Search This Blog

Saturday, January 27, 2018

அப்பா


அப்பா

ஹோம் ஒர்க் செய்யாத
குழந்தையை அடிக்கும்
அம்மாவிற்கு விழும் அடி
அப்பாவிடமிருந்து..

அம்மாவின் தியாகம்
அடுப்படியில் என்றால்
அப்பாவின் தியாகமோ
அலுவலகத்தில்..

அம்மையப்பனாய் மாறி
அறியாத குழந்தைக்கு
ஆய் அலம்பி விடும்
ஆயாவும் இவனே..

உங்களுக்கு ஒன்னும் தெரியாதுப்பா
என்று தன்னை முட்டாளாக எண்ணும் பிள்ளையிடமே கேட்டு அறிந்து கொள்ளும் இளிச்சவாயனும் இவனே..

சகட்டு மேனிக்கு நித்தம்
சவால்களை சமாளித்து
மேலாளருக்கு முதுகு வளைத்து
தேய்ந்தே போனது இவனெலும்பு..

அம்மாவிடம் கேட்க பயந்து
அப்பாவின் தோளை அணைத்து
ஆசை முத்தமிட்டு சாதித்துக் கொள்ளும்
மகள்கள் ஒவ்வொரு வீட்டிலும் உண்டு..

கேட்டதையெல்லாம் வாங்கித் தந்து
குட்டிச் சுவர் ஆக்காதீங்கன்னு
அம்மாக்களிடம் வசவு வாங்காத அப்பாக்களே இல்லை..

குழந்தையை மகிழ்விக்க யானை
சவாரி ஏற்ற குனிந்த அவன் முதுகு
குடும்ப பாரம் ஏறி காலத்திற்கும்
நிமிர்வதே இல்லை..

பிள்ளைகள் வளர்ந்த பிறகும்
தந்தையை தன் ஹீரோவாக
நினைக்கப் பெரும் தகப்பன்
நிஜத்திலும் ஒரு நாயகனாவான்..

தனக்கென வீடு வாங்குபவனை விட
தன் வருமானத்தில் மாதம் பாதி கட்டி
தன் வாரிசுக்காக வீட்டை வாங்குபவேனே
தகப்பன் ஆவான்..

முதுமையில் தன்னை வைத்து காப்பான்
என்று எந்த தகப்பனும் தன் பிள்ளையை
வளர்ப்பதில்லை, இத் தகவல் ஏனோ
பிள்ளைக்கும் தெரிவதில்லை..

மகனாக தன் தாயிடமும்,
சகோதரனாக உடன் பிறந்தவரிடமும்
தந்தையாக தன் மக்களிடமும் நடந்து
குடும்ப கப்பலை ஓட்டும் மாலுமி இவனே..

தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைக்கு
தோழனாய் இருந்து துவளும் தன்
சேய்க்கு தக்க அறிவுரையும் தந்திடும்
தகப்பன் சாமியும் இவனே..

அம்மா சொல்லியே அப்பன் இவனென்று
அறியும் குழந்தைக்கு அனைத்துமாய் ஆகி
ஆதாரமாய் இருந்து ஆசானுமாய் மாறி
அகிலத்தை காட்டிடும் அற்புதன் அவனே..

குழந்தை கேட்டதை வாங்க இயலாமல்
உடன்பட்டு ரணப்பட்டு முடிவில்
கடன்பட்டு வாங்கித் தந்திடும்
அப்பாவி அப்பனும் இவனே..

பிள்ளையைத் தன் தோளின் மீதேற்றி கடவுளைக் காண்பிக்கும் ஒவ்வொரு தகப்பனும் சாமியே, இதை நாம் உணரும்
வயதில் சாமியிடம் சென்று விடுகிறான்..

கோவிலுக்குச் சென்று கோபுர
தரிசனமும், தீர்த்த ஸ்தலம் சென்று
புண்ணிய நீராடுதலும் தமது
தாய் தந்தையர் பாதம் கழுவிட கிட்டும்..

சிந்தை தெளிந்து தன் தந்தையை
உணர்ந்த பின் விந்தையான உறவு இவனென்று தோன்றிடும் வாடிக்கை
இங்கு வெகுவாக உண்டு..

தந்தையைப் போற்றுவோம்
தரணியில் தலை நிமிர்வோம்..

தந்தையர் தினத்திற்கு வடித்த கவிதை..

அன்பன், சிதம்பரம் ஆர். வீ. பாலா
18.06.17









No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...