Search This Blog

Monday, April 30, 2018

நடுத்தர குடும்பம்

நடுத்தர குடும்பம்

மாதக் கடைசியிலே
மளிகை தவனையிலே
குடும்பத்தை நடத்தி வரும்
சராசரி மனிதர்களாம்..

பொருட்களை திட்டமிட்டு
அட்டையில் நோட்டமிட்டு
வரிசையில் வாங்குகின்ற
வாடிக்கையாளர்களாம்..

அங்காடிக்கு சென்று நாங்கள்
அசந்து போய் பார்ப்பதில்லை
அண்ணாச்சிக் கடையே எமது
அடுப்பங்கரைக்கு சொந்தமாகும்..

வாங்குகின்ற ஊதியத்தில்
வட்டியெல்லாம் கழிந்த பின்னே
மிச்சப் பணத்தைக் கொண்டு
மிடுக்காக வாழ்ந்திடுவோம்..

அரசுக்கு நாணயமாய்
வரியும் செலுத்திடுவோம்
ஆண்டு முழுமைக்கும்
வறுமையில் வாடிடுவோம்..

விலைவாசி ஏற்றத்திலே
விழிபிதுங்கி நின்றிருப்போம்
வியர்வையை வழித்தபடி
வேலையும் செய்திடுவோம்..

கார் பைக் என்று எம்மிடம்
சுற்றிவர வசதி இல்லை
பொதுப் போக்குவரத்தே
போதுமானதாயிருக்கும்..

கையேந்தி நிற்பதில்லை
கடன் கேட்டு செல்வதில்லை
இருக்கும் பொருள் கொண்டு
இல்லத்தை நடத்திடுவோம்..

பணத்தை சேர்த்து வைத்த
பகட்டான வாழ்வு இல்லை
பசிக்கையில் வயிறு நிரப்பி
பண்போடு இருந்திடுவோம்..

நடுத்தர குடும்பம் என்று
நாட்டில் எமையுரைப்பர்
நல்லவர்களென்றும் கூட
நயமாய் எடுத்துரைப்பர்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
30.04.18

Sunday, April 29, 2018

வாழ்த்த வேண்டுகிறேன்

வாழ்த்த வேண்டுகிறேன்

சும்மா இருக்க என்னால்
இயலவில்லை, என்றும்
சோம்பேறியாய் அமர
விருப்பமில்லை..

அன்றன்று நடந்திடும்
நிகழ்வுகளை எனது
வார்த்தையில் வடித்து
விவரிக்கிறேன்..

மனதிலே உதித்திடும் என்
உணர்வினை வரிகளில்
கவிதையாய் கண்முன்னே
காட்டுகிறேன்..

தமிழ் ரசிகராய் ருசிகொண்டு
தாம் இடும் உற்சாகம் என்
தாகத்தை மென்மேலும்
தூண்டிடுமே..

தடையின்றி பிரவாகமாய்
தடாகத்து நீர் போன்று
தமிழ் வார்த்தை பா வாக
தெளித்திடுவேன்..

உற்றாரும் சுற்றாரும்
உற்சாகம் தந்திடவே
ஊர் மெச்சும் அளவுக்கு
கவி புனைவேன்..

சங்கடமாய் சில நேரம்
சகட்டு மேனிக்கு நான்
சங்கதிகள் பல சேர்த்து
கவிதையிட்டேன்..

தொந்தரவாய் எண்ணாமல்
தோள்கொடுக்கும் விதமாக
ஊக்கம் தரும் அன்பர்களை
நான் மறவேன்..

கற்பனைகள் வளர வேண்டி
புத்தகங்கள் படித்திடுவேன்
நல்மனங்கொண்ட மாந்தரின்
நேசம் அமைத்து கொள்வேன்..

வாழ்த்துக்கள் வேண்டி
வணங்கி விடை பெறும்..

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
29.04.18

சித்திரகுப்தன்

சித்திரகுப்தன்

ஆலைக்கென்று
கணக்குப்பிள்ளை
உண்டு, அவர்
வரவு செலவு
விவரம் எழுதுவாறு..

அகிலத்துக்கென்று
கணக்குப்பிள்ளை
உண்டு, அவர்
பாவ புண்ணிய
விவரம் எழுதுவாறு..

நல்லது செய்யினும்
தீயவை செய்யினும்
நியாயமாய் அவரவர்
கணக்கிலே சேர்ப்பார்..

சொர்க்கமும் நரகமும்
தேர்வு செய்ய வேண்டி
எமதர்ம ராஜனுக்கிவர்
உதவி செய்வார்..

சிந்தை கலங்காது
சிவனை மனமிருத்தி
செய்யும் தொழிலிலே
செம்மை செய்வார்..

கணநேரம் தப்பாது
காலனுக்குதவிடும்
சித்திரகுப்தன் என்பது
திருப்பெயராம்..

சித்ரா பௌர்ணமி
நந்நாளில் துதித்திட
செம்மை வாழ்வினை
நல்கிடுவார்..

பிறவிக் கடல் கடந்து
பரலோகம் செல்கையிலே
பாவ புண்ணியத்தை
பிரித்து வைப்பார்..

எம பயம் இல்லாமல்
நல்வாழ்வு வாழ்ந்திட
பரமனை திடமாக
பற்றிடுவோம்..

சீரான வாழ்க்கையும்
வேராக அமைந்திட
சித்திரகுப்தனின்
அடிபணிந்திடுவோம்..

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
29.04.18

நடராஜா

நடராஜா

இடதுபதம் தூக்கி
ஆடுகின்ற தில்லை
நடராஜா !!!!!

எக்கோவில் சென்றாலும்
எந்த கடவுளை கண்டாலும்
நின் நாமத்தையன்றி வேறு
என் நா நவில்வதில்லை..

சிவலிங்க மேனியுள்
சதாசிவமாய் நிறைந்து
சர்வ ஜகத்தையும் நீ
காத்தருள்வாய்..

புலிக்கால் முனிவரும்
பதஞ்சலி ரிஷியும்
பூசித்து உன்னை இப்
புவிக்கழைத்தர்..

அருவுருவமாயிருந்து
உருவத்தை எடுத்த நீ
நடராஜ ரூபத்திலே
காட்சியும் தந்தாய்..

அம்மையுடன் ஆட்டமிட்டு
இடதுபதம் மேலெழுப்பி
ஒற்றைக்காலில் நிற்கின்ற
கோலமும் கொண்டாய்..

தில்லை நடராஜனே !!!

அடியவர்க்கருள வேண்டி
அழகிய கயிலை விடுத்து
சிவகாமியுடன் சிதம்பரம்
க்ஷேத்திரமும் வந்தாய்..

எல்லா இறைவர்களும்
நின்றும் துயின்றுமிருக்க
என்னய்யனே நீ மட்டும் ஏன்
ஒருகாலில் நிற்கின்றாய்..

உலக இயக்கம் வேண்டியே
ஊர்த்துவ தாண்டவமாடும்
உமாபதியே நீயும் சற்று
ஓய்வெடுப்பாய்..

தில்லையம்பதியமர்ந்த
தேவார நாயகா, உனது
தூக்கிய திருவடியினை
சற்றே மாற்றி கொள்வாய்..

முயலகன் மீது வைத்த
ஒரு காலை மாற்றி இந்த
அடியவன் தலை மீது சற்றே
வைத்திடுவாய்..

திருச்சிற்றம்பலம் !!!!

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
29.04.18

Saturday, April 28, 2018

ஜடா விநாயகா

ஜடா விநாயகா

வாரமாயிற்று
விக்னேஸ்வரா நினது
குடமுழுக்கினைக் கண்டு
வாரமாயிற்று..

வரமாயிற்று
விநாயகா உனை
வேண்டியவர்க்கு நல்
வரமாயிற்று..

மூன்று தலைமுறையினர்
மகிழ்வோடு அளவளாவி
முழுமுதற் கடவுளை கண்டு
களித்தாயிற்று..

ஆண்டிற்கும் மேலாக
அய்யா உனைப் பாராமல்
ஏங்கித் தவித்த ஏக்கம்
இனி இல்லாமல் போயிற்று..

நித்தம் உனை துதித்து
நின் நாமம் தியானித்த
நின் பக்தர்களின் துயரம்
நீங்களாயிற்று..

வார விடுமுறை நாளன்று
ஊர் கூடச் செய்து உனை
உள்ளம் நிறைத்து நாங்கள்
உவகையுற்றாயிற்று..

பக்த கோடிகளை
ரக்ஷித்து அருளும்
பிள்ளையாரப்பனை
பீடத்தில் ஏற்றியாயிற்று..

மண்டலாபிஷேகம் காணும்
மஹாகணபதி பக்தர்களின்
மனக் குறைகள் யாவையும்
நிவர்த்தியுற்றாயிற்று..

பெரிய கோவிலுக்குள்
பிரம்மாண்ட ரூபமாய்
பெருமானைக் காணும்
பிறவிப் பயனாயிற்று..

அம்பிகை புதல்வா
அக்ரஹார தலைவா
அனுதினமும் நின் கழல்
அடிபணிந்தாயிற்று..

!! ஜடா விநாயக மூர்த்திகி ஜெய் !!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
29.04.18

* கடந்த 22.04.18 ஞாயிறன்று
குருவைய்யர் அக்ரஹாரத்தில்
எழுந்தருளியுள்ள ஸ்ரீமத் ஜடா விநாயக பெருமானின் ஆலய கும்பாபிஷேகம்
வெகு சிறப்பாய் நடந்தேறியது..

என்னவளே

என்னவளே

கருநாகத்தையொத்த
நீண்ட கருங்கூந்தலை
கோதுவேன்..

கயல் விழியாள் என
கண்ணே உனை நான்
கொஞ்சுவேன்..

மான் விழியாள் என
மிரளும் உன் முகத்தை
பார்ப்பேன்..

கூரான அம்பொத்த
நின் நாசியினை
நாடுவேன்..

சங்கு போன்ற நின்
சரிந்த கழுத்தினை
காணுவேன்..

உதிரத்தின் நிறமொத்த
உன் அதரத்தை நான்
சுவைப்பேன்..

உதரத்தின் மேலமைந்த
உன்னழகு அடுக்குகளை
ஆளுவேன்..

இல்லாத இடையொன்றை
இனி எங்கே போய் நான்
தேடுவேன்..

வெட்டிய வாழையாக
நிற்கும் தொடைகளை
ஏந்துவேன்..

வெட்டிவேர் வாசத்துடன்
உன்னழகனைத்தையும்
வீழ்த்துவேன்..

சிலையாய் செதுக்கியுள்ள
செல்லமே உனையென்றும்
சேருவேன்..

தலை முதல் கால் வரை
தங்கமே உனை நித்தம்
தாங்குவேன்..

💐💐💐💐💐💐💐💐💐

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.04.18

Friday, April 27, 2018

~~ நரசிம்ம ஜெயந்தி ~~


~~ நரசிம்ம ஜெயந்தி ~~

தூணிலும் இருப்பார், அவர்
துரும்பிலும் இருப்பார், பக்த
பிரகலாதனுக்கு வெளிப்பட்ட
பாற்கடல் வாசன்...

இரணியனை வதம் புரிந்து
ஈரேழு உலகையும் காத்து
அடியவர்தம் இன்னல் களைந்த
வைகுண்ட வாசன்..

சிம்ம முகம் கொண்ட அழகு
நர சிம்மர், மூவுலகை காத்திடவே
மூன்றாவதாய் அவதரித்த
தசாவதார மூர்த்தி..

பாவம் புரிவோருக்கு
பயத்தினைத் தந்திடுவாய்
சரணடையும் எளியோருக்கு
அபயக் கரத்தினை காட்டிடுவாய்..

லக்ஷ்மீ நரசிம்மராய் என்றும்
எமது இல்லத்தில் கொலுவிருந்து
மங்களத்தை நல்கிடவே
வேண்டுகிறேன் மாதவா..

அகோபிலம் சென்று ஐயனை
வழிபடுவோம், நவ நரசிம்ம ரூபம்
நமை ரட்சிக்க இறைஞ்சிடுவோம்..

ஜெய் நரசிம்ம ஸ்வாமி, ஜெய் ஜெய்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ.பாலா
09.05.17

Monday, April 23, 2018

கும்பாபிஷேக வைபவம்

கும்பாபிஷேக வைபவம்

அமர்க்கலமாய்
யாகசாலை நடந்தது
நான்கு கால பூசைகளும்
முடிந்தது..

தீட்ஷிதர்களின் வேத கோஷம்
விண்ணைப் பிளந்தது, காட்டிய
தீப ஒளி எங்கள் கண்களிளில்
முழுவதுமாய் நிறைந்தது..

கொண்டாட்டமாய்
கும்பாபிஷேகம்
நடந்தது, தில்லையில்
குருவைய்யர் வீதியே
அதிர்ந்தது..

இல்லத்து திருமணம் போல்
உள்ளத்தில் உற்சாகமாய்
ஏக்கத்தை தீர்த்து வைத்து
வைபவமும் நடந்தது..

எடுத்து கட்டி செய்த
எடுத்துக்காட்டாய் செய்த
எம் ஜடா விநாயக பக்தர்களின்
கைங்கர்ய பலன் கனிந்தது..

பெரிய கோவில் அமைத்து
பீடத்தை ஏற்றி வைத்து அதில்
பிரம்மாண்டமாய் கொலுவிருக்கும்
எங்கள் அழகு பிள்ளையார்..

மகாபிஷேகம் முடிந்து
தீபாராதனை ஒளியிலே
கணபதியைக் கண்டதும்
கண்ணீர் வராத கண்கள்
இல்லை..

கனவாக இருந்த ஒன்றை
நனவாக காணுகையில்
கதறி ஆனந்த நீர் சொரிந்த
கன்னங்கள் ஆயிரம்..

பெரிய பிள்ளையார் இப்போது
சிறிய பிள்ளையாராய் உள்ளாராம்
ஆம் இன்று பிறந்த குழந்தை போல
குட்டி பிள்ளையாராய் உள்ளார்..

மண்டலாபிஷேகம் முடிந்ததும்
மகிழ்ச்சியில் மிடுக்கு ஏறிடும்
மனதிற்கும் ஆனந்த களிப்பில்
பழைய துடிப்பும் வந்திடும்..

அடியவர்கள் தங்கிடவும்
அன்னதானம் வழங்கிடவும்
இன்முகமாய் இடமளித்த
அக்ரஹாரவாசிகளுக்கு
நன்றி நன்றி நன்றி..

ஜெய் ஜடா விநாயக மூர்த்திகி !!

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
23.04.18

Tuesday, April 17, 2018

ஜடா விநாயகர்

ஜடா விநாயகர்

தில்லை கோவிலிலே
சித்சபையும் இருப்பது
சற்று தள்ளியே என்பதை
அறிவோம்..

மையத்தில் இல்லாமல்
இருந்தாலும் கூட ஈசன்
வையத்தை ஆட்டுவிப்பதை
உணர்வோம்..

அக்ரஹார கோவிலில்
அவன் பிள்ளை கணபதி
அழகாக எழுந்தருளி
உள்ளான்..

தந்தையைப் போலவே
தனயனும் தள்ளியே
வீற்றுருக்க காண்பதும்
அழகாம்..

விளம்பி வருடத்தில்
விக்னேஸ்வரனுக்கு
விஷேஷமாய் பூஜை
நடக்கும்..

சித்திரைத் திங்களில்
சிவகாமி மைந்தனுக்கு
சிறப்பாக குடமுழுக்கு
இருக்கும்..

ஞாலத்தை இயக்குகின்ற
ஸ்ரீமத் ஜடா விநாயகருக்கு
ஞாயிற்றுக் கிழமையிலே
அபிஷேகம்..

ஞானத்தை அளிக்கின்ற
ஞானமூர்த்தியைக் காண
சிதம்பரத்திற்கு நாமும்
வருவோம்..

குருவைய்யர் வீதியில்
கும்பாபிஷேகம் கண்டு
கணபதியின் பாதம்
பணிவோம்..

பேருவகையோடு அன்று
பக்த ஜனங்கள் எல்லாம்
பிள்ளையார் கோவிலில்
ஒன்று கூடுவோம்..

பாடியும் ஆடியும்
பரவசமாகியும்
பரமானந்தமும்
பேறு அடைவோம்..

ஸ்ரீமத் ஜடா விநாயக மூர்த்திகி ஜெய்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
17.04.18

Monday, April 16, 2018

ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்

ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்

எல்லாம் இருந்த பின்னும்
ஏதோ ஒரு குறையாக நான்
எதையோ எண்ணி நித்தம்
எதிர்பார்த்து நிற்கின்றேன்..

பணத்திற்கு குறைவில்லை
பட்டினியாய் கிடப்பதில்லை
இருந்தும் இல்லாதது போல்
எதிர்பார்த்து நிற்கின்றேன்..

அன்புக்கு ஓர் மனைவி
ஆசைக்கு பிள்ளைகளென
அத்தனையுமிருந்தும் நான்
எதிர்பார்த்து நிற்கின்றேன்..

சொந்தமாய் வீடு  உண்டு
சொந்தங்கள் பலரும் உண்டு
சோதனைகள் இல்லாவிடுனும்
எதிர்பார்த்து நிற்கின்றேன்..

அக்கம்பக்கம் பார்த்து நான்
ஆசையும் கொண்டதில்லை
ஆதரவாய் பலரிருந்தும் ஏனோ
எதிர்பார்த்து நிற்கின்றேன்..

படைத்தவன் போட்ட கணக்கு
பிழையாக ஓர் வாய்ப்பில்லை
பித்தனாய் மனம் பேதலித்து
எதிர்பார்த்து நிற்கின்றேன்..

எல்லாம் இருந்த பின்னும்
ஏதோ ஒரு குறையாக நான்
எதையோ எண்ணி நித்தம்
எதிர்பார்த்து நிற்கின்றேன்..

ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்
என்று என்னையே பலமுறை
கேட்டும் பதில் கிட்டாமல் நான்
எதிர்பார்த்து நிற்கின்றேன்..

இறைவா !!!!

என்னையே நான் வென்றிட
எனக்கு அருளும் புரிந்திடு
எந்நாளும் உனை மறவாத
நினைப்பையும் நீ தந்திடு..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
16.04.18

Sunday, April 15, 2018

பகிரப் பழகு

பகிரப் பழகு

நாட்பட்ட ரணத்தினை
நான்கு சுவற்றுக்குள்
அடைத்துப் போடுவது
இயலாது போகும்..

நாசூக்காய் நவிலவும்
நளினமாய் தேற்றவும்
நல்லதாய் நட்பொன்று
நமக்குத் தேவையாகும்..

திரித்துப் பேசிடும்
உறவினர்க்கிடையிலே
தேற்றிப் பேசிடவே நல்ல
நண்பர்கள் வேண்டும்..

என்நண்பர் நன்நண்பரென
பகுத்திடும் அறிவுதனை
பக்குவமாய் கையாளத்
தெரிய வேண்டும்..

சமூக வலைதளத்தில்
சத்தமின்றி விஷமிகளும்
சாது வேடம் பூண்டுள்ளார்
உஷாராவோம்..

உற்றார் உரைத்தாலும்
உலகமே பழித்தாலும்
உன் வாழ்க்கை உன் கையில்
பார்த்து பகிர பழக வேண்டும்..

வாழ்க வளர்க 💐💐💐💐💐

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
15.04.18

* முகநூல், வாட்ஸப் என்று
பிரபலமான வலைதளங்களில்
நம்முடைய தனிப்பட்ட நிறை
குறைகளை பகிர்வதற்கு
முன் சற்றே சிந்திக்க வேண்டியது
என்றுமே நல்லது...

Saturday, April 14, 2018

பெண்ணே நீ வாழ்க

பெண்ணே நீ வாழ்க

அன்புக்கினியவளே !!

ஆயிரம் விசனத்தோடு
அடுப்பங்கரையிலும்
அலுவலகத்திலும் இன்று
அல்லலுற்று நீ கிடக்கிறாய்..

அகிலத்தில் பெண்கள்
அத்துனை பேருக்கும்
ஆண்டவன் விதித்தது
அன்னமே இவ்வாழ்க்கை..

தைரியத்துடனே நீ
எதையும் எதிர்க்கொள்
துணிந்து நடப்பவையை
சமாளிக்கப் பழகிக் கொள்..

வீர மங்கைகளாம்
வேலு நாச்சியாரும்
இராணி லக்ஷ்மிமிபாயும்
வாழ்ந்த புண்ணிய பூமியிது..

நல்லதே நடக்கும் என
நம்பிக்கை கொண்டால்
நடப்பவை அனைத்தும்
நன்மையாகவே முடியும்..

புத்தாண்டு நந்நாளில் நாம்
பெண்மையைப் போற்றுவோம்
பிறந்த வீடு புகுந்த வீடு கொண்ட
பிராட்டிகளை வணங்குவோம்..

💐💐💐💐💐👏👏👏👏

வாழ்க வளமுடன் !!
என்றும் நலமுடன் !!

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
14.04.18

* பெண்கள் தினத்திற்கு
   மட்டுமா எழுதணும்..
  ஆண்டு முழுவதும்
  அவர்களது தினமே..

Friday, April 13, 2018

புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஹேவிளம்பி வருடம்
முடிந்து நாளைக்கு
விளம்பி வருடத்து
துவக்கம்..

வருடங்கள் மாறினாலும்
திட்டங்கள் மாற்றினாலும்
தீராத பிரச்சினைகளால்
கலக்கம்..

சராசரி குடிமகனாக
சமுதாய அக்கரையில்
சில கோரிக்கையும்
எமக்கு உண்டு..

கருணை கொண்டு
காவிரி நதி நீரினை
கர்நாடக மாநிலமும்
பகிர்ந்திடல் வேண்டும்..

கருப்பு சட்டைகள்
சேட்டைகள் நிறுத்தி
நாட்டின் வளர்ச்சிக்கு
முனைந்திட வேண்டும்..

பிரிவினை செய்யும்
அந்நிய சக்திகளை
இனம் காணப்பட்டு
ஒடுக்கிட வேண்டும்..

இலவசங்களை
பதமாக குறைத்து
உழைக்கும் மக்களை
ஊக்குவிக்க வேண்டும்..

சாதி மதப் பிரிவினால்
சமூகத்தை குலைப்போரை
வேரோடு களைந்து
எறிந்திடல் வேண்டும்..

அரசு திட்டங்களை
ஆதாயத்தின் கீழ் பாராமல்
வளர்ச்சிக்கு வித்திட்டால்
அமல்படுத்த வேண்டும்..

நித்தம் ஒரு பூசல் வைத்து
நிர்வாகத்தை நடத்த விடாமல்
நடுத்தெருவில் கொடி பிடிக்கும்
கூட்டங்களை சாடிட வேண்டும்..

நல்லதையே நினைப்போம்
நல்லதையே புரிவோம்......

வாழ்க வளர்க..

இனிய தமிழ் புத்தாண்டு
வாழ்த்துக்களுடன் 💐💐

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
13.04.18

* நாளைய தினம் நிறைய
பகிர்வு செய்திகள் கிடைக்கும்.
அதனூடே அடியேனது வாழ்த்து
அமிழ்ந்து போய்விடும், ஆதலால்
ஒரு நாள் முன்னமேயே நான்
வாழ்த்திட விழைந்திட்டேன்..

Thursday, April 12, 2018

சிவ சிவா

சிவ சிவா

நந்தி தேவரைப் போல
முன்னமர்ந்து இருக்கனும்
நாகமாய் அவன் கழுத்தில்
அகலாது இருக்கனும்..

டமருகமாய் கைதனிலே
ஓயாமல் ஒலிக்கனும்
முயலகனாய் மிதிபட்டு
கால் கீழே கிடக்கனும்..

வில்வ தலமாய் மாறி
விரிசடையில் அமரனும்
பிறை நிலவாய் உருமாறி
பெருமானிடம் சேரணும்..

மீனாகப் பிறப்பெடுத்து
சிவகங்கையில் கிடக்கனும்
குளத்து நீரை சுத்தம் செய்து
அபிஷேகத்துக்கு உதவனும்..

அடியாராய் அவனடியை
அடிபணிந்து கிடக்கனும்
திருநீற்றைத் தரித்தபடி
தினந்தோறும் தொழுகனும்..

தேனமுத தேவாரப்
பதிகங்கள் பாடனும்
தேவாதி தேவனை
தரிசித்து மகிழனும்..

தில்லையிலே தீட்ஷிதராய்
மறுபிறப்பும் எடுக்கனும்
நடராஜப் பெருமானை
நிதம் பூசித்து களிக்கனும்.

பிரதோஷ நந்நாளாம் இன்று
பெருமானை வணங்குவோம்..

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

திருச்சிற்றம்பலம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
13.04.18

Wednesday, April 11, 2018

போராட்டம் எதற்கு

போராட்டம் எதற்கு

எவ்வளவு அலைச்சல்கள்
ஏனிந்த குழப்பங்கள்
ஏதுமறியாத மாந்தர்களை
ஏமாற்றும் கும்பல்கள்..

வீணான புரளிகளிட்டு
விஷமச் செய்திகளோடே
அப்பாவி மனிதர்களை
அலைக்கழிப்பது நியாயமல்ல..

வீதியிலே இறங்கி நடத்தும்
வேடிக்கை போராட்டங்கள்
அரசியல் ஆதாயம் வேண்டி
அற்பர்கள் செய்பவையாகும்..

நாளைய தலைமுறையினரை
நயவஞ்சகமாய் மனசு மாற்றி
கூச்சலும் குழப்பங்களுடனே
போராடச் செய்வது முறையோ..

உண்மை தலைவர் யாரென்று
உணர்ந்து கொள்ளும் நேரமிது
கபட நாடகம் ஆடுவோர்களை
களையெடுக்கும் சமயமிது..

நடைப்பயணம் என்ற பெயரில்
நாலுசக்கர வண்டியில் போவார்
பாலுக்கு    காவலன்    கூடவே
பூனைக்குத் தோழனும் ஆவார்..

கருப்பு   சட்டைகள்   ஒன்றாய்
களமிறங்கி கோஷமிடுகையில்
கூத்தாடிகள் சில பேரும் சேர்ந்து
சமூகத்தை சீர்குலைக்க செய்வர்..

அந்நிய கைக்கூலிகளாக
அட்டகாசம் புரிவோரெல்லாம்
அடையாளம் காணப்பட்டு உடனே
அடக்கி வைக்கப்படல் வேண்டும்..

ஆலை விரிவாக்கம் வேண்டாம்
வேலைவாய்ப்பு பெருகிட வேண்டாம்
இலவசங்களும் இடஒதுக்கீடுகளும்
இன்னும் தாராளமாய் வேண்டும்..

சுயநலத்துடனே சூழ்ச்சிகள் செய்து
சம்பாதிக்க நினைப்போர் ஏராளம்
பிரச்சினையாக்கி போராட்டம் மூலம்
பிரித்தாள நினைப்போர் உஷாராவோம்.

எங்கே போகிறோம் எம்மக்களே
ஏமாளிகளாக நாம் மாறுவதற்கா ??

வருத்தத்துடன்....

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
11.04.18

Tuesday, April 10, 2018

கைப்பேசியும் நானும்

கைப்பேசியும் நானும்

என்னவாயிற்று எனக்கு !!!

எட்டி எட்டிப் பார்க்கின்றேன்
ஏகாந்தத்தில் லயிக்கின்றேன்
ஏதோ ஒன்றை நினைத்தபடி
ஏமாற்றத்தில் கிடக்கின்றேன்..

கைப்பேசியை காதலித்து
கண்ணகல விரிக்கின்றேன்
தகவலுக்கு தொடுதிரையை
தடவி தடவிப் பார்க்கின்றேன்..

இனம்புரியா இன்பத்திலே
சிரித்தபடி செல்கின்றேன்
மனம் குழம்பி பல நேரத்தில்
வருத்தமுடன் நடக்கின்றேன்..

என் படைப்புகளை பரிமாறி
திருப்தியாக உணர்கின்றேன்
உணர்ச்சிகளை வரிகளாக்கி
உள்ளத்தையே தெளிக்கின்றேன்..

காதலர்கள் முறுவலிப்பது போல்
ஆசை கொண்டு அமைகின்றேன்
கன்னியர்கள் நெளிவதைப் போல்
கை நடுங்க உனை எடுக்கின்றேன்..

என்னவாயிற்று எனக்கு !!!

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
11.04.18

Saturday, April 7, 2018

ஈஸ்வரா

ஈஸ்வரா

அனைத்துமாகி நிற்கும்
அம்பலவா போற்றி
ஆலகால விடமுண்ட
அண்ணாமலையே போற்றி

இமையவள் உடனிருக்கும்
இலிங்க ரூபமே போற்றி
ஈரேழு லோகம் காக்கும்
ஈஸ்வரனே போற்றி

உடலை சரிபாதி பகிர்ந்த
உமாபதியே போற்றி
ஊழிக்காலத்தே உய்விக்கும்
ஊர்த்துவ தாண்டவமே போற்றி

எம பயம் தீர்த்து அருளும்
எம் ஈசனே போற்றி
ஏகாந்தமாய் உறைந்துள்ள
என்னப்பனே போற்றி

ஐந்தெழுத்து மந்திரத்து
ஐயனே போற்றி
ஒளிமயமாய் நிறைந்துள்ள
ஓங்காரமே போற்றி போற்றி

உலகெலாம் உணர்ந்து
ஓதற்கு அறியவனை
உயிரெழுத்தில் பணிந்து
ஓசையின்றி வரிகளிட்டேன்.

திருச்சிற்றம்பலம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ்
நடராஜனே 🙏🙏🙏🙏

* இன்றைக்கு சிவராத்திரியும் இல்லை, பிரதோஷமும் இல்லை. இருப்பினும்
என் அப்பனை நினைத்த நேரத்தில்
எழுதும் ஆவல் மட்டும் அடங்கவில்லை.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
07.04.18

விடுமுறை எடுப்போம்

விடுமுறை எடுப்போம்

நேரில் பார்த்து
பேசுவது குறைந்து
தொலைபேசியில்
அழைத்து உரையாடியதும்
மறைந்து மெல்ல மெல்ல
குறுஞ்செய்திகள் மூலமே
உறவாடுகின்ற வழக்கம்
பெருகுவதைக் காணவே
வேதனையாய் இருக்குது..

நலம் விசாரிப்புகளும்
நண்பர்கள் வாழ்த்துகளும்
நல்லதும் கெட்டதும் மற்ற
நாட்டு நடப்புகளும் என்று
எல்லாவற்றுக்கும் சேர்த்து
நான்கைந்து வரிகளுக்குள்
தட்டச்சில் செய்தி பகிர்வது
பெருகுவதைக் காணவே
வேதனையாய் இருக்குது..

முகம் மறந்து போயாச்சு
அகம் மறைத்து வாழ்ந்தாச்சு
கூடி வாழ்ந்த நாட்களெல்லாம்
குறுகிப் போய் அரியதாகி
சொந்தம் தொலைத்துவிட்டு
விலாசத்தை தேடுகின்ற
வேடிக்கை மாந்தர்களும்
பெருகுவதைக் காணவே
வேதனையாய் இருக்குது..

வாட்ஸப்பு முகநூல் ட்விட்டர்
எனும் பெயரில் தினமும்
அரட்டையடிக்கும் மக்களும்
சமூக வலைதளம் என்னும்
சந்துக்குள் நுழைந்துவிட்டு
திரும்ப வரும் வழித்தெரியா
திணறுகின்ற கூட்டங்களும்
பெருகுவதைக் காணவே
வேதனையாய் இருக்குது..

அமைதியாய் வாழுங்கள்
ஆரவாரத்தை குறையுங்கள்
அகம் மகிழ்ந்து முகமலர்ந்து
ஆதரவாய் சற்று பேசுங்கள்
வார விடுமுறை போலவே
வலைதள விடுமுறையும் வைத்து
உற்றார் உறவினரோடு கொஞ்சம்
வெளியே சென்று மகிழுங்கள்
உறவாடி திளையுங்கள்..

முயற்சியில் இறங்க முயற்சிக்கிறேன்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
08.04.18

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...