Search This Blog

Sunday, February 4, 2018

பணம்

பணம்

காகிதமாய் நீ இருந்தும்
கவர்ச்சியாய் நிதம் உலவுகிறாய்
கலியுகத்தில் உயிர் வாழ உனை
காதலிக்க எமை தூண்டுகிறாய்..

அருளிலார்க்கு அவ்வுலகமில்லை
பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை
மூத்த கவிஞன் மையமாய் கூறியது
முற்றிலும் உண்மை நம்புவோமாக..

பார்க்கும் பொருளை பையினில் வைக்க
பணத்தின் தயவு மிகவும் தேவையாம்
ஏழை என்றும் பணக்காரன் என்றும் உன்
ஏற்றத்தைக் கொண்டே அறியப்படுவர்..

கையில் காசு நிறைய இருப்பின்
கடவுளும் கூட கருணையோடு
காட்சி தருவதாக புலம்புகின்ற
கூட்டமும் இங்கு பெருமளவு உண்டு..

சொத்து இருந்தால் மட்டிலும்
சொந்தம் கூட சேரும், அதுவே
சோர்ந்து நாம் இருந்தால் பெரும்
சோதனையாய் போகும்..

கல்வி அறிவு புகட்டுவது பின்னாளில்
காசு பணம் ஈட்டவே என்பது இங்கு
தலையெழுத்தை நிர்மானிக்கும்
தாரக மந்திரமாய் ஆனது..

பணத்தின் அருமை தெரியாத வரையில்
பிள்ளைப் பருவத்தை சுகமாய் கழிப்பர்
பிணமாய் பின்னர் போகும் வரைக்கும்
பகடைக் காயாகி வாழ்வை தொலைப்பர்..

சின்ன வயதில்  சில்லரை காசுகள்
சிநேகமாய் அன்று தெரிந்திருந்தாலும்
பெரிய வயது ஆன பின்னர் அவர்கள்
பணக் கட்டினை ஈட்ட பயணம் கொள்வர்..

காடு செல்லும் கடைசி வரையிலும்
காசு பணத்தின் அருமை இந்த
காசினியில் பிறந்தோர்க்கு என்றும்
கண்டிப்பாக தேவையாகும்..

வறுமையை விரட்டிட உதவிடுவாய்
வயோதிகத்தில் நீ கை கொடுப்பாய்
உலகம் இயங்கிடும் உன்னருளாலே
உண்மை இதனை மறுப்பதற்கில்லை..

(ஏ.டி.எம் வாசல் வரிசையில் நின்றபோது ஏகாந்தமாய் யோசித்த வரிகள்..)

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
07.10.17

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...