Search This Blog

Tuesday, January 29, 2019

நடராஜா நடராஜா நடராஜா

நடராஜா நடராஜா நடராஜா

நிகழெதிரிறந்த காலத்தை
நிர்ணயிக்கும் நாயகன் நீ
காலை மாலை இரவென்று
கதிரவனாய் அருள்பவன் நீ
முக்காலத்தை வழி நடத்தும்
மூவுலகத்தின் முதல்வன் நீ
எக்காலமும் சரணடைவேன்
எனையாட்க் கொள்வாயே.

நடராஜா நடராஜா நடராஜா

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
29.01.2019

நடராஜா நடராஜா நடராஜா

நடராஜா நடராஜா நடராஜா

நிகழெதிரிறந்த காலத்தை
நிர்ணயிக்கும் நாயகன் நீ
காலை மாலை இரவென்று
கதிரவனாய் அருள்பவன் நீ
முக்காலத்தை வழி நடத்தும்
மூவுலகத்தின் முதல்வன் நீ
எக்காலமும் சரணடைவேன்
எனையாட்க் கொள்வாயே.

நடராஜா நடராஜா நடராஜா

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
29.01.2019

Monday, January 28, 2019

கண்ணா

கண்ணா

கூப்பிட்ட குரலுக்கு
வா வா கண்ணா
குழலூதி மயக்கிட
வா வா கண்ணா

கோபியரை கொஞ்சாது
வா வா கண்ணா என்
கூந்தலையே கலைத்திட
வா வா கண்ணா

மயிலிறகை சூடியே
வா வா கண்ணா என்
மார்பினிலே சாய்ந்திட
வா வா கண்ணா

கார்முகில் வண்ணனே
வா வா கண்ணா என்
கைத்தளம் பற்றிடவே
வா வா கண்ணா

இமை மூடி இருக்கையிலே
வா வா கண்ணா எனை
இரு கையால் அணைத்திட
வா வா கண்ணா

கண்ணா கண்ணா 🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.01.2019

Tuesday, January 22, 2019

கண்ணா

கண்ணா

குழலாக நான் மாறி
கையில் தவழ வேணும்
கார் குழலாய் உருமாறி
தலை மேலமர வேணும்
மயிலிறகாய் கேசத்தில்
அழகு சேர்க்க வேணும்
பாரிஜாதப் பூவாய் நான்
பக்கம் இருக்க வேணும்
ராதை போல் உன்னோடு
இணைந்திருக்க வேணும்
இப்பேதைக்கு கண்டிப்பாய்
நீ அருள் புரிய வேணும்..

கண்ணா கண்ணா 🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
23.01.2019

Friday, January 18, 2019

ஈசனே சிவகாமி நேசனே

இன்று பிரதோஷம் 🙏🙏

ஐயனே !

அலங்காரம் இல்லாதவன் நீ
ஆபரணம் அணியாதவன் நீ
இமயத்தில் வீற்றிருப்பவன் நீ
ஈரேழு லோகத்தின் அதிபதி நீ

உமையாளுடன் இருப்பவன் நீ
ஊர்த்துவ தாண்டவத்தான் நீ
எமனை எட்டித் தள்ளியவன் நீ
ஏற்றமிகு வாழ்வு அளிப்பவன் நீ

ஐந்தெழுத்தில் அருள்பவன் நீ
ஒன்று பலவாக நிறைந்தவன் நீ
ஓங்காரத்தின் உட்பொருளும் நீ
ஒளஷதமாய் ரக்ஷிப்பவன் நீ

ஆனந்த தாண்டவமே !

நின் தூக்கிய திருவடியை
சற்றே மாற்றிக் கொள்வாய்
என் சிரசின் மீது உன் பாதத்தை
சற்றே இருத்திக் கொள்வாய்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும இறைவா போற்றி

திருச்சிற்றம்பலம்.

அன்பன், சிதம்பரம் ஆர். வீ பாலா
18.01.2019

Thursday, January 17, 2019

தை வெள்ளிக் கிழமை

தை வெள்ளிக் கிழமை

தை வெள்ளிக் கிழமையிலே
அம்பிகையை சரணடைந்து
வேண்டும் வரம் பெற்றிடவே
விளக்கேற்றி வழிபடுவோம்.

ஆடி தை மாத வெள்ளிகள்
அம்மனுக்கு உகந்தவையாம்
ஆசாரமாய் தொழுதிட அவள்
அனுக்கிரஹமும் புரிபவளாம்,

சுமங்கலிகள் பூஜை செய்ய
சௌபாக்கியம் தந்திடுவாள்
கன்னியர்கள் வழிபடவே நற்
கணவனையும் அருளிடுவாள்.

வேப்பிலையில் வீற்றிருக்கும்
மாரியம்மனைத் தொழுவோம்
கூட்டமாக கரகமெடுத்து கூழ்
படைத்து மகிழ்வோம்.

மாவிலைத் தோரணம் கட்டி
மாவிளக்கு மாவும் வைத்து
மனமுருகிப் பிரார்த்திக்கவே
மங்களமான வாழ்வளிப்பாள்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ பாலா
18.01.2019

Wednesday, January 16, 2019

காணும் பொங்கல்

காணும் பொங்கல்

உறவினரோடு
ஒன்றாய்க் கூடி
உற்சாகமாய்
மகிழலாம்.

வகை வகையாய்
உணவு சமைத்து
உட்கார்ந்து புசித்து
மகிழலாம்.

சமூக அக்கரையில்
சமத்துவ பொங்கல்
படையலும் இட்டு
மகிழலாம்.

ஆற்றுப் படுகை
கடற்கரை என்று
கூட்டமாய்க் கூடி
மகிழலாம்.

சொந்தங்களோடு
சுற்றுலா சென்று
சந்தோஷித்து
மகிழலாம்.

அலுப்பும் தீர மன
அழுத்தமும் தீர்ந்திட
அனைவரோடு பேசி
மகிழலாம்.

காணும் பொங்கல் இது
வேணும் பொங்கல் இங்கு
அனைவரையும் குஷியாக
காட்டும் பொங்கல்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
16.01.2019

Tuesday, January 15, 2019

மாட்டுப் பொங்கல்

மாட்டுப் பொங்கல்

உழவுக்கு கை கொடுக்கும்
காளைக்கு பண்டிகையாம்
உரம் போட்டு ஏர் ஓட்டிடும்
காளைக்கு பண்டிகையாம்
பால் தந்து நமைக் காக்கும்
பசுவுக்கு பண்டிகையாம்
எப்பவுமே மடியும் நிறைந்த
எருமைக்கு பண்டிகையாம்
விளைச்சலுக்கு உதவுகின்ற
மாட்டினங்களின் பண்டிகை
விளைநிலத்தில் உழுவுகின்ற
விவசாயிகளின் பண்டிகை.

மாட்டுப் பொங்கல் ஆம் நம்
நாட்டுப் பொங்கல் இதுவே.

பொங்கலோ பொங்கல்
மாட்டுப் பொங்கல் !!!!!

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
15.01.2019

Monday, January 14, 2019

தை பிறந்தது

தை பிறந்தது

விடியற்காலையில்
விளக்குகள் ஏற்றி
முப்பது நாட்களும்
கோவில் சென்றோம்.

பனி படர்ந்திருந்த
மார்கழி முடிந்தது
பசுமை துளிர்ந்து
தையும் பிறந்தது.

புதுப் பானையிலே
பொங்கல் இடுவோம்
மஞ்சள் குருத்து வெட்டி
அலங்கரித்து வைப்போம்.

பொங்கி வரும் வேளை
பூரித்து நாம் மகிழ்வோம்
பொங்கலோ பொங்கலென
கூக்குரலிட்டு குதிப்போம்.

ஏலம் முந்திரி சேர்த்த
சர்க்கரைப் பொங்கலும்
நெய் மிளகு கூட்டி வெண்
பொங்கலும் படைப்போம்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு
சமையலில் சேர்ப்போம்
சந்தோஷமாய் ஒன்று கூடி
சூரியனைத் துதிப்போம்.

கட்டிக் கரும்பினை
இல்லத்தில் கொணர்ந்து
கதிரவனுக்கு காலையில்
படையலில் சேர்ப்போம்.

தை தையென
தையும் பிறந்தது
ஆனந்தத் தை
அள்ளித் தந்தது.

பொங்கலோ பொங்கல் !!
பொங்கலோ பொங்கல் !!

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
14.01. 2019

Saturday, January 12, 2019

இளைஞர் தினம்

இளைஞர் தினம்

இயலாதது என்று
இல்லாதது நமது
இளமைப் பருவம்

முதுமையில் மகிழ்வை
தீர்மானிப்பது ஒருவரது
இளமையின் உழைப்பே.

வாலிப வாழ்க்கையே
வயோதிக வாழ்வினை
வழி வகுத்துத் தரும்.

வருத்தப்படாத வாலிபர்களை
வண்ணத்திரையில் ரசிக்கலாம்
வாழ்க்கைத் திரையில் அல்ல.

உழைத்து களைத்திடும்
வாலிபத்தின் உழைப்பு
வயோதிகத்து பிழைப்பு.

சுவாமி விவேகானந்தர்
பிறந்த இந்நாளை இளைஞர்
தினமாக கொண்டாடுவோம்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ பாலா
12.01.2018

Thursday, January 10, 2019

காதலியே

வெள்ளிக் கிழமை சிறப்பு கவிதை

காதலியே

கண் மூடி கிடக்கையிலே
கண்ணே உந்தன் நினைப்பு
காலை மாலையும் எப்பவுமே
காதலி உன் மேல் ஈர்ப்பு.

ஓராயிரம் அழகிகளைக்
கண்டாலும் என் மனதில்
ஒருத்தியின் நினைப்பும்
வருவதில்லை.

ஓரக் கண்ணால் தினம்
பார்த்து நகரும் செல்ல
சிறுக்கி உனை மறக்க
முடிவதில்லை.

என்னுடைய காதலை நான்
எப்படித் தான் செல்லுவது
ஏக்கத்தையும் மறைத்தபடி
எத்தனை நாள் வாழுவது ?

அன்பே அருகினில் வருவாயா
ஆசை பொங்க அணைப்பாயா
ஆயிரம் முத்தம் அள்ளித் தந்து
ஆண்டுகள் பல கூடி வாழ்வாயா.

ஒருதலைக் காதல் கவிதை 🌷🌷

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ பாலா
11.01.2019

என் அம்மாவின் பிறந்த நாள்

என் அம்மாவின் பிறந்த நாள்

எவரை ரொம்ப பிடிக்கும்
எனும் கேள்வி கேட்டால்
எல்லோரும் சொல்லுவது
அம்மா எனும் உறவையே.

அகிலத்தில் பிறந்ததுமே
அனைத்து சேய்களும்
முதன் முதலில் பார்ப்பது
தாயெனும் உயிரையே.

அனைத்தும் துறந்து விட்ட
ஆதி சங்கர பகவத் பாதாள்
அந்திமக் கிரியை செய்தது
அம்மா எனும் உறவிற்கே.

பந்த பாசம் அறுத்து விட்டு
பரதேசியான பட்டினத்தார்
ஈமக்கிரியை செய்ய வந்தது
ஈன்றெடுத்த அன்னைக்கே.

மாதா பிதா குரு தெய்வம்
வரிசையிட்டு வைத்தாலும்
முதல் மரியாதை எப்பவும்
வயிற்றில் சுமந்த தாயிற்கே.

அம்மா சொன்ன பின்னரே
அப்பன் யாரெனத் தெரியும்
அம்மா வளர்க்கும் விதத்திலே
அனைவர் வாழ்வும் அமையும்.

பஞ்சு மெத்தையை விடவும்
பெற்றவளின் புடவை தான்
பிஞ்சு குழந்தைக்கு என்றும்
போதுமான இதத்தைத் தரும்.

பெண் குழந்தைகளைப் பெற்று
பயந்தபடி நீ இருந்தாய் பையன் பிறந்தானென்றதும் பேரானந்தம்
அடைந்து போனாய்.

அன்று அடைந்த ஆனந்தம்
இன்றளவும் இருக்கிறதே
என்னை இன்று நீ பார்த்தாலும்
அந்நாளின் பாசம் தெரிகிறதே.

பிறந்த நாள் வாழ்த்து கூறி
பொதுவாக இருக்க மாட்டேன்
எந்நாளும் உன் நலம் வேண்டி
பிரார்த்திக்க மறக்க மாட்டேன்.

🌷🌷🌷🌹🌹🌹🌻🌻🌻🌹🌹🌹

அம்மா உனது ஆசிகளுடன்,

அன்பு மகன் பாலு...

Wednesday, January 9, 2019

அழகு தமிழ்

அழகு தமிழ்

பெருங்காயம் : சுவையைக் கூட்டும்
பெருங் காயம் : வலியைக் கூட்டும்

திங்கள் : வாரத்தில் ஒன்று
திங்கள் : வருடத்தில் பன்னிரண்டு
திங்கள் : வானத்தில் உண்டு (நிலா)

காயம் : விழுந்தால் ஏற்படும்
காயம் : முடிவில் வீழும் (உடல்)

மனம் : உணர்ந்தால் புரியும்
மணம் : முகர்ந்தால் புரியும்

தையல் : ஆடை தைக்கலாம்
தையல் : ஆடை அணியலாம் (பெண்)

நூல் : நூற்க பயன்படும்
நூல் : கற்க பயன்படும் ( புத்தகம்)

கல் : பாதைக்கு தேவை
கள் : போதைக்கு தேவை

களி : சாப்பிடும் பொருள்
களி : சந்தோஷப் பொருள்

கழி : கணிதத்தில் ஒன்று
கழி : கட்டையில் ஒன்று
கழி : கழிசலில் ஒன்று

உடை : உடைக்கலாம்
உடை : உடுத்தலாம்

ஒளி : மறைவில் ஒளிவது
ஒளி : மறைவை ஒளிர்ப்பது

வலி : அடிபட்டால்  வலிக்கும்
வளி : அண்டத்தைக் காக்கும் (காற்று)

முடி : வளர்க்காமல் முடிக்கனும்
முடி : வளர்ந்த பின் எடுக்கனும்

இடி : மேலிருந்து விரிசல்
இடி : பக்கத்தில் உரசல்

மடி :  மடியில் துணி
மடி : துணியை மடி

படி : பார்த்து படிக்கவும்
படி : பார்த்து (படி) ஏறவும்

சும்மா தங்கத் தமிழில் ஓர்
வார்த்தை விளையாட்டு 👏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
09.01.2019

Tuesday, January 8, 2019

வாழ்க்கை

வாழ்க்கை

வினாத்தாள் தெரியாமல்
விடையெழுதச் செல்லும்
மாணாக்கரைப் போன்றது
நம் வாழ்க்கை.

நாளை நிஜமென்பது
விடிந்த பின்னரென்று
உணர்த்திச் செல்வது
நம் வாழ்க்கை.

இருந்தும் இல்லாமலும்
இல்லாதும் இருப்பதுமாய்
இ(பி)ன்னல் பல நிறைந்தது
நம் வாழ்க்கை.

மண்ணுக்கும் பொன்னுக்கும்
பெண்ணிற்கும் என்றைக்கும்
போட்டியிட்டு மடிவெதென்பது
நம் வாழ்க்கை.

ஆலிலையின் வழி வந்து
வாழையிலை உணவுண்டு
தென்னையிலை துயிலுவதே
நம் வாழ்க்கை.

ஏதோ நினைத்தேன் எழுதுகிறேன்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
09.01.2019

குருவே சரணம்

குருவே சரணம்

கருணா மூர்த்தியே
கலியுகத் தெய்வமே
காமாக்ஷி ஸ்வரூபமே
காஞ்சி மா முனிவரே

அடியவர்களை ரக்ஷித்து
முழு நூற்றாண்டு வாழ்ந்து
கயிலாயப் பதவி ஏற்று
கால் நூற்றாண்டாகிறது.

கண் கண்ட தெய்வமே
கடவுளை நேரில் எவரும்
கண்டவர் இல்லர் என்பது
கண்ணில்லாதவர் கூற்று.

நடமாடும் தெய்வத்தை
தரிசினம் செய்யுங்கால்
கடவுளையே தரிசிப்பதாக
மனதிலெழும் பக்தி ஊற்று.

மஹா பெரியவாளை
மனதார நினைத்தால்
மனதில் இனம் புரியா
மகிழ்ச்சி நிறையும்.

வாகனம் செலுத்த
எரிபொருள் தேவை
வாழ்க்கை செலுத்த
குருவருள் தேவை.

குருவடி பணிவாம்
திருவடி தொழுவோம்
கவலையும் அகன்றிட
காலடி பற்றுவோம்.

ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர !!

காஞ்சி மஹா ஸ்வாமிகள்
சித்தியடைந்து இன்றோடு
இருபத்தைந்து ஆண்டுகள்
ஆகிறது. 🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
08.01.2019

Monday, January 7, 2019

இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீடு

சாதிவாரியாக இங்கே
இட ஒதுக்கீடும் உண்டு
சாதிகள் இல்லையென
சமத்துவக் கூற்றுமுண்டு.

வர்ணாஸ்ரம தர்மத்திற்கு
வக்காளத்து வாங்குவோர்
ஐம்பது ஆண்டுகளாகியும்
ஒதுக்கீட்டை மறுப்பதில்லை,

ஓட்டு வங்கிக்கு
ஆதாரமாக இங்கு
அரசியல் கட்சிகள்
சாதியைப் பார்க்கும்.

மெத்தக் கொழுத்த
மிராசுதாரரும் கூட
சாதியின் போர்வையில்
சலுகைகள் பெறுவர்.

பிறப்பால் முற்படுத்தப்பட்ட
வகுப்பாயின் ஒருவர்க்கு
பணம் காசு இல்லையெனில்
பிற்படுத்தப்பட்ட நிலையே.

ஏற்றத்தாழ்வைக்
களைவது யாரு ?
சமூக நீதியினைக்
காப்பவர் யாரு ?

நச்சென்ற அறிவிப்பை
வெளியிட்டார் நரேந்திரர்
முற்படுத்தப்பட்டவர்க்கும்
பத்து சதவிகிதம் என்றார்.

தாமதமாக கிட்டிய நல்ல
தீர்ப்பு என்பதால் இதை
எதிர்த்து கோஷமிட இங்கு
எவர்க்கும் துணிவில்லை,

இனி வெளிநாடு சென்று
வேலை தேடாமல் நமது
உள்நாட்டிலேயே இட
ஒதுக்கீட்டில் பணி புரிவர்.

அரசு உத்யோகத்தில் இனி
ஆக்கப்பூர்வ போட்டி எழும்
படித்த இளைஞர்க்கு நல்ல
பதவி உயர்வும் வரும்.

வாழ்க வளர்க ! ஜெய் ஹிந்த் !
🌷🌷🌹🌹🌺🌺🌻🌻

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
08-01 2019

Sunday, January 6, 2019

நடராஜா

நடராஜா

கருவாக உருவெடுத்து
காசினியில் வந்தோம்.

குருவாக நல்லோரை
அடிபணிந்து இருப்போம்.

திருவோடு ஏந்தாமல்
கை நிறைய சேர்ப்போம்.

தெருவோடு செல்கையிலே
கொண்டேதும் போவோம்.

தருவாக வாழும் போது
மற்றவர்க்கு அளிப்போம்.

எருவாக அந்திமத்தில்
காட்டிற்கு போவோம்.

உருவாக என்னை நீயும்
ஆட்கொள்ள வேணும்.

திருச்சிற்றம்பலத்துறையும்
தில்லை நடராஜா.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
06.01.2019

Saturday, January 5, 2019

ஏன் படைத்தாய் இறைவா

கடவுளே

பெண்ணை ஏன் படைத்தாய் ?
கண்ணை ஏன் கொடுத்தாய் ?

காணும் இடங்களெல்லாம்
கவர்ச்சிமிகு கன்னியர்கள்
கருப்பும் சிகப்பும் கலந்து
காந்தமாய் ஈர்ப்பவர்கள்.

சூரியனின் ஈர்ப்பினிலே
கோள்கள் சுற்றி வரும்
சுந்தரிகள் ஈர்ப்பினிலே
காளையர்கள் சுற்றிடுவர்.

தாவணியைக் கடந்தாலே
தடுமாறிப் போகின்றோம்
சேலையைப் பார்த்தாலே
சொக்கியே போகின்றோம்.

படுக்கையிலே புரண்டபடி
பகல் கனவு காணுகிறோம்
சோம்பலையும் முறித்தபடி
சொப்பனத்தில் மிதக்கிறோம்

வயது வித்தியாசமின்றி
வாலிபர்கள் நோக்கிடவே
பட்டாம்பூச்சி கணக்காக
பளிச்சென்று திரிகின்றீர்.

உடைக் குறைப்பு செய்து
உள்ளத்தை கவர்கின்றீர்
பிஞ்சு மனதையும் கூட
பாடாய்ப் படுத்துகின்றீர்.

வழி மாற்றி சென்றாலும்
விழி முன்னர் வருகின்றீர்
பழி எம்மேல் போட்டுவிட்டு
முழி பிதுங்க செல்கின்றீர்.

ஆணுக்கு நிகர் என்று
அனைத்திலும் நீற்கின்றீர்
தேகத்தை தா(ராள)மாய்
திறந்தும் வைக்கின்றீர்.

இனிப்பைத் தேடி வரும்
எறும்புக் கூட்டம் போல
வனப்பை நாடி என்றும்
அரும்புக் கூட்டம் சேரும்.

மான் கூட்டத்தை தேடும்
மன்மத சிங்கங்களுடனே
மல்லுக்கு வம்பிடாமல்
மெளனியாய் நகருங்கள்.

கடவுளே

பெண்ணை ஏன் படைத்தாய் ?
கண்ணை ஏன் கொடுத்தாய் ?

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
05.01.2019

Wednesday, January 2, 2019

இறவா இரவு

இறவா இரவு

இரவு மட்டும்
இல்லாதிருந்தால்
இவ்வுலகம் என்றோ
இல்லாது போயிருக்கும்.

அக்கிரமம் செய்யும்
அயோக்கியரும் கூட
ஆழ்ந்து உறங்கிடவே
ஓர் இரவு தேவை.

அலுவலகத்தின்
அலுப்பை மறந்து
அசதியாய் துயில
ஓர் இரவு தேவை.

பகலில் உழைத்து
ஓடாய்த் தேய்ந்து
ஒய்யாரமாய் ஓய
ஓர் இரவு தேவை.

வெயிலில் வதங்கி
வாடும் வேளையில்
சுகமாய் சாய்ந்திட
ஓர் இரவு தேவை.

ஊடலுக்குப் பின்
உறவும் நிலைக்க
கூடலைத் தூண்டும்
ஓர் இரவு தேவை.

புதுமண தம்பதியர்
புரிதல் நிலைத்திட
காரிருள் சூழ்ந்த
ஓர் இரவு தேவை.

இரவு மட்டும்
இல்லாதிருந்தால்
இவ்வுலகம் என்றோ
இல்லாது போயிருக்கும்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
03.01.2019

சுகம்

வாய்க்கு ருசியாக அரு
சுவையான உணவுண்டு
நா சிவக்க வெற்றிலை
பாக்கோடு சுண்ணாம்பு
இளைப்பாற இதமாய்
இலவம் பஞ்சு கட்டிலில்
ராஜாவின் பாடல்களை
ரம்மியமாய்க் கேட்டபடி
தூங்கியும் தூங்காமலும்
சோம்பலுடன் கிடக்கையில்
எடுத்த பிறப்புக்கு ஒரு
அர்த்தம் விளங்குதப்பா.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
02.01.2018

Tuesday, January 1, 2019

சம்போ மஹாதேவா

சம்போ மஹாதேவா

வந்த இடம் விரும்பி
வம்புகள் செய்வதும்
அமுதுண்ட இடம் காண
அடம் பிடித்தலைவதும்
வையத்தில் ஆடவரின்
விருப்பமாயிருக்கும்.

விடலைப் பருவத்து
விளையாட்டு யாவும்
வனிதையின் பின்னே
விரட்டிச் சென்றாலும்
வயோதிகம் வாரின்
ஓய்ந்து போய்விடும்.

விடமுண்ட கண்டனின்
திருவடிகளைப் பற்றி
வீணான எண்ணத்தை
தூரவே அகற்றி நமது
மனதை ஈசனிடம் ஒரு
நிலைப் படுத்துவோம்.

சம்போ மஹாதேவா 🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
02.01.2018

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...