Search This Blog

Thursday, March 28, 2019

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

பிறந்த நாள்
வாழ்த்துக்கள்
மகிழ்ச்சியைத்
தரும் வேளை
வயது ஏறுவதை
எண்ணுகையில்
சின்னதாய் ஒரு
கலக்கமும் எழும்.

எட்டு எட்டாய் பிரித்த
வாழ்க்கையில எந்த
எட்டில் இருக்கிறோம்
தேடி முடிப்பதற்குள்
அடுத்த எட்டிற்குள்
அடியெடுத்து நாம்
வைத்துவிடுகிறோம்

வழுக்கை விழுதலும்
கரு முடி நரைத்தலும்
நெற்றியில் சுருக்கம்
நிறையவே படுதலும்
யோசித்து எண்ணி
செலவுகள் செய்தலும்
வயதின் ஏற்றத்தை
விளங்கிட வைக்கும்

கண்ணாடி பிம்பம்
காட்டிக் கொடுக்கும்
உண்மையை உடனே
உரைத்துச் சொல்லும்
அந்தந்த காலத்தில்
வகுத்திட்ட கடமையை
இறைவன் அருளால்
முடித்திட முயலனும்

வயது ஏறுவதை
உடலோடு நிறுத்தனும்
மனதை என்றென்றும்
இளமையோடு வைக்கனும்
குழந்தையைப் போல
குஷியாக இருக்கனும்
வாழ்க்கையை ரசித்து
வளமாக கழிக்கனும்.

வாழ்த்துக்களுடன் 🌷🌷🌷

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.03.2019

Sunday, March 24, 2019

சதுர்த்தி ஸ்பெஷல்

சதுர்த்தி ஸ்பெஷல்

தந்தம் உடைத்து
அழகு சந்தத்தில்
பாரதத்தை எழுத
உதவிய கணநாதா

பந்தத்தில் உழன்று
பாவத்தை செய்யும்
மக்கள் யாவரையும்
ரக்ஷிப்பாய் கணநாதா

அருகம்புல் கொண்டு
அர்ச்சித்து தொழுதிட
அகமகிழ்ந்து வரம்
அருள்வாய் கணநாதா

ஆனைமுக சாமியுனை
அனுதினமும் துதித்திட
கவலையெல்லாம்
தீர்ப்பாய் கணநாதா

சங்கடங்கள் தீரவே
சதுர்த்தி நன்நாளில்
சந்நிதி வந்தடைவோம்
கணநாதா

முக்கண் மைந்தனே
மூஞ்சூறு வாகனனே
ஆட்கொண்டருள்வாய்
கணநாதா

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
24-03-2019

Saturday, March 23, 2019

கோடீஸ்வரன்

கோடீஸ்வரன்

அதிர்ந்து பேசாமல்
அடக்கமாய் இருத்தல்
கூந்தலில் தைலமிட்டு
பின்னலிட்டு முடித்தல்
வாய்க்கு நல் ருசியாக
அருசுவை தயாரித்தல்
உதிரிப் பூக்களெடுத்து
மாலையாய் தொடுத்தல்
தரையினில் நீர் தெளித்து
புள்ளி வைத்த கோலமிடல்
மங்களகரமாய் இல்லத்துள்
விளக்கேற்றி வழிபடுபவளை
வீட்டினில் இருக்கப் பெற்றவன்
கோடீஸ்வரனாவான்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
23.03.2019

Thursday, March 21, 2019

Dr. அபிநயா (ஸ்வேதா)

Dr. அபிநயா (ஸ்வேதா)

எங்கள் இல்லத்து
இளவரசி இன்று
மருத்துவம் படித்த
மகராசி.

நோக்கத்தில்
தெளிவிருந்தால்
எட்டும் முயற்சியில்
வெற்றியும் கிட்டும்.

ஆம் எங்கள்
அபிநயாவும்
அப்படித்தான்.

ஆட்டம் பாட்டம்
எல்லாம் ம(து)றந்து
தவமாக தன் படிப்பை
வரமாகப் படித்தவள்.

தன் வயதொத்த
சிறுமிகளிடமிருந்து
தனித்து ஒதுங்கி நின்று
ஜெயித்து காட்டியவள்.

இவ்வரிகளை படிக்க
மிகவும் சுலபமாயிருக்கும்
அவள் கொண்ட வலிகளை
பார்க்க கடினமாயிருக்கும்.

எவ்வளவு தியாகம் இன்று
பட்டத்தைத் தந்தது என்பது
அவளோடு கூடவே இருந்த
பெற்றவர்களுக்குத் தெரியும்.

ஆர்ப்பாட்டம் கிடையாது
அடம் பிடிப்பது கிடையாது
அலங்காரம் கிடையாது
அகங்காரமும் கிடையாது.

எனது அண்ணன் மகள்
அபிநயா (ஸ்வேதா )
இன்று பட்டம் பெற்ற
மருத்துவர்.

இதை விட பெருமை
எங்களுக்கு இல்லை
எள்ளளவும் அவளுக்கு
தற்பெருமை இல்லை.

இன்னும் பல உயரம் எட்டி
இந்நாட்டிற்கும் வீட்டிற்கும்
மருத்துவத் தொண்டாற்ற
வேண்டி வாழ்த்துகிறேன்.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

அன்புடன் பாலு...

கவிதைகள் தினம்

கவிதைகள் தினம்

எழுத்தை
அழகாக்குவது
வார்த்தை

வார்த்தையை
அழகாக்குவது
வரிகள்

வரிகளை
அழகாக்குவது
பொருள்

பொருளை
அழகாக்குவது
எண்ணம்

எண்ணத்தை
தாங்கிப் பிடிப்பது
எதுவாம் ?

அதுவே
கவிதை / செய்யுள்
எனும் நடையாம்.

உரைநடையை
உரக்கப் படித்தாலும்
எளிதில் பதியாது

கவின்மிகு கவிதையோ
படிப்போர் மனதை விட்டு
என்றும் விலகாது

தீட்டப்பட்ட அழகோவியம்
அதற்கு உயிரைத் தரும்
தெளிவான கவிதை நடை
படிக்க அர்த்தம் தரும்.

கவிதையை காதலிப்போம்
கவிஞனை ஊக்குவிப்போம்

" இன்று கவிதைகள் தினம் "

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
21.03.2019

Monday, March 18, 2019

பரமேஸா

பரமேஸா

பக்தியோடு
உனைப் பணிவேன்
பரமேஸா
செய்த பாவத்தை
பொறுத்தருள்வாய்
பரமேஸா

ஆலயத்தை
அடைந்திடுவேன்
பரமேஸா
அடியார்கள் பதம்
பணிந்திடுவேன்
பரமேஸா

சித்தமெலாம்
சுத்தி கொள்வேன்
பரமேஸா
சிற்றம்பலம்
சரணடைவேன்
பரமேஸா

குறை தீர்த்து
ஆட்க் கொள்வாய்
பரமேஸா
குன்றாத
நல மருள்வாய்
பரமேஸா

சோதனைகள்
தந்திடுவாய்
பரமேஸா
சோர்ந்திடாமல்
இருத்திடுவாய
பரமேஸா

சிவ நாமம்
ஜபித்திடுவேன்
பரமேஸா
செளக்கியமாய்
வைத்திடுவாய்
பரமேஸா

சம்போ மஹாதேவா 🙏

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

பிரதோஷ கால வணக்கத்துடன் ...

அன்பன், சிதம்பரம் ஆர்.வி. பாலா
18-03-2019

Sunday, March 17, 2019

மனோகர் பாரிக்கர்

மனோகர் பாரிக்கர்

புற்று நோயே
உனக்கு வேறு
போக்கிடம்
இல்லையா

படித்த
பண்பான
தலைவர் தான்
தேவையா

தேசியத்தையும்
தாய் மண்ணையும்
தன் கண்களாகக்
கொண்டவர்

இறுதி மூச்சடங்கி
இன்று நம்மை
பிரிந்து செல்ல
உள்ளார்

மாநில முதல்வர்
மத்திய மந்திரியென
எத்துறையாயினும்
முத்திரையிட்டவர்

இவரது வாழ்க்கையை
அரசியல் பயில்வோருக்கு
கட்டாயம் ஒரு பாடமாக
வைக்க வேண்டும்

தன்னலமற்ற சேவையும்
தூய்மையும் ஒழுக்கமும்
பின்னாளில் ஆள்வோர்கள்
படிக்க வேண்டும்.

இக்கட்டான தருணத்தில்
இந்திய தேசத்திற்கு
இவரது இழப்பு மிகவும்
ஈடு செய்ய இயலாதது

அவரது ஆன்மா சாந்தியடைய
வேண்டுகிறோம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
18-03-2019

எனதருமை சங்கரா

எனதருமை சங்கரா

தில்லை கூத்தனின்
பதம் பணிந்தாயின்று
திருவள்ளுர் நாயகியை
கரம் பிடித்தாய்.

இந்நாளுக்காக வேண்டி
எந்நாளும் இறைவனை
பணிந்த உனது தாய்க்கு
பணிவாக நன்றி கூறு.

உன்னுடைய ஏற்றத்தை
உற்று நோக்கி மகிழும்
உன் உறவு மக்களுக்கும்
உளமாற நன்றி கூறு.

வானளவு வீட்டைத் தந்து
வர்த்தகமும் பயில்வித்து
எட்டி நிற்கும் தந்தைக்கு
வட்டியோடு நன்றி கூறு.

சீராடி வாழ்வது ஓர் வாழ்க்கை
போராடி வாழ்வது மறு வாழ்க்கை
இரண்டும் கலந்ததோர் வாழ்க்கை
அதுவே உனது என்று கூறு.

இங்கு குழுமியுள்ள கூட்டம்
உனது தந்தையாலே வந்தது
உற்றார் சுற்றார் யாவரும்
உனது பாசத்தாலே சேர்ந்தது.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்
தன் மகனைச் சான்றோன் எனக்
கேட்ட தாயாக உன் அன்னைக்கு
நீ வ(ள)ர வேண்டும்.

மகன் தந்தைக்காற்றும் உதவி
இவன் தந்தை எந்நோற்றான்
கொல் லெனும் குறளுக்கேற்ப
நீ திகழ வேண்டும்.

சிவகாமசுந்தரி சமேத
ஸ்ரீசித்ஸபேஸன் அருளால்
சந்தோஷமான வாழ்க்கை
சிறக்க எமது ஆசிகள்.

🌷🌷🌷🌺🌺🌺🌹🌹🌹

அன்புடன் பாலு..
17-03-2019

Friday, March 15, 2019

சிந்தை

சிந்தை

அறநெறி வழுவா
சிந்தை வேண்டும்
ஆலயம் ஏகிடும்
சிந்தை வேண்டும்

சிவனடி பணியும்
சிந்தை வேண்டும்
சீலம் குறையா நற்
சிந்தை வேண்டும்

பொய்யுரைக்காத
சிந்தை வேண்டும்
மெய்யறி வழுவா
சிந்தை வேண்டும்

நிந்தை கொளாத
சிந்தை வேண்டும்
நேர்மையகலாத
சிந்தை வேண்டும்

பதட்டம் இல்லாத
சிந்தை வேண்டும்
பக்குவம் அடைந்த
சிந்தை வேண்டும்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
13.03.2019

பெண்ணே

பெண்ணே

எரியும் விளக்கிலே விழும்
விட்டில் பூச்சியாக உனை
நீயே மாய்த்துக் கொள்வது
ஏனம்மா

வெளியிலே வெளிச்சம் காட்டி
உள்ளுக்குள் இருண்டிருக்கும்
காமுகர்கள் பலரும் நிறைந்த
நாடம்மா

சமூக வலைதளங்களில்
சிக்கி சின்னாபின்னமாகும்
கன்னியர்கள் நிலையை சற்று
பாரம்மா

சுதந்திரம் எனும் பெயரில்
சொல் பேச்சைக் கேளாமல்
சுற்றித் திரியும் பெண்களின்
கதியம்மா

தைரியமாக இரு திமிர் வேண்டாம்
துணிவாக இரு தடுமாற வேண்டாம்
தெளிவாக இரு குழப்பம் வேண்டாம்
பெற்றோருடன் இரு அவசரம் வேண்டாம்

இனிய காலை வணக்கம் 🌹🌺🌻🌷

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
15-03-2019

Tuesday, March 12, 2019

பொள்ளாச்சி சம்பவம்

பொள்ளாச்சி சம்பவம்

அடித்து நொறுக்க
வேண்டும் அந்த
அயோக்கியர்களை

வழக்கு விசாரணை
மேல் முறையீடு என
இழுத்தடிக்க முயல்வர்

அரசியல் தலையீடுகளும்
அதிகார துஷ்பிரயோகமென
திசை திருப்ப நினைப்பர்

குறுக்கு விசாரணையில்
கன்னியர்களை நிறுத்தி
கேள்வியால் துளைப்பர்

வன்புணர நினைக்கும்
வக்கிர புத்திக்காரர்களை
தேடிப் பிடிக்க வேணும்

வளைகுடா நாடு போல
கடுமையாக தண்டிக்க
சட்டம் இயற்ற வேணும்

பூவைக் கசக்க நினைக்கும்
பொறுக்கிகளைப் பிடித்து
தூக்கிலே ஏற்ற வேணும்

வேதனையுடன்,

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
12.03.2019

Monday, March 11, 2019

தவி (ர்)ப்பு

தவி(ர்)ப்பு

நீண்டதொரு
மெளனமும்
எதற்காக

பேசாது
தவிர்ப்பது
ஒரு வழி

பேசியே
கொல்வது
மறு வழி

எவ்வழி
நம் வழி
உணரனும்

நல்வழி
பார்க்கத்
தெரியனும்

தவிர்ப்பை
ஏற்கவும்
தெரியனும்

தவிப்பை
துறக்கவும்
முயலனும்

நீண்டதொரு
மெளனமும்
எதற்காக

ஏதோ நினைத்தேன் எழுதுகிறேன்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ பாலா
11.03.2019

Sunday, March 10, 2019

சித்தப்பா

சித்தப்பா

அண்ணாந்து
வியக்க வைக்கும்
ஆறடி உயரம்
ஆஜானுபாகு
உடற்கட்டு
தேகம்

ஆனந்த
தாண்டவத்தை
பணிந்தவர்
அழகு
முருகனை நிதம்
தொழுபவர்

வேதத்தை
ரக்ஷிக்க தம்
வாரிசுகளை
பாடசாலை
சேர்ப்பித்த
மாமனிதர்

சித்தப்பா
என்றாலே
சேலத்து
மாம்பழங்கள்
சிறு வயதிற்கு
இட்டுச் செல்லும்

பாரத தேசத்தை
பன்முறை
வலம் வந்து
புண்ணியம்
சேர்த்திட்ட
பாக்கியசாலி

சோதனைகள்
பல கண்டும்
சோர்ந்திடாமல்
ஜெயித்து
வெளிவந்த
பராக்கிரமசாலி

வாழ்வின்
போராட்டத்தை
வெற்றி கொள்ள
இவர் வாழ்க்கையை
படித்தால் நாமும்
கற்றுக் கொள்ளலாம்

எண்பது
என்பது இவர்
தேகத்திற்கு
நாற்பது
என்பது இவர்
வேகத்திற்கு

சதாபிஷேகம் காணும்
சித்தப்பா அவர்கள்
ஸ்ரீமத் ஜடா விநாயகர்
கிருபையாலும் ஆனந்த
நடராஜ மூர்த்தி அருளாலும்
நூற்றாண்டு பல கண்டு
நலமுடன் எங்களையெல்லாம்
ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்.

என்றும் அன்புடன்
தங்கள் பதம் பணிந்த
மகன் பாலு 🙏🙏🙏🙏

Thursday, March 7, 2019

பெண்ணே !!

பெண்ணே !!!

தாயாக
தாரமாக
தங்கையாக
தமக்கையாக
தோழியாகவும்
வலம் வரும்
தேவதை நீ !!!!

ஆண் என்னும்
வல்லினத்தை
அனுசரித்து போகும்
மெல்லினம் நீ.

கல்விக்கு சரஸ்வதி
செல்வத்துக்கு இலக்குமி
வீரத்திற்கு அம்பிகையென
பெண்ணை போற்றுகிறோம்.

பெண்ணில்லாத வீடு
பாழடைந்த பங்களா
ஒழுங்கு பெறாத ஒரு
ஓவியம் போன்றது.

வீட்டிலும் சரி
ரோட்டிலும் சரி
பாதுகாப்பு இன்னும்
கேள்விக்குறியே.

சுயமாக முடிவெடுத்து
சுதந்திரமாய் செயல்படும்
சந்தோஷமான வாழ்க்கை
அடைப்புக்குறியே.

போர் வீரர்களின் தியாகம்
நாட்டைக் காக்கின்றது நம்
பெண்மணிகளின் தியாகம்
வீட்டைக் காக்கின்றது.

கோபத்தை வெளிக்காட்டாது
உள்ளுக்குள்ளேயே புழுங்கும்
இல்லத்தரசிகள் நிறைந்த
இந்திய தேசம் இது.

பல்லைக் கடித்தபடி
பாத்திரங்களை உருட்டும்
பத்தினிகள் நிறைந்த
பாரத தேசம் இது.

அடக்கி ஆள நினைக்கும்
ஒவ்வொரு ஆண்மகனும்
அடுத்த பிறப்பில் நிச்சயம்
பெண்ணாகப் பிறக்கனும்
அம்மணிகள் படும் துயரை
அனுபவித்து பார்க்கனும்.

பெண்களைப் போற்றுவோம் !!

மகளிர் தின வாழ்த்துக்களுடன்
🙏🙏🌷🌷🌹🌹🌺🌺🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
08.03.2019

Tuesday, March 5, 2019

அமாவாசை

அமாவாசை

பட்ட கடன்
தீர்க்கும்
நன்னாளாம்
அமாவாசை
என்னும்
திருநாளாம்

மாதத்தில்
ஒரு முறை
அமைந்திடுமே
முழு நிலவும்
முழுதாய்
மறைந்திடுமே

அவரவர்
குலப்படி
ஆச்சாரம்
கடைபிடிக்க
வாழ்வின்
அச்சாரம்

எள்ளும்
தண்ணீரும்
இறைத்திடவே
என்றும்
ஆனந்தம்
கிட்டிடுமே

காகத்திற்கு
அன்னமும்
இட வேண்டும்
போகத்தை
அன்று நாம்
விட வேண்டும்

தகப்பனார்
இருந்தால்
பூஜியுங்கள்
இல்லையெனில்
தர்ப்பணம் தந்து
சேவியுங்கள்.

மாத்ரு தேவோ பவ
பித்ரு தேவோ பவ

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
06.03.2019

Monday, March 4, 2019

நடராஜா

நடராஜா

மங்கை சிவகாமி
உனது இட பாகம்
கங்கை சிவனாரின்
தலை பாகம்

கணபதி முருகன்
இரு பிள்ளையாம்
தர்ம சாஸ்தா உனது
அருட் பிள்ளையாம்

திருவிளையாடல்
பல செய்தவனாம்
தில்லையிலே திரு
நடனம் புரிபவனாம்

பஞ்ச பூதங்களைப்
படைத்தவனாம்
தஞ்சமடைந்தோரை
காப்பவனாம்

தேவார திருவாசக
நாயகனாம் அவன்
தேவாதி தேவன்
நடராஜனாம்.

திருச்சிற்றம்பலம் !!!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
04.03.2019

Sunday, March 3, 2019

நமச்சிவாயமே

நமச்சிவாயமே

நாகாபரணம்
தரித்தாடும்
நடராஜனே
திருநீறு
பூசியாடும்
தியாகராஜனே

தில்லையிலே
கோயில் கொண்ட
சிற்றம்பலமே
எல்லையில்லா
வாயில் கொண்ட
ஏகாம்பரமே

வில்வத்தால்
அர்ச்சிப்போம்
உமாபதியே
வல்வினைகள்
வேரறுப்பாய்
சபாபதியே

சரணாகதி
உனையடைய
சர்வேஸ்வரா
சகல பாபமும்
தீர்த்தருள்வாய்
விஸ்வேஸ்வரா

நான்மறைகள்
போற்றுகின்ற
நமச்சிவாயமே
நால்வரும்
பாடித் துதித்த
பஞ்சாட்ஷரமே

ஆறு கால
பூஜையேற்கும்
ஆலகாலனே
ஊறுகளை
களைந்தெடுக்கும்
நீலகண்டனே

உருவமில்லாத
உனக்கு ஒரு
உருவம் ஏதய்யா
உன் பக்தர்க்கு
உருகி எடுத்த
உருவம் தானய்யா

அண்டத்தை
ஆட்டுவிக்கும்
ஆபத்பாந்தவா
ஆனந்த
தாண்டவமும்
அனுக்கிரஹித்தவா

பஞ்ச சபைதனில்
ஆடிக் காட்சியும்
தருவாய்
தஞ்சமடைந்தால்
தேடி சாட்சியும்
கொடுப்பாய் 

பக்தர்களை
சோதித்து நீ
விளையாடுவாய்
பக்தியை மெச்சி
பின்னர் ஆட்
கொள்ளுவாய்

சிவராத்திரி
திருநாளில்
பூஜித்திடவே
மானுடப்
பிறப்புக்கும்
பயனாகுமே.

சித்ஸபேசா சிவ சிதம்பரம்.

திருச்சிற்றம்பலம் !!!

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
04.03.2019

பிரதோஷம்

உமாபதியே

உலகம் உய்யவே
விடமுண்டவன் நீ
வானவர் வாழவே
திடம் பூண்டவன்.

ஆலகாலத்தை
தொண்டையுள்
நிறுத்தினாய்
தேவர்களுக்கு
அமுதம் தந்து
அருளினாய்.

தண்டை
சலங்கையுடன்
ஆடிடுவாய்
கங்கையை
தலை மேலே
இருத்திடுவாய்

இந்த மாலை
வேளையில்
மஹேஸ்வரா நீ
மா நிலம்
தழைக்கவே
நடனமிடுவாய்

பிரதோஷ
காலம் உனை
பூஜிக்கவே
பக்தர்களின்
குறையினை
தீர்த்திடுவாய்.

பார்வதி
நாயகா
பரமேஸ்வரா
இப் பாலனுக்கு
அனுக்கிரகம்
தரும் ஈஸ்வரா.

பிரதோஷ கால வணக்கம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
03.03.2019

Saturday, March 2, 2019

பில்டர் காபியுடன்
காலை மலர்ந்து
இட்லி சட்னியுடன்
பொழுது புலர்ந்து
மதிய நேரத்தில்
அறுசுவை உண்டு
மாலை நேரத்தில்
சூடான பக்கோடா
இரவில் மெலிதாய்
சிற்றுண்டி எடுத்து
நாளை இனிதாய்
கழிப்போமானால்
வேறென்ன வேணும்
வையகத்திலே !!!!!

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
02.03.2019

Friday, March 1, 2019

ஜெய் ஹிந்த் !! வந்தே மாதரம் !!

ஜெய் ஹிந்த் !! வந்தே மாதரம் !!

பாகம் பிரித்து தந்தும்
போதாதா உனக்கு

பக்கத்தில் இருந்தபடி
பிரச்சினைகள் தருகிறாய்

வேரோடு களைத்தெறிய
வெகு நேரம் ஆகாது

இரவோடு இரவாக
இருந்த இடம் மறையும்

அமைதியை விரும்பி
அடக்கமாயிருக்கிறோம்

அன்றைய பாரதப் போரில்
கவுரவர்கள் அழிந்தனர்

இன்றைய பாரதப் போரில்
கயவர்கள் பலர் அழிவர்

இத்தனை வருடங்களில்
எத்தனை உயிரிழப்பு

தீவிரவாதத்தை
கையில் எடுத்தவனே

தீயீற்குள் நீ மீண்டும்
கை வைத்திருக்கிறாய்

ஒரு நாள் உன்னையும் சுடும்
உன் மக்களையும் பொசுக்கும்

உலகின் பக்கத்தில் இருந்து
நீ துண்டிக்கப்படுவாய்

நீருக்கும் சோற்றுக்கும்
திண்டாடி மடிவாய்

வர்த்தகம் நிறுத்தப்பட்டு
வஞ்சிக்கப்படுவாய்

வளைகுடா நாட்டிலும் கூட
புறக்கணிக்கப்படுவாய்

மதத்தின் பெயரால்
மாநிலம் நடத்துபவனே

கண்மூடித்தனமாக
பின்பற்றுவதை நிறுத்து

சமாதான மார்க்கத்தில்
உன் நிலையை இருத்து

இன்று போய் நாளை வாவென
இராமன் கூறய தேசம் இது

கேளாத இராவணன் கதை
முடித்து வைத்த நாடும் இது

பிழைத்துப் போக மேலும்
வாய்ப்பொன்று தருகிறோம்

பாரதத்தை சீண்ட வேணாம்
எச்சரிக்கை தருகிறோம்.

ஜெய் ஹிந்த் !! வந்தே மாதரம் !!

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
02.03.2019

கவிஞன்

மனதில் பட்டதெல்லாம்
மொழியிலே எழுதுவான்
காணும் எவற்றையுமே
கவிநடையிலே எழுதுவான்
அழகைக் கண்டதுமே
அலங்கரித்து எழுதுவான்
கற்பனைக் குதிரையேறி
கனவுலகில் எழுதுவான்
கண்ணனுக்கு எழுதுவான்
மன்னனுக்கு எழுதுவான்
கன்னியரைப் பற்றி அவன்
காலமெல்லாம் எழுதுவான்
காதலும் கடவுளும் தனது
கண்களென எழுதுவான்
நேற்றைக்கும் நாளைக்கும்
நடுவில் நின்றெழுதுவான்

யார் அவன் யார் அவன் ?

எழுத்தை வார்த்தையாக்கி
வார்த்தையால் வரிகளிட்டு
வரிகளுள் வாழ்ந்து காட்டும்
வளமான கவிஞன் ஆவான்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
01.03.19

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...