Search This Blog

Thursday, February 28, 2019

வெள்ளிக் கிழமை சிறப்பு கவிதை

வெள்ளிக் கிழமை சிறப்பு கவிதை

பின்னிய கூந்தலுடன்
மேவாயில் கை வெச்சு
வீட்டின் மனை முன்னே
உட்கார்ந்து இருக்குற

கலைந்த கேசத்துடன்
கைநிறைய வளையலோடு
உன் தோழியோடு சேர்ந்து
குந்த வெச்சு இருக்குற

மஞ்சள் தாவணியில்
மச்சானை மயக்குகிற
மொத்தமாக என்னை நீ
குத்தகைக்கு எடுக்குற

பாவாடை தாவணியில்
பளிச்சின்னு இருக்குற
தடாகத்து தாமரையாய்
தங்கமாக மின்னுற

ராத்திரி இருட்டிலும்
வீட்டுக்குள்ள வெளிச்சம்
அது நிலா ஒளிப்பட்ட உன்
முக ஒளியோட சொச்சம்

யாருக்காக இப்படி
காத்து நீயும் கிடக்குற
ஊருக்காக வெக்கப்பட்டு
என்னை ஒதுக்கி வெக்கற.

🌷🌷🌺🌺🌹🌹🌻🌻

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
01.03.2019

தவிப்பு

தவிப்பு

முடியில்லாத
நடிகர் இன்று
முடிவெடுக்க
முடியாமல்
தவிக்கிறார்

களையான
கருப்பு நடிகர்
கழகங்களை
நாட முடியாமல்
தவிக்கிறார்

அஷ்டாவதானி
நடிகர் நித்தம்
அறிக்கையாய்
இட்டு குழம்(ப்)பி
தவிக்கிறார்

நேற்று முளைத்த
நடிகரும் கூட தினம்
நாடாளும் ஆசையில்
இருதலைக்கொல்லியாய்
தவிக்கிறார்

எம் ஜி ஆர் என் டி ஆர்
இருவரது பாதையில்
பயணிக்க பலரும்
கோட்டையின் கனவில்
தவிக்கிறார்.

ஏதோ நினைத்தேன் எழுதுகிறேன்

அன்பன், சிதம்பரம் ஆர்.வி. பாலா
01.03.2019

Tuesday, February 26, 2019

ஜெய் ஹிந்த்

ஜெய் ஹிந்த்

அடிக்கு அடி
உதைக்கு உதை
குண்டு போட்டால்
சும்மாவா இருப்போம்
கூண்டோடு  களைவோம்
பதுங்கி தாக்கும் கோழைகள்
புலி வாலைப் பிடித்தவன்
விடவும் முடியாது தொடர்ந்து
பிடிக்கவும் முடியாது.

தீவிரவாதத்தை தொட்டவன்
கதியும் அதுவே !!

வான்வழித் தாக்குதல் நடத்தி
வாகை சூடிய நம் வாயு சேனை
வீரர்களுக்கு தலை வணங்குவோம்

எதிர்க் கட்சிகளும் இதற்கு ஆதரவு
அளித்திருப்பது மிக்க மகிழ்ச்சி.

வந்தே மாதரம் ! ஜெய் ஹிந்த் !

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
26.02.2019

கூட்டணி

கூட்டணி

சாதிக்கொரு கட்சி
சந்துக்கு ஒரு தலைவன்
தேர்தல் நேரத்து திருவிழா
தில்லுமுல்லுப் பெருவிழா

கொள்கை இல்லாத கூட்டணி
கொள்ளை அடிக்க கூட்டணி
ஆதாயத்திற்க்கான  கூட்டணி
அற்ப அரசியலுக்கான கூட்டணி

கோடிகள் அள்ள திட்டம் இருக்கு
கேடிகள் சூழ்ந்த கோட்டையிருக்கு
குறுகிய கால அறுவடை இருக்கு
கூட்டணி என்னும் பெயர் இருக்கு

வியர்வை சிந்தி உழைக்க வேணாம்
வாகன நெரிசலில் அலைய வேணாம்
வாரிசு என்னும் அடையாளம் போதும்
வாழ்நாள் முழுமையும் ஓட்டிடலாம்

படித்து பட்டம் பெறத் தேவையில்லை
பண்பும் மாண்பும் தேவையில்லை
பணக்கார அந்தஸ்து கிட்டினாலே
பல்கலைக்கழகமே பட்டம் தரும்

வாக்குறுதி தந்து வீதியில் வருவர்
ஓட்டுகள் வேண்டியே ஓடி வருவர்
வெற்றி முடிவுகள் வெளிவந்ததுமே
ஒரேயடியாய ஒழிந்து போவர்.

ஏதோ நினைத்தேன் எழுதுகிறேன்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
26.02.2019

Thursday, February 21, 2019

வெள்ளிக்கிழமை சிறப்பு கவிதை

வெள்ளிக்கிழமை சிறப்பு கவிதை

உறங்காத கண்ணோடு
உள்ளத்தில் கனவோடு
நித்தமுன் நினைவேந்தி
நித்திரை கொள்கிறேன்

மாட்டேன் என மாட்டாய்
மல்லுக்கட்டி நிற்கிறாய்
மத்தாப்பு நினைப்பிலே
மிதக்கவும் விடுகிறாய்

ஊர் மொத்தம் அடங்கிவிட
உற்றாரும் சோர்ந்து விட
உறவாக உனையெண்ணி
உற்சாகம் அடைகிறேன்

எட்டு மணி நேரத்தில்
எத்தனை கற்பனைகள்
ஏமாற்றத்தைத் தருகின்ற
எதிர்ப்பார்ப்பு தருணங்கள்

கிட்டாத ஒன்றைக் கனவில்
கிட்டத்தில் இருத்தி நித்தம்
காதலித்து கண் சொருகும்
காளையர்கள் கூட்டமுண்டு

கண்ணே உனையிழுத்து
கழுத்தருகே தடம் பதித்து
கண நேரம் ஆன பின்னே
கற்கண்டு அமுதுண்பேன்

கனிகளை ஒவ்வொன்றாய்
காலமெல்லாம் சுவைத்து
காமனவன் குதிரையேறி
களியாட்டம் புரிந்திடுவேன்

சொப்பனத்தை மெய்ப்பிக்க
சுந்தரியே வருவாயா உனக்கு
சோர்வடையும் நேரம் வரை
சுவர்க்கலோகம் திறப்பாயா

💐💐💐💐💐💐💐💐💐

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
22.02.2019

Wednesday, February 20, 2019

உலக தாய் மொழி தினம்

உலக தாய் மொழி தினம்

அடிப்பட்டு அலறும் போது
தன்னிச்சையாய் வருவது
தாய் மொழி மட்டுமென்று
தரணியே அறியும்.

தாயில்லாது உலகில்
சேயில்லை அது போல்
தாய் மொழி கல்லாது
உயர்வில்லை.

மெத்தப் படித்த பெரு
மேதாவியாயினும்
சிந்திக்க உதவுவது
தாய் மொழி மட்டுமே.

கற்பனைக்குகந்த மொழி
கடவுளுக்கு அடுத்த மொழி
கற்ற மொழி பலவாகிலும்
தாய்மொழியே சிறந்த மொழி

பன்மொழிப் புலவரும்
தாய்மொழியில் சிந்தித்து
மொழியாக்கம் புரிவதை
வழக்கமாய்க் கொள்வர்.

அயல் மொழி படிப்பது
அவசியம் என்றாலும்
தாய்மொழி தவிர்ப்பது
தவறான செயலாம்.

தாய் மொழி கற்போம்
தலை நிமிர நடப்போம்

👍👍👍🌹🌹🌹🌷🌷🌷

இன்று உலக தாய் மொழி தினம்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
21.02.2019

ம(து)றவாதே

ம(து)றவாதே

எவரை நினைக்கையிலே
இலேசாய் உணர்வோமோ
எவரின் வரிகளைக் கண்டு
உவகையில் களிப்போமோ
எவரின் குரலைக் கேட்டதும்
கண்ணில் நீரெழும்புமோ
அவருடைய உறவினை நீ
எந்நாளும் ம(து)றவாதே.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
20.02.2019

Sunday, February 17, 2019

நந்தியம் பெருமானே

நந்தியம் பெருமானே

நெடுங்காலமாக நேரில்
உட்கார்ந்து இருக்கிறாய்

உமா மஹேஸ்வரனை
தரிசித்துத் திளைக்கிறாய்

ஒரு காலை ஊன்றியவன்
மறு காலை தூக்குவான்

உலகோரும் உய்யவேண்டி
ஓயாமல் ஆடுவான்

உன்னிரு கொம்பிடையே
தாண்டவமுமாடுவான்

பிரதோஷ காலத்திலே
பக்தர்க்கு அருளுவான்

என்னப்பன் செவி சாய்க்க
விண்ணப்பம் இடுகிறேன்

மறுக்காது மஹேஸனிடம்
தெரிவிக்க விழைகிறேன்

நந்தியம் பெருமானே
போற்றி போற்றி

சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏

பிரதோஷ கால வணக்கம்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
17-02-2019

Saturday, February 16, 2019

தலைவா !!!

எந்த கட்சிக்கும்
ஆதரவு இல்லை

அப்படி போடு
தலைவா !!!

கடைசி வரைக்கும்
கட்சியே வேணாம்

வாய்க்கரிசி வாங்கற
வரைக்கும் வாய்ஸ் தான்

எல்லா கட்சியிலுமே
உனக்கு நண்பர்கள்

போதாக்குறைக்கு
திராவிட சம்பந்தி வேற

உற்ற நண்பனும் ஒரு
உதிரிக் கட்சியிலே

எவரை எதிர்த்துத் தான்
மேடை போடுவாய் நீ

இப்படியே அறிக்கை விட்டு
படங்களை ரிலீஸ் பண்ணு

கோட்டை உனக்கு
சரிபட்டு வராது

குள்ள நரிகளின்
கூடாரம் வேண்டாம்

கோடம்பாக்கம் மட்டும்
போதும் தலைவா

இப்படிக்கு உன்னை
திரையில் ரசிப்பவன்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
17.02.2019

மனது வலிக்கிறது !!

மனது வலிக்கிறது !!

எத்தனை ஆயிரம்
வீரர்களை இன்னும்
இழக்கப் போகிறோம்

கயமைத்தனமாக இப்படி
போர்த் தொடுப்போருக்கு
என்னத் தான் வேண்டும்

பிஞ்சு வயதில் தன்
தந்தையை இழந்து
நிற்கும் சிறார்கள்

கட்டிலை மறந்து தன்
கணவனை காவலுக்கு
அனுப்பிய மனைவிகள்

கனவுகள் பல சுமந்து
தாலாட்டி தன் மகனை
வளர்த்த தாய்மார்கள்

தியாகங்கள் பல செய்து
நம் தாய்த் திருநாட்டை
பாதுகாப்பவர்கள்

திருடர்களிடம் இருந்து
பாதுகாக்க வீட்டிற்குப்
பூட்டு போடுவோம்

தீவிரவாதிகளிடமிருந்து
பாதுகாக்க நாட்டிற்கு
பூட்டு போட முடியுமா ?

முறைத்துப் பார்த்தால்
மூன்றாம் உலகப்போர்
மூளுவது நிச்சயம்

உலக வரைபடத்தையே
பின்னர் திருத்த வேண்டி
இருக்கும்

பொறுமைக்கும் ஒரு
எல்லை உண்டு என்பதை
அண்டை நாடு மறந்ததோ

காஷ்மீரை கையிலெடுத்து
குடைச்சல் கொடுத்திடுவது
நியாயமோ

இந்த இழப்பையும் கூட
அற்ப அரசியலுக்காக 
பயன்படுத்த வேண்டாம்

தேசம் காக்க ஓரணி
திரண்டு நம் ஒற்றுமை
உணர்வைக் காட்டுவோம்

தீவிரவாதத்தை திணிக்கும்
நாட்டை உலகத்தில் இருந்து
விரட்டுவோம்

ஜெய் ஹிந்த் !! வந்தே மாதரம் !!
பாரத் மாதா கீ ஜெய் !!🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
16.02.2019

Saturday, February 9, 2019

யானை யானை

யானை யானை

நடமாடும் பிள்ளையாராம்
நான்முகனின் நற்படைப்பாம்
நாட்டிலும் காட்டிலும் சுற்றும்
நெடியதோர் பாலூட்டியாம்

உருவில் மிகப் பெரியதான
விசித்திரமான  உயிரினமாம்
விளங்காத இவ்விலங்கிற்கு
யானையெனும் பெயராம்

பன்னிரு மாதங்களைப்
பேறு காலமாய்க் கொண்ட
பிரம்மாண்ட பருவம் அது
பிரமிப்பான உருவம் இது

எடையளவு அதிகம் இதன்
நடையளவும் மிக அதிகம்
படையளவு உணவு நீருக்கு
மடையளவு ஆறு குளம்

இலையும் தழையும் தன்
ஆகாரமாக உட்கொண்டு
செரித்த பின்னே கழிவை
விதையாக வெளித்தள்ளும்

ஆண்டிற்கு ஒரு யானை
ஆயிரம் மரம் விதைக்கும்
ஆண்டவனின் படைப்பில்
அற்புதமானதோர் சிறப்பு

ஓட்டமெடுத்தால் அதற்கு
ஈடு கொடுக்க முடியாது
காடுகளின் மூத்த குடி
கரி என்னும் யானையடி

யானைகளின் வழித்தடம்
மணற் குவியலின் பிறப்பிடம்
ஆறு நதிகளின் இருப்பிடம்
கண்டறிவது இதன் சிறப்பிடம்

வாழைத் தோப்பைக் கண்டு
வேழம் விளையாடி மகிழும்
கரும்புத் தோட்டத்தில் புகுந்து
கண்டபடி உண்டு களிக்கும்

குழந்தை குட்டிகளோடு
கூட்டமாக இடம் பெயரும் 
கூட்டுக் குடும்பத்திற்கு
களிறு ஓர் உதாரணம்

ஆஜானுபாகு ஆனால்
அங்குசத்திற்கு அடங்கும்
ஆனைமுகனின் அம்சமாம்
ஆனையைப் போற்றுவோம்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
09.02.2019

Friday, February 8, 2019

சிறு சிந்தனைகள்

சிறு சிந்தனைகள்

அளவான பணமும்
அன்பான மனமும்
அமைதியான குணமும்
ஆயுள் காக்கும் மருந்தாம்.

உள்ளே போகும் எதுவும்
வெளியில் வந்தே தீரும்
உள்ளேயே தங்கி விட்டால்
வியாதியும் வந்தே தீரும்.

நாவின் ருசிக்கு மயங்கி
நறுமண உணவாய் உண்டு
காலத்தைக் கடத்தி வந்தால்
காலனும் கிட்டே வருவான்.

பசித்த பின்னே புசியென
பாட்டி சொன்னாள் அன்று
பண்டத்தை பலமாய் தின்று
பரிதவித்திருப்போர் இன்று.

ரசனை மிகுந்த வாழ்வு
இறைவன் அளித்த பரிசு
ரசிக்க நிறுத்தி விட்டால்
இவ்வுலகம் ஆகும் தரிசு.

ஏதோ நினைத்தேன் எழுதுகிறேன்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
08.02.2019

Thursday, February 7, 2019

மன அழுத்தம்

மன அழுத்தம்

மன அழுத்தம்
குறைய சிலர் மது
அருந்துவதுண்டு

மரத்துப் போயி
நாள் முழுக்க புழுங்கி
சாவதுண்டு

உறக்கமில்லா
இரவோடு புரண்டு
படுப்பதுண்டு

உற்சாகத்தையும்
தொலைத்து விட்டு
ஓடி ஒளிவதுண்டு

வெறித்ததோர்
பார்வையோடு விலகிச்
செல்வதுண்டு

விதி வசத்தால்
வழி தவறிப் போய்
விரக்தியடைவதுண்டு

உறவுகளோடு
இணையாது ஒதுங்கிப்
போவதுண்டு

ஊர் முழுக்க
எதிரியாக நினைத்துக்
கொள்வதுண்டு

தனிமைத் தேடி
ஒதுங்கிச் சென்று
மறைந்து கொள்வதுண்டு

தப்பு தப்பா
மனஸுக்குளே
குழம்பிப் போவதுண்டு

நடப்பதெல்லாம்
நன்மைக்கென்று
நம்பப் பழகனும்

நொடிஞ்ச பொழுது
நண்பர்களோட
நட்பு பழகனும்

இதுவும் கடந்து
போகுமென மனதில்
இருத்தனும்

இறைவனது
ஆட்டமென நாமும்
நினைக்கனும்

ஏதோ நினைத்தேன் எழுதுகிறேன்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
07.02.2019

Sunday, February 3, 2019

கண்மணியே

கண்மணியே

ஏறெடுத்து என்னை நீ
பார்க்கவும் வேண்டாம்
செல்லெடுத்து செல்லமாய்
கொஞ்சவும் வேண்டாம்.

இறுக்கமாய் உன் மனதை
வைத்திருக்க வேண்டாம்
உருக்கமாய் நாலு வார்த்தை
பேசவும் வேண்டாம்.

இடுகின்ற பதிவிற்கு
பதில் போட வேண்டாம்
சுடுகின்ற சொல்லால்
சுட்டெறிக்க வேண்டாம்.

ஆன்லைனில் இருந்து நீ
விலகிச் செல்ல வேண்டாம்
உன் பெயர் பார்த்து கனவுறும்
கற்பனை கலைக்க வேண்டாம்.

ஆயுசுக்கும் ஆன்ட்ராய்டில்
அடைபட்டு கிடப்பேன், நான்
அலைபேசி அணையாமல்
அதை உயிரூட்டி மகிழ்வேன்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
04.02.2019

Saturday, February 2, 2019

தனிப் பயணம்

தனிப் பயணம்

பந்தத்தை பையன் பிடிக்க
பந்தமெல்லாம் வீதி நிற்க
பாடையிலே நால்வரோடு
போகும் பயணம் இதுவே
பட்டினத்தடிகள் உரைத்த
தனிப் பயணம்.

பட்டு சட்டை போட்டவரும்
பணமிகுதி கொண்டவரும்
மூச்சடங்கிப் போன பின்னே
போகும் பயணம் இதுவே
பட்டினத்தடிகள் உரைத்த
தனிப் பயணம்.

படித்த பெருமேதாவிகள்
பாமர ஜனங்களும் கூட
பிணமான பின்னாலே
போகும் பயணம் இதுவே
பட்டினத்தடிகள் உரைத்த
தனிப் பயணம்.

வஞ்சியர்கள் புடைசூழ
வாசனை திரவியத்தில்
வகையாக மூழ்கியோரும்
போகும் பயணம் இதுவே
பட்டினத்தடிகள் உரைத்த
தனிப் பயணம்.

சாதி மத பேதங்களின்றி
சமத்துவமாய் எல்லோரும்
ஒற்றை வழிப் பாதையிலே
போகும் பயணம் இதுவே
பட்டினத்தடிகள் உரைத்த
தனிப் பயணம்.

கொண்டு வந்தது யாதடா
மொண்டு செல்வது ஏதடா
மாண்டு போகும் மானிடா நீ
உண்டு உறங்கி கிடக்காமல்
தொண்டு செய்து கழிப்பதை
கண்டு கொண்டு வாழடா.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ பாலா
03.02.2019

Friday, February 1, 2019

தில்லைக்கு வாருங்கள்

தில்லைக்கு வாருங்கள்

ஆடிய பாதத்துடன்
ஆகாச வெளியினில்
ஆடும் கூத்தினைக் காண
தில்லைக்கு வாருங்கள்.

அருவமாய் இருப்பவன்
உருவம் எடுத்த பின்னே
நின்றாடுவதைக் காண
தில்லைக்கு வாருங்கள்.

எங்கும் நிறைந்த பொருள்
ஏகாந்தமாய் அம்மையுடன்
ஆடும் தாண்டவம் காண
தில்லைக்கு வாருங்கள்.

தடுத்தாட் கொண்டருளும்
தயாபர மூர்த்தியை அவனது
தூக்கிய திருவடியுடன் காண
தில்லைக்கு வாருங்கள்.

கயிலாய மலை ஈசனை
கனகசபைதனிலெழுந்து
குஞ்சிதபாதத்துடன் காண
தில்லைக்கு வாருங்கள்.

நீராடி நீறணிந்து
நமச் சிவாயம் நவின்று
தாண்டவத்தைக் காண
தில்லைக்கு வாருங்கள்.

அப்பருக்கு அருளிய
ஆனந்த கூத்தனின்
அம்பலத்தைக் காண
தில்லைக்கு வாருங்கள்.

நடராஜா நடராஜா நடராஜா

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ பாலா
10.02.2019

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...