Search This Blog

Sunday, March 25, 2018

ஸ்ரீ ராம நவமி

ஸ்ரீ ராம நவமி

நால்வரில் மூத்தவனாம்
நாராயணன் ஸ்வரூபம்
தந்தை சொல்படி கேட்ட
திரேதாயுக அவதாரம்..

குறையாத செல்வத்தை
நிறைவான மனதோடு
முறையாக தவிர்த்திட்டு
கானகமும் சென்றாய்..

அப்பனின் சொல் கேட்டு
அரசவையின் சுகம் விட்டு
அயோத்தி மாநகர் நீங்கி
ஆரண்யம் சென்றாய்..

ஆற்றைக் கடக்கச் செய்த
அடியவனை அரவணைத்து
ஐவராய் ஆக்கிக் கொண்ட
அண்ணலும் நீயே..

மூவுலகை காத்து நிற்கும்
மகாவிஷ்ணு அவதாரம்
மூதாட்டி சபரி கொடுத்த
எச்சில் பழம் தின்றாய்..

மாற்றான் மனை நாடிய
மந்தியை மறைந்தபடி
பாணத்தை ஏவி விட்டு
பரலோகம் தந்தாய்..

பாதச் சுவடுகள் வைத்து
பதிவிரதை மோக்ஷம் தந்து
பாப விமோசனம் செய்த
காருண்ய மூர்த்தி நீயே..

மாயமான விரித்த வலையில்
மங்கையும் சிந்தை மயங்கி
மாரிசனை பிடிக்க சென்று
மனைவியை பறிகொடுத்தாய்..

புஷ்பக விமானம் விரட்டிய
பக்ஷி ராஜா ஜடாயுவுக்கு
திதியளித்து மோக்ஷம் தந்த
தயாபர மூர்த்தி நீயே..

வாயுமைந்தன் வானரத்தை
வான்வழியே தூது விட்டு
இராவணனை சம்மதிக்க
இலங்கைக்கு அனுப்பினாயே..

சாதுவாய் சரணாகதி அடைந்த
விபீஷணனை வாரியணைத்து
அறுவரென சகோதரனாக்கிய
அய்யனே நீ வாழியவே..

போர் மூண்ட பொழுதெல்லாம்
பராக்கிரமத்தைக் வெளிக்காட்டி
இன்று போய் நாளை வாவென
இலங்கேசனுக்கு உரைத்தனையே..

போரிலே வென்ற பின்னர்
பதிவிரதை சீதா தேவியை
லக்குவனை லஜ்ஜித்தமையால்
அக்கினி பரிட்சையிலிட்டாய்..

தசமுகன் மாண்ட பின்னர்
தயரதன் மைந்தன் நீயும்
விபீஷணனை வாரிசாக்கி
அயோத்தி மாநகரும் வந்தாய்..

பட்டாபிஷேகம் ஏற்ற
பட்டாபி ராமன் நீயே
ராம ராஜ்ஜியம் புரிந்த
ரகு குல திலகன் நீயே..

கோனாட்சி புரியுங்கால்
குடிமகனின் சொல் கேட்டு
குலமகளை நிறை நேரம்
கானகமும் அனுப்பினாயே..

வாலமீகி ஆசிரமத்தில்
வஞ்சியவள் பெற்றெடுத்த
லவ குசரும் கல்வியினில்
தேர்ச்சி மிகப் பெற்றனரே..

ஜனகராஜ புத்திரி ஜானகி
மிதிலாபுரி குமாரி மைதிலி
அயோத்தி திரும்ப மீண்டும்
அக்கினி பரீட்சை கேட்டாய்..

ஐயகோ,

நெருப்பே சுடாத நிலமகள்
அமைதி ததும்பிய அலைமகள்
பரீக்ஷையும் தந்த பக்குவத்தால்
பூமித்தாய் மடியுள் சென்றனல்..

சீதா லக்ஷ்மன பரத சத்ருக்ன
அனுமன் சமேத ஸ்ரீ ராமச்சந்திர
மூர்த்திகி ஜெய் ஜெய் ஜெய்..

ஜெய ஜெய ராம் ராஜா ராம்
ஜெய ஜெய ராம் சீதா ராம்

💐💐💐💐🙏🙏🙏🙏👏👏👏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
24.03.18

(ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு
கவி நடையில் ராமாயணம் வடித்தேன்)

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...