Search This Blog

Tuesday, January 30, 2018

தைப்பூச தாண்டவம்

தைப்பூச தாண்டவம்

புலியும் பாம்பும்
பூசித்து நிற்க
புவியினில் வந்த
தாண்டவம் இது
பரமேஸ்வரனின்
தாண்டவம்..

படைத்தலும் காத்தலும்
அழித்தலும் மறைத்தலும்
அருளலும் ஒரு சேர்ந்த
தாண்டவம் இது
பக்தர்களை ஆட்கொள்ளும்
தாண்டவம்..

ஐந்தொழில் புரிகின்ற
அம்பலவானனின்
அடியவர் மகிழும்
தாண்டவம் இது
ஆதிசிவனின் ஆனந்த
தாண்டவம்..

ஆலகால விடமுண்ட
அம்மையப்பனின்
அம்பலத்தே ஆடும்
தாண்டவம் இது
அம்பிகாபதியின்
தாண்டவம்..

திருமூலநாதரின்
திருமேனி விடுத்து
தில்லையில் ஆடிய
தாண்டவம் இது
தேவர்கள் தொழுதிட்ட
தாண்டவம்..

சனகாதி முனிவர்கள்
சபாபதியைத் துதிக்க
சிதம்பரத்தில் ஆடிய
தாண்டவம் இது
சித்சபேசனின் ஊர்த்துவ
தாண்டவம்..

நாகாபரணங்கள்
கழுத்தினில் ஆட
நடராஜ மூர்த்தியின்
தாண்டவம் இது
நமச்சிவாயத்தின்
தாண்டவம்..

தும்புரு இசைத்திட
டமருகம் ஒலித்திட
திருச்சிற்றம்பலத்தில்
தாண்டவம் இது
தேவாதி தேவனின்
தாண்டவம்..

அகிலத்தை காத்திட
அக்கினி கழலேந்தி
அரனார் ஆடுகின்ற
தாண்டவம் இது
ஆதிசேஷனுக்கருளிய
தாண்டவம்..

மால் அயனுக்கும்
காணக் கிடைக்காத
கயிலை நாதனின்
தாண்டவம் இது
மகேஸ்வர மூர்த்தியின்
தாண்டவம்..

உருவம் அருவம்
அருவுருவம் என
உலகை ரக்ஷிக்கும்
தாண்டவம் இது
உச்சிவேளை வந்த
தாண்டவம்..

தைப்பூச தினத்தன்று
தில்லையம்பதியிலே
தூக்கிய திருவடியின்
தாண்டவம் இது
தேவார நாயகனின்
தாண்டவம்..

மானாட மழுவாட
மதியாட புனலாட
மங்கை சிவகாமியாட
மாலாட நூலாட
மறையாட திறையாட
மறைதந்த பிரம்மனாட
கோனாட வானுலகு
கூட்டமெல்லாமாட
குஞ்சர முகத்தனாட
குண்டலமிரண்டாட
தண்டைபுலியுடையாட
குழந்தை முருகேசனாட
ஞானசம்பந்தரொடு
இந்திராதி பதினெட்டு
முனியட்ட பாலகருமாட
நரை தும்பை யறுகாட
நந்தி வாகனமாட
நாட்டியப் பெண்களாட
நடராஜ ராஜரின்
நர்த்தனமும் அரங்கேறிய
நந்நாளாம் தைப்பூசமாம்..

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
30.01.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...