Search This Blog

Saturday, January 27, 2018

ஆருத்ரா தரிசனம்




அற்புதமாய் அபிஷேகம்
அகங்குளிர காணலாம்
ஆயிரங்கால் மண்டபத்தில்
அம்மையோடு பார்க்கலாம்.

பால் தயிர் சந்தனம் என்று
பல திரவியங்களில் நீராட்டி
பரமனையும் ஈஸ்வரியையும்
பூசை செய்ய களிக்கலாம் .

இராஜ சபைதனிலே அழகாய்
இராஜாதி ராஜன் நடராஜன்
அலங்காரமும் ஏற்றபடி நமக்கு
திவ்ய தரிசனமும் தந்திடுவார்.

சித்சபைக்கு செல்லும் வழி
சிவகாமி அம்மையுடன்
அவனாடும் நடனடத்திற்கு
அகிலத்தில் இணை வேறில்லை.

வெட்டி வேர் வாசத்திலே
வழியெங்கும் மணமணக்க
வீறு நடை போட்டபடி அவன்
வஞ்சியுடன் சபை புகுவான்.

வேதம் ஓதும் வேதியரும்
திகட்டாமல் ஜெபித்திடுவர்
திருவாசக பதிகங்கள் சேர
சிவனடியார்கள் பாடிடுவர்.

உச்சி வேளைப் பொழுதினிலே
வேட்டுச் சத்தம் விண்ணதிர
ஆயிரங்கால் மண்டபத்தில்
அம்பலவன் ஆடிடுவான்.

அம்மையும் அப்பனும் ஒன்றாய்
முன்னும் பின்னும் அசைந்தாடி
அடியவர்கள் மனதையெல்லாம்
கொள்ளை கொண்டு போவார்கள்.

சூரிய ஒளி முகத்தில் பட்டு
பிரகாசமாய் ஒளிர்ந்திடுவான்
சுற்றியுள்ள பக்தர்களை அவன்
ஆட்கொண்டு அருளிடுவான்.

குடும்பத்து லக்ஷணமாய்
குலவிளக்காம் சிவகாமி
அப்பனுக்கு முன்னாலே
பொற்சபையுள் புகுந்திடுவாள்.

அடியவர்கள் கூட்டத்திற்கு
ஆனந்தத்தைத் தரும் ஈசன்
அம்பிகையின் பின்னாலே
சித்சபைக்குள் சென்றிடுவான்.

மார்கழி திருவாதிரையில்
கயிலாய மலையிலிருந்து
மங்கை சிவகாமியுடன்
மண்ணுலகில் ஈசன் வந்தான்.

பத்து நாள் உற்சவங்கள்
பாங்குடனே முடிவு பெரும்
தீக்ஷித பெருமகனார்களின்
சிரத்தையாலே பொலிவு பெறும்.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

" இன்று தில்லை சபாநாயகர்
ஆலயத்தில் ஆருத்ரா தரிசன
மகோத்ஸவத் திருநாளில்
ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து
சிவகாமசுந்தரி சமேத ஆனந்த
நடராஜ மூர்த்தி சித்சபா பிரவேசம் "

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
02.01.2018










No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...