Search This Blog

Friday, March 30, 2018

பிரகாஷ்

பிரகாஷ்

எனதருமை மருமகனே
என் படைப்புகளை நீ
படித்து பாராட்டு நல்கிடவே
பெருமையாய் இருக்குதடா
பாராட்டு பெற்றமையால் அல்ல
பாராட்டும் நின் புலமையால்
புளகாங்கிதம் அடைந்தேனடா
பிரகாஷ் எனும் பெயருக்கேற்ப
உன் மாமனின் வரிகளுக்கு
வெளிச்சத்தை காட்ட இன்று நீ
விழைந்தாயோ ?

சிதம்பரத்தில் நீ பிறந்து
சென்னையிலே தவழ்ந்து
சேலத்தில் படித்த எங்கள்
செல்லக் குட்டி நீ தானே
ரோகிணியில் பிறந்த
ராஜலட்சுமி மகனே உனை
மாமன் அன்று பார்ப்பதற்கு
மூன்று தினங்கள் ஆனதடா
செல்லாயி இட்ட பிச்சை
சேலத்தில் பெற்ற சிக்ஷை
சென்னையின் கல்லூரியில்
வேரூன்றியது உன் பாதரக்ஷை
நின் தந்தையின் கனவிற்கேற்ப
நிறுத்தாமல் மேல் படித்து நீ
ஆடிட்டர் ஆக வேண்டும்
அதுவே உன் அன்னை ஆசை
கணக்குப் பிள்ளையாக
கண்டனூரான் சோர்ந்திடாமல்
தணிக்கையாளராய் தளராமல்
கண்ணே நீ மேல் வருவாய்.

வாழ்க நீ பல்லாண்டு
வளர்க நின் தமிழ்த் தொண்டு

என்றும் அன்புடன்
உன் தாய்மாமன்
ஆர்.வீ. பாலு..

திவாகர்

திவாகர்

வரதக்குட்டி மாமாவின்
ஜ்யேஷ்ட பௌத்ரன்
வேகனிசத்தை பரப்பிடும்
சிரேஷ்ட ரௌத்ரன்..

வெள்ளைத் தோல்
திவாகருக்கு ஏனோ
வெள்ளையின் மேல்
அடங்காத வெறுப்பு..

கவர்ந்திழுக்கும் கூறிய
பேச்சால் அனைவரையும்
தன்பால் கட்டி இழுக்கும்
கண்மணி நீயடா..

எதுவும் தெரியாதென சொல்ல
உனக்கு என்றுமே தெரியாது
அனைத்திலும் முயற்சிக்கும்
அஷ்டாவதானி நீயடா..

நேமான இல்லத்தாரைப் போல
நொடி நேரத்தில் நீ கோபிப்பாய்
சத்தியமூர்த்தியார் மகனே நீ
சடுதியில் சாந்தமும் அடைவாய்..

தந்தையின் திறன் போன்று
வாத்தியத்தில் கைத்தேறி
தாயினது திறன் போன்று நீ
வாய்ப் பேச்சிலும் தேறினவன்..

முன்கோபமும் முரட்டுத்தனமும்
முந்திக் கொண்டு வந்தாலும் நீ
பெரியவர்களை மதித்திடும்
பிள்ளையாகவே உள்ளாய்..

பிடித்த விஷயத்தில்
மனதினை திருப்பு
படித்த அறிவினை
மக்களிடம் பரப்பு..

எங்கள் சொந்தம் இவனென்று
உற்றார் உனை உரைத்துக் கூறுவர்
எவரையும் அனைத்து நீ சென்றால்
உலகமே உனை உயர்த்தி கூறும்..

தாய் தந்தை சொல் கேட்டு
தங்கமே நீ அமைதியுறு
தம்பியுடன் ஒன்று சேர்ந்து
தரணியில் தலை நிமிரு..

இந்த இனிய பிறந்த நாளில்
உன் மாமனது அன்பு கலந்த
ஆசிகள்..

வாழ்க வளர்க 💐💐💐💐

திருமயிலை

திருமயிலை

கயிலையே
மயிலையாம்
மயிலையே
கயிலையாம்..

அறுபத்து மூவர்
உற்சவம் இங்கு
அமர்க்கலமாய்
நடக்குது..

அடியவர்கள்
போடும் கோஷம்
விண்ணதிர
கேக்குது..

தேவார திருவாசக
பதிகங்கள் ஓதுவர்
திவ்யமாய் ஒருசேர
பக்தியுடன் சுற்றுவர்..

மனமார கபாலியை
தரிசித்து மகிழலாம்
பசியாற பிரசாதங்கள்
புசித்து ரசிக்கலாம்..

இலட்சங்களில்
பக்தர்களின்
தலைகளையும்
காணலாம்..

இராப்பகலாய்
கோவிலுக்குள்
திருப்பணிகள்
பார்க்கலாம்..

பெரியாரின்
பேரன்களே நீங்கள்
திருமயிலைக்கு
வாருங்கள்..

பக்தி மெச்சும்
கூட்டத்தினை
பார்த்துவிட்டு
சொல்லுங்கள்..

அரசியல் மாநாட்டு
கூட்டமுமல்ல, இது
ஆதாயம் பார்த்து
சேர்ந்ததுமல்ல..

இந்துக்களை தினம்
இம்சிக்கும் கட்சியினரே
நாங்கள் சாதுக்களானதால்
நீங்கள் தப்பித்தனரே..

எவரையும் இழித்துப் பேச
இஷ்டமுமில்லை எந்த
மதத்தினர் பழித்தாலும்
நஷ்டமுமில்லை..

ஆயிரங்காலமாய்
அழியாது இருந்திடும்
இந்து மதம் என்கின்ற
இறுமாப்பு எமக்குண்டு..

கயிலையே
மயிலையாம்
மயிலையே
கயிலையாம்..

🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
29.03.18

திண்ணை

திண்ணை

உழைத்து ஓய்ந்ததும்
ஓர் திண்ணை, சற்றே
சிரம பரிகாரத்திற்கும்
ஓர் திண்ணை.

பொக்கை பெரிசுகள்
இரவில் படுத்திட
தேர்வு செய்வதும்
நமது திண்ணை.

நண்பர் கூட்டத்துடன்
நா வலிக்க பேசிட
நன்றாக இருக்கும்
நமது திண்ணை.

திண்டு போல அழகாய்
மேடும் வைத்து அதில்
தலை வைத்து படுக்க
நமது திண்ணை.

கிராமத்து குடிலில்
கண்டிப்பாய் உண்டு
கம்பீரமாய் இருக்கும்
நமது திண்ணை.

தென்னையில்லாத வீடும்
திண்னையில்லாத வீடும்
அந்த காலத்தில் எங்கும்
இருந்ததே இல்லையாம்.

கற் திண்ணையில்
கைமுட்டு கொடுத்து
கால் நீட்டி படுப்பது
குஷியாய் இருக்கும்.

இருபக்க திண்ணையுடன்
இருக்கின்ற வீட்டைக் காண
இதயமடையும் மகிழ்ச்சிக்கு
ஈடு இணை இல்லையே.

வழிப்போக்கர்கள் தங்கவே
வாகாய் அமைந்த திண்ணை
நீரும் மோரும் உபசரிப்பாய் தந்து
நெகிழ வைத்த திண்ணை.

சிறிசுகள் உள்ளே துயில
பெரிசுகள் வெளியே படுக்க
சச்சரவேதுமின்றி அன்று
சந்தோசம் தந்ததும் திண்ணை.

தெருமுனை கோவிலில்
தொன்னை பிரசாதமும்
தெனாவட்டாய் அரட்டைக்கு
திண்ணை சகவாசமும்.

ஆயிரம் கதைகள் பேசும்
அழகிய திண்ணை பலவும்
அழியாமல் கிராமங்களிலே
இன்னும் இருக்க காண்பீர்.

கார் பார்க்கிங் என்கின்ற
கலாச்சாரம் நுழைந்த பின்
காணாமல் போனது நம்
கல் மெத்தை திண்ணைகள்.

வீட்டின் வெளி திண்ணையும்
வீட்டின் நடுவினில் முற்றமும்
சாய்ந்தாட சற்றே ஊஞ்சலும்
சேர்ந்து இருப்பின் ஸ்வர்க்கமே.

திண்ணையில் அன்று
உருண்டு புரண்ட எனது
சிறுவயது நினைவுகளுடன்
வார்த்த வரிகள் இவை.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
31.03.18

Wednesday, March 28, 2018

சிறு சிந்தனைகள்

சிறு சிந்தனைகள்

தகராறு கொள்ளாத ஓர்
தாம்பத்யமே நாளைய
தரணியை உயிர்ப்பிக்கும்
ஓர் வைத்தியமே..

குறைந்த ஊதியத்திலும்
நிறைந்த மனதுடனே
நேர்மையாய் வாழ்ந்திடும்
நல்லோரே மேலோர்..

பசித்தோர்க்கு ஒருவேளை
புசிக்கச் செய்வது கோவிலில்
பகவானைத் தொழுவதை விட
புண்ணிய செயலாகும்..

கற்ற கல்வியை முறையே
செருக்கேதும் கொள்ளாமல்
மற்றோர்க்கு போதிப்பதென்பது
பெற்ற பிறப்பின் மகத்துவமாகும்..

நோயுற்று கிடந்தாலும்
நலிந்து போயிருந்தாலும்
முதிய பெற்றோர்களை
பேணுவதே புண்ணியம்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.03.18

Sunday, March 25, 2018

!! ராம் ராம் !!

!! ராம் ராம் !!

அயோத்தியில் அவதரித்த
ஸ்ரீ அயோத்தியா ராமா
கோசலைக்குப் பிறந்த
ஸ்ரீ கௌசல்ய ராமா
ரகு வம்ச தோன்றலே
ஸ்ரீ ரகு ராமா
வேள்விதனில் தோன்றிட்ட
ஸ்ரீ யக்ஞ ராமா
சிவதனுசு ஒடித்திட்ட
ஸ்ரீ கோதண்ட ராமா
சீதையை மணம் புரிந்த
ஸ்ரீ சீதா ராமா
தந்தை சொல் காத்திட்ட
ஸ்ரீ தசரத ராமா
ஆரண்யம் புகுந்திட்ட
ஸ்ரீ பவித்ர ராமா
குகனோடு ஐவரான
ஸ்ரீ காருண்ய ராமா
அகலிகைக்கு விமோசனமளித்த
ஸ்ரீ மோக்ஷ பலப்பிரத ராமா
சுக்ரீவனுக்கு சரண் தந்த
ஸ்ரீ சரணாகத ராமா
வாலியை வதம் புரிந்த
ஸ்ரீ ஜய ராமா
வானர சேனையமைத்த
ஸ்ரீ வைதேகி ராமா
சிவலிங்கம் பிரதிஷ்டை செய்த
ஸ்ரீ சிவ ராமா
லங்கைக்குப் பாலம் அமைத்த
ஸ்ரீ சேது ராமா
விபீஷணனுக்கு அபயமளித்த
ஸ்ரீ உதாரகுண ராமா
இராவணனை வென்றிட்ட
ஸ்ரீ பராக்கிரம ராமா
அயோத்தியில் முடிசூடிய
ஸ்ரீ பட்டாபி ராமா
ராமராஜ்ஜிய பரிபாலனம் செய்த
ஸ்ரீ ராமா
லவ குசனை ஈன்றிட்ட
ஸ்ரீ சந்தான ராமா
மக்கள் துயர் துடைத்த
ஸ்ரீ துக்க நாசன ராமா
அனைவருக்கும் நலம் தரும்
ஸ்ரீ ஆனந்த ராமா
சர்வ மங்களம் தந்திடும்
ஸ்ரீ கல்யாண ராமா

ராம ராம ஜய ராஜா ராம்
ராம ராம ஜய சீதா ராம்

ஸ்ரீ சீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன அனுமத் சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திகி ஜெய்..

ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு ஸ்ரீ ராமகாதை
ஸ்ரீ ராமனின் திருப்பெயர்களில்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா,
04.03.17

ராமாவதாரம்

ராமாவதாரம்

ஆரியன் ராமன் என்று
அந்நியப்படுத்துவதுண்டு
தமிழன் இராவணனை
தண்டித்தான் என்பதுண்டு.

வைணவ வழி தோன்றல் என்றும்
சைவ வழி இலங்கேசனை அன்று
காரணம் ஏதுமில்லாமல் இவன்
கடுமையாய் கொன்றான் என்பர்.

தந்தை சொல் பேச்சு கேட்டவனாம்
தர்ம நெறி தவறா வாழ்ந்தவனாம்
ஏக பத்தினி விரதமும் ஏற்றவனாம்
எதிரிக்கும் அடைக்கலம் தந்தவனாம்.

ஆரண்யத்திலே அசுரரை அழித்து
சாது முனிவர்களை காத்தவனாம்
வாலியை வதைத்து வஞ்சியை மீட்டு
சுக்ரீவனிடத்தில் கொடுத்தவனாம்.

சபரியின் உபசரிப்பு ஏற்றவனாம்
அகலிகை மோக்ஷம் தந்தவனாம்
ஜடாயுவுக்கு ஸ்ரார்த்தம் செய்து
ஜென்ம விமோசனம் தந்தவனாம்.

அசுர ராஜனோடு போரிடும் முன்னர்
ஆஞ்சநேயனை தூதனுப்பினவனாம்
சரணாகதி கேட்ட விபீஷணனையும்
சகோதரனாய் ஏற்றுக் கொண்டானாம்.

இன்று போய் நாளை வா என்று
இலங்கேஸ்வரனுக்கு போரில்
இறுதியாய் வாய்ப்பொன்றும்
இன்முகத்துடன் அளித்தவனாம்.

விஜயம் பெற்றவுடன் லங்கையை
விபீஷணன் வசம் தந்தவனாம்
பழிச்சொல் தீர்க்க பத்தினியை
அக்கினி புகவும் செய்தவனாம்.

அரசன் என்பவன் பொதுவானவன்
ஆட்சியை காக்கும் பொறுப்பானவன்
குடிமகன் பேச்சிற்கு மதிப்பு அளித்து
குடும்பத்தைக் கூட துறந்தவனாம்.

மூத்த சகோதரனாய் முன்னே நின்று
மூன்று தம்பிகளையும் காத்தவனாம்
இராம ராஜ்ஜிய பரிபாலனம் செய்து
இரகு வம்சத்தின் புகழ் சேர்த்தவனாம்.

திரித்து பேசுவோரே நீங்கள்
தசரதராமன் கதையும் கேட்பீர்
திரேதாயுகத்து அவதாரமான
திருமாலின் பதமும் பணிவீர்..

ஜெய் ஸ்ரீ ராம்  ஜெய் ஸ்ரீ ராம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
25.03.18

ஸ்ரீ ராம நவமி

ஸ்ரீ ராம நவமி

நால்வரில் மூத்தவனாம்
நாராயணன் ஸ்வரூபம்
தந்தை சொல்படி கேட்ட
திரேதாயுக அவதாரம்..

குறையாத செல்வத்தை
நிறைவான மனதோடு
முறையாக தவிர்த்திட்டு
கானகமும் சென்றாய்..

அப்பனின் சொல் கேட்டு
அரசவையின் சுகம் விட்டு
அயோத்தி மாநகர் நீங்கி
ஆரண்யம் சென்றாய்..

ஆற்றைக் கடக்கச் செய்த
அடியவனை அரவணைத்து
ஐவராய் ஆக்கிக் கொண்ட
அண்ணலும் நீயே..

மூவுலகை காத்து நிற்கும்
மகாவிஷ்ணு அவதாரம்
மூதாட்டி சபரி கொடுத்த
எச்சில் பழம் தின்றாய்..

மாற்றான் மனை நாடிய
மந்தியை மறைந்தபடி
பாணத்தை ஏவி விட்டு
பரலோகம் தந்தாய்..

பாதச் சுவடுகள் வைத்து
பதிவிரதை மோக்ஷம் தந்து
பாப விமோசனம் செய்த
காருண்ய மூர்த்தி நீயே..

மாயமான விரித்த வலையில்
மங்கையும் சிந்தை மயங்கி
மாரிசனை பிடிக்க சென்று
மனைவியை பறிகொடுத்தாய்..

புஷ்பக விமானம் விரட்டிய
பக்ஷி ராஜா ஜடாயுவுக்கு
திதியளித்து மோக்ஷம் தந்த
தயாபர மூர்த்தி நீயே..

வாயுமைந்தன் வானரத்தை
வான்வழியே தூது விட்டு
இராவணனை சம்மதிக்க
இலங்கைக்கு அனுப்பினாயே..

சாதுவாய் சரணாகதி அடைந்த
விபீஷணனை வாரியணைத்து
அறுவரென சகோதரனாக்கிய
அய்யனே நீ வாழியவே..

போர் மூண்ட பொழுதெல்லாம்
பராக்கிரமத்தைக் வெளிக்காட்டி
இன்று போய் நாளை வாவென
இலங்கேசனுக்கு உரைத்தனையே..

போரிலே வென்ற பின்னர்
பதிவிரதை சீதா தேவியை
லக்குவனை லஜ்ஜித்தமையால்
அக்கினி பரிட்சையிலிட்டாய்..

தசமுகன் மாண்ட பின்னர்
தயரதன் மைந்தன் நீயும்
விபீஷணனை வாரிசாக்கி
அயோத்தி மாநகரும் வந்தாய்..

பட்டாபிஷேகம் ஏற்ற
பட்டாபி ராமன் நீயே
ராம ராஜ்ஜியம் புரிந்த
ரகு குல திலகன் நீயே..

கோனாட்சி புரியுங்கால்
குடிமகனின் சொல் கேட்டு
குலமகளை நிறை நேரம்
கானகமும் அனுப்பினாயே..

வாலமீகி ஆசிரமத்தில்
வஞ்சியவள் பெற்றெடுத்த
லவ குசரும் கல்வியினில்
தேர்ச்சி மிகப் பெற்றனரே..

ஜனகராஜ புத்திரி ஜானகி
மிதிலாபுரி குமாரி மைதிலி
அயோத்தி திரும்ப மீண்டும்
அக்கினி பரீட்சை கேட்டாய்..

ஐயகோ,

நெருப்பே சுடாத நிலமகள்
அமைதி ததும்பிய அலைமகள்
பரீக்ஷையும் தந்த பக்குவத்தால்
பூமித்தாய் மடியுள் சென்றனல்..

சீதா லக்ஷ்மன பரத சத்ருக்ன
அனுமன் சமேத ஸ்ரீ ராமச்சந்திர
மூர்த்திகி ஜெய் ஜெய் ஜெய்..

ஜெய ஜெய ராம் ராஜா ராம்
ஜெய ஜெய ராம் சீதா ராம்

💐💐💐💐🙏🙏🙏🙏👏👏👏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
24.03.18

(ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு
கவி நடையில் ராமாயணம் வடித்தேன்)

Friday, March 23, 2018

சிறு சிந்தனைகள்

சிறு சிந்தனைகள்

நாளைய உணவை இன்று
உண்ண முடியுமா ? நம்மால்
நடப்பவை எதையும் முன்னம்
உணர முடியுமா ?

காக்கை குருவிகள்
சேர்த்து வைப்பதில்லை
கவலையால் தொய்ந்து
போவதில்லை..

விதி விட்ட வழியில் தான்
வாழ்க்கையும் நகரும்
வீண்பட்ட சிந்தனைகள்
விழலாகிப் போகும்..

பழுதுபட்ட வாகனத்தை
பராமரிப்பதைப் போல
பாழ்பட்ட நம் மனதை
பக்தி வழி வைப்போம்..

ஆறறிவு மதியிழந்து
ஐம்புலனை அலையவிட்டு
நாற்புறமும் திரியாமல்
முக்கண்ணனைப் பணிவோம்..

கவியரசரின் வரிகளில் ;

நாளைய பொழுதை
இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில்
அமைதியைத் தேடுவோம்..

💐💐🙏🙏💐💐

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
24.03.18

Thursday, March 22, 2018

உலக தண்ணீர் தினம்

உலக தண்ணீர் தினம்

கொட்டிய தண்ணீர்
மெல்ல மெல்ல
சொட்டிய தண்ணீர்
ஆயிற்று..

குளத்தில் முங்கி
குளித்தது போயி
குடத்தில் மொண்டு
எடுப்பதாயிற்று..

வானத்து மழை நீர்
மண்ணில் தங்காது
கடலினில் கலப்பது
கொடுமையாகும்..

அணைகளைக் கட்டி
அரவணைக்காமல்
அநியாயமாய் நீரை
வீணடிக்கின்றோம்..

மண்ணை சுரண்டும்
பாவிகள்  நீவீர்
நிதானமாக சற்றே
சிந்திப்பீர்..

நீரைத் தேக்கிடும்
மண்ணும் மறைய
மலடாய்ப் போய்விடும்
நிலங்களுமே..

நாளைய தலைமுறை
நீரைத் தேடி நித்தம்
நாயாய் அலைந்திடும்
நிலை வருமே..

மூன்றாம் உலகப் போர்
மூளும் நிலை கூட இனி
நீரால் வருமென்று
உரைப்பனரே..

மரம் வளர்ப்பின்
காற்று வரும்
மரத்தின் வேரால்
நீர்த் தேக்கம் பெரும்..

கால்வாய் குட்டைகள்
தூறும் வாரிட்டால்
நீரும் தேங்கி நன்கு
செழிப்பாகும்..

மழைநீர் சேமிக்க
முனைந்திடுவோம்
மனையைச் சுற்றி
மண் இடுவோம்..

கான்க்ரீட் காட்டினுள்
மண்ணை மறைத்தால்
தண்ணீர் குறைந்து
கண்ணீரே மிஞ்சும்..

நீரை சேமித்திட
சபதமேடுப்போம்
மரம் வளர்ப்போம்
மழை பெறுவோம்

இன்று உலக தண்ணீர் தினம்..

🌳🌳🌳🌴🌴🌴🌦🌦🌦⛈⛈⛈

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
22.03.18

புது மதம்

புது மதம்

உதிர்ந்த திராட்சை
விலை போகாது
பிரிந்த மான் கூட்டம்
உயிர் பிழைக்காது..

ஜைனமும் பௌத்தமும்
பிரிக்க நினைத்தாலும்
இந்து மதம் என்றும்
தேய்ந்ததில்லை..

ஒரு தாய் மக்களாய்
ஓர் மதத்தின் கீழ்
ஒன்றாய் வாழ்ந்த
தலைமுறை நாம்..

சைவம் வைணவம்
சீக்கியம் லிங்காயத்
நாமம் பலவாகினும்
நாம் இந்துக்களே..

பிளவு படுத்தி அதில்
மகிழ்ச்சியுறவே எம்
மதத்தை கையிலெடுக்கும்
மூடர்களே..

பாரதத் தாயின்
பிள்ளைகள் எம்மை
மொழியால் மதத்தால்
பிரிக்காதீர்..

தாய் மதம் விடுத்து
தனி மதம் தந்திடும்
தவறிழைக்கும் செயல்
புரியாதீர்..

மொழியால் பிரித்தோர்
தோற்றுப் போய் இன்று
புது மதங்களை நிறுவப்
பார்க்கின்றீர்..

இஸ்லாமிய கிருத்துவ
சகோதரர்கள் கூட அன்று
எங்கள் மதத்தின் கீழ்
இருந்தவரே..

ஆங்கிலேயர்கள் நமை
அடிமைப்படுத்த அன்று
மொழியால் மதத்தால்
பிரித்தனரே..

அதுபோல் அந்நிய
கைக்கூலிகள் இன்று
அன்னை பாரதத்தை
குலைக்கின்றனரே..

புது மாநிலம் போல
புது மதம் உண்டாயின்
புரட்சியும் வெடிக்கும்
நிலை வருமே..

குழப்பத்தை உண்டாக்கி
குளிர் காயும் மாந்தர்கள்
கும்மாளம் போடும்
நிலை வருமே..

சாதி மதமென்னும்
சடுகுடு ஆட்டத்தில்
சகதியில் வீழ்கின்ற
நிலை வேண்டாம்..

அமைதி வேண்டும்
ஆரோக்கியம் வேண்டும்
மத நல்லிணக்கத்துடன்
மண் மலர வேண்டும்..

வருத்தமும் வேதனையும்..
😢😢😢😢😢😢

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
22.03.18

Wednesday, March 21, 2018

ரத யாத்திரை

ரத யாத்திரை

இந்து பூமியடா
இது எங்க பூமியடா

ராமனின் நாட்டில்
ரதயாத்திரைக்கு
குந்தகம் வைக்கும்
ராவணர்களே..

அயோத்தி அரசன்
அகல்யா மோக்ஷன்
அவனது வருகையில்
அஞ்சுவதேன்..

சமண பௌத்தரையும்
சமாளித்து வளர்ந்த
சனாதன மதமாம் எம்
இந்து மதம்..

சச்சரவின்றி
சாந்த வழியினில்
சாலையில் போகுது
ராம ரதம்..

எல்லா மதத்திலும்
இருக்கும் இறைவன்
அமைதியே அன்றி
வேறு இல்லை..

இஸ்லாமிய கிருத்துவர்
இந்துக்கள் யாவரும்
இணைந்து இருப்பது
இறையாண்மை..

சாதி மதத்தால்
சூழ்ச்சிகள் செய்து
பிரித்தாள நினைப்பது
அரசியலாம்..

கடவுளைத் தொழுவோர்
காட்டுமிராண்டிகளென
கூவும் மாந்தர்கள்
சிந்திப்பீர்..

இந்து கடவுளரை
இழிவு படுத்துவோர்
சிறுபான்மை மதத்தை
ஒதுக்குவதேன் ?

பெயரளவுக்கு இங்கு
பெரும்பான்மையெனினும்
அரசியல்வாதிகளால் நாம்
சிறுபான்மையினரே..

ஓட்டு வங்கியை
பொறுக்கியெடுக்க
ஓயாமல் மக்களை
பிளவிடுவர்..

மத்திய சர்க்கார்
மோடியின் சர்க்கார்
மறைவதே இவரது
முழுமூச்சாம்..

கையாலாகாத
கட்சிகள் எல்லாம்
கைகோர்த்திருப்பது
ஆபத்தாம்..

அமைதி வழியில்
அயோத்தி வழியில்
ரத யாத்திரையும்
முன்னே போகுதடா..

ஜெய் ஸ்ரீராம்

இந்து பூமியடா
இது எங்க பூமியடா

ஒன்று படுவோம்
உயர்வு அடைவோம்..

வந்தே மாதரம் ஜெய் ஹிந்த்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
21.03.18

Sunday, March 18, 2018

கலியுகம்

கலியுகம்

இருப்பது சிறையிலே
இல்வாழ்க்கையில்
இணைந்தவரோ
மருத்துவமனையிலே..

தோழியுடன் சேர்ந்து
தமிழகத்தை சுருட்டி
சேர்த்த சொத்துக்கள்
சாக்காடு வாராது..

மக்களை ஏமாற்றி
மன்னார்குடி சேர்த்தவை
தம்பிகள் கையிலே
தாராளமாய்ப் புரளுது..

மணம் முடிக்காமல்
மங்கையவள் கதி போல
வாரிசு இல்லாமல் இந்த
வஞ்சியவள் கதியுமாகும்..

கொள்ளையடிப்போர்க்கு
கைமேல் பலனுண்டு
கலியுகத்தில் என்பதை
கண்கூடாய்க் காணலாம்..

நலிவுற்ற நடராசர்
நலம் பெற்று தேறிட
மனித நேயத்துடன்
மகேசனைப் பணிகின்றேன்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
18.03.18

Tuesday, March 13, 2018

புரியாத புதிர்

புரியாத புதிர்

காலை சூரியனும் மாலை சந்திரனும்
உதிக்கச் செய்வது யாரு

மரம் செடிகளில் காய் கனிகள் தந்து
உணவுக்கு வழி செய்தது யாரு

ஆறு பருவங்களாய் ஆண்டைப் பிரித்து
வாழ்க்கையை நடத்துவது யாரு

வறட்சியை விரட்ட மழை பொழிவித்து
வையத்தைக் காப்பது யாரு

மணமுடிந்ததும் மகிழ்வுடன் கூடிட
மக்களைத் தருவது யாரு

குழந்தை வயதில் கவலையின்றி
கொண்டாட்டம் தருவது யாரு

பருவ வயதில் மனதை மயக்கி
அலைபாய விடுவது யாரு

வேளா வேளைக்கு பசிக்கச் செய்து
உண்ணத் தூண்டுவது யாரு

வயிற்றுனுள் சென்ற உணவு செரிக்க
வகையாக பிரிப்பது யாரு

புசித்த உணவை போஷாக்கு தந்து
இரத்தத்தில் கலப்பது யாரு

உழைத்த பின்னே களைப்பு தீர
உறங்கச் செய்வது யாரு

பிறந்தோர் ஒருநாள் இறப்பதென்பதை
வழி செய்து விட்டது யாரு

யாரு யாரு யாரு அவர் யாரு யாரு யாரு
நம்மை படைத்தவன் தான் அது பாரு

இயங்கச் செய்வது இயற்கையானாலும்
இயங்கச் செய்வது இறைவனானாலும்
அனைத்தையும் மீறிய ஓர் சக்தி இந்த
அகிலத்தையே ஆட்டுவிப்பதைப் பாரு..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
13.03.18

Sunday, March 11, 2018

அவரும் இவரும் 😊😊

அவரும் இவரும் 😊😊

தொண்ணூரைத் தாண்டியும்
தொந்தரவு கொடுத்தவர்...

தொண்ணூரைத் தாண்டியும்
தொந்தரவாய் இருப்பவர்...

வாரிசு காணாத வைக்கத்து வீரர்
வாரிசு மாளாத திருக்குவளைக்காரர்

தமிழ் நடையை மாற்றிய திராவிடர்
தமிழன் நடையை மாற்றிய திராவிடர்

ஆதாயத்திற்கு கொள்கை வளர்த்தவர்
அரசியலுக்கு கொள்கை வளர்த்தவர்

அரசியலில் சினிமாவை புகுத்தியவர்
சினிமாவில் அரசியலை புகுத்தியவர்

சாமி இல்லையென இவர்
சாகும் வரை  கூவியவர்..

சாமி இல்லையென இவர்
சந்தர்பத்துக்கேற்ப கூறுபவர்..

பேசிப் பேசியே பெரிதாய்
கைத்தட்டலைப் பெற்றவர்
பேச இயலாமல் தற்போது
பிணம் போல வாழ்கிறார்..

எது எப்படியோ....

திருவாரூர் திருமகன்
தில்லையின் மருமகன்
கோபாலபுரத்து கோமகன்
கருப்பு கண்ணாடி நாயகன்
நூறாண்டு காண வேண்டி
மனமார வாழ்த்துகிறேன்..

இருந்தும் இல்லாமல் இன்று
இறந்தவரைப் போல இவர்
இருப்பதைப் பார்க்கையில்
பாவக்கணக்கு தீர்ந்த பின்னே
பரலோகம் செல்வதே இவரது
விதியென்று தோன்றுகிறது..

😊😊😊😊😊😊😊😊😊😊

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
11.03.18

Saturday, March 10, 2018

வளர்ச்சியா / வீழ்ச்சியா

வளர்ச்சியா / வீழ்ச்சியா

முகம் தெரியாத
நட்புகள் பலவும்
முகநூல் வாயிலாய்
நன்றாய் கிடைத்தது..

வாரம் முழுமைக்கும்
அரட்டையில் பயணிக்க
வாட்ஸப் என்னும் புதிய
வாகனம் கிடைத்தது..

தட்டச்சு செய்து
தொய்ந்த கைகள்
தனிமையை மிகவும்
விரும்பி ரசித்தது..

மெல்ல மெல்ல
நிஜத்தை விட்டு
நிழலுக்குள் சென்று
மறையத் தோணுது..

நேரில் பார்த்தும்
நலம் விசாரிக்காமல்
கைப்பேசியும் கையுமாய்
திரிய வைக்குது..

தூர்தர்ஷன் மட்டும்
அன்று இருந்த போது
சீரியல் சண்டைகள்
இல்லாமல் இருந்தது..

தொலைபேசி மட்டும்
வீட்டினுள் இருகையில்
நிம்மதியாய் வாழ்க்கை
கழிந்து சென்றது..

குழந்தைகள் கூட
கொஞ்சிட வருகையில்
தொந்தரவு செய்வதாய்
நினைக்கத் தோணுது..

இயந்திரமாய் ஓடும் போது
இயல்பு நிலை கூட இல்லாமல்
இருபத்தினாலு மணி நேரமும்
குறைவாகவே தெரியுது..

இலக்கில்லாமல் ஓடும்
இவ்வாழ்க்கை பாதையில்
இன்னும் என்னென்னவாகும்
இறைவா நானறியேன்..

வளர்ச்சியா / வீழ்ச்சியா ??
😊😊😊😊😊😢😢😢😢😢

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
11.03.18

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...