில்
கண்ணீர் கசிகின்றது

நம்மில் எல்லோரும்
நாற்பது வயதை கடந்த
குடும்பஸ்தர்களே

உத்யோக நிமித்தம்
சிதம்பரத்தைப் பிரிந்து
சிதறிப் போயுள்ளோம்

திருமணமாகி பின்னர்
புதுஉறவோடு சேர்ந்து
பயணம் கொண்டுள்ளோம்

சவால்களை எதிர்நோக்கி
பயணிக்கும் நொடியாவும்
பிரமிக்க வைக்கின்றது

வாழ்வின் யதார்த்தத்தை
நினைத்து பார்க்கையில்
நெஞ்சம் புடைக்கின்றது

கழிந்த நொடியென்றும்
கால சுழற்சியில் மீண்டு
திரும்ப வருவதில்லை

பெற்றோர் வளர்ப்பினிலே
பாசத்துடன் வளர்ந்தவர்கள்
பெற்றோராய் ஆவதுண்டு

பணத்தின் அருமையினை
எண்ணி செலவிட்டு பின்
ஏங்கித் தவிப்பதுண்டு

கடமையை ஆற்றுவோம்
குடும்பத்தை போற்றுவோம்
நன்நட்பினையும் பேணுவோம்

வாழ்க வளர்க 💐💐💐💐

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
05.07.18

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...