Search This Blog

Saturday, January 27, 2018

அறுபடை வீடுகள்


அறுபடை வீடுகள்

திருப்பரங்குன்றம்
திருச்செந்தூர்
திருவாவினன்குடி
சுவாமிமலை
திருத்தணி
பழமுதிர்சோலை

முதலாம் படைவீடாம் நம்
மூஷிகன் அனுஜனுக்கு
தெய்வயானையைத்
திருமணம் புரிந்து
திருக்கோயில் கொண்ட
திருப்பரங்குன்றம்
மலையடிக் கோவில் ஆகும்..

லிங்க வடிவில் இந்த
மலையமைப்பு உள்ளதால்
திரு பரம் குன்றம் ஆனது..

இரண்டாம் படைவீடாம் நம்
இமயவள் மைந்தனுக்கு
சூரபத்மனை வதம் புரிந்து
போரில் வெற்றி பெற்ற
ஜெயந்தி நாதர் என்ற
செந்தில் நாதர் ஆலயம்..

மலையை விடுத்தான் முருகன்
கடற்கரையோரம் கோயில்
கொண்டான் கந்தன்..

மூன்றாம் படைவீடாம் நம்
முக்கண்ணன் மைந்தனுக்கு
மாம்பழம் வேண்டி இந்த
வையத்தைச் சுற்றியும் அது
கிட்டாத கோபத்துடன்
கயிலைமலையைத் துறந்து
குழந்தை சாமியாய் இங்கு
கோயில் கொண்ட திருத்தலம்..

பழம் நீ என்று பெற்றவர்கள்
போற்றியதால் இம்மலை
பழனி எனும் பெயரானது..

நான்காம் படைவீடாம் நம்
நாரணன் மருகனுக்கு
பிரணவத்தை எடுத்துரைக்க
பெற்றவனை குனிய செய்து
சுவாமிநாத சுவாமியாய்
தகப்பன் சாமியாகி இங்கு
கோயில் கொண்ட திருத்தலம்..

அழகிய மலைத்தலம் ஆகையால்
திருவேரகம் எனும் சிறப்பு
பெயரும் இதற்குண்டு..

ஐந்தாம் படைவீடாம் நம்
ஐந்தெழுத்தின் மைந்தனுக்கு
சுப்ரமணிய சுவாமி இங்கு
சூரனை வதைத்து பின்னர்
சாந்தம் கொண்டதால்
திருத்தணிகைமலை என்பது
இத் திருத்தலப் பெயராகும்..

வருடத்தின் நாள் குறிக்கும்
365 படிக்கட்டுகள் அமைந்த
அழகு மலைக்கோயிலும்
அமைந்த தனிச் சிறப்பாகும்..

ஆறாம் படைவீடாம் நம்
ஆறுமுக சாமிக்கு
சுட்ட பழம் வேண்டுமா
சுடாத பழம் வேண்டுமா
அவ்வையை வினவிய
வேல்முருகன் திருத்தலம்
பழமுதிர்சோலை ஆகும்

வள்ளியம்மை கரம் பிடிக்க
ஆனைமுகன் ஆதரவு கேட்ட
அழகிய திருத்தலமும் இந்த
பழமுதிர்சோலை ஆகும்..

எட்டுக்குடி, எண்கண்
சிக்கல் வயலூர்
வடபழனி வல்லக்கோட்டை
குமரக்கோட்டம் குன்றத்தூர்
குன்றுதோராடும் குமரனுக்கு
கோவில் பலவுண்டு நாட்டினிலே..

ஓராறு படை வீட்டில்
ஈராறு கரம் கொண்டு
மூவாறு திசை காக்கும்
வேலனடி பணிந்திட
நாலாறு நேரமும் நலமே..

வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே

!!! முருகா முருகா முருகா !!!

கந்தர்ஷஷ்டி திருநாளில்
கந்தன் பதம் பணிந்து
கவிதை வரிகள் படைக்கும்
பாலசுப்ரமணியன்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
21.10.17

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...