Search This Blog

Friday, March 30, 2018

திண்ணை

திண்ணை

உழைத்து ஓய்ந்ததும்
ஓர் திண்ணை, சற்றே
சிரம பரிகாரத்திற்கும்
ஓர் திண்ணை.

பொக்கை பெரிசுகள்
இரவில் படுத்திட
தேர்வு செய்வதும்
நமது திண்ணை.

நண்பர் கூட்டத்துடன்
நா வலிக்க பேசிட
நன்றாக இருக்கும்
நமது திண்ணை.

திண்டு போல அழகாய்
மேடும் வைத்து அதில்
தலை வைத்து படுக்க
நமது திண்ணை.

கிராமத்து குடிலில்
கண்டிப்பாய் உண்டு
கம்பீரமாய் இருக்கும்
நமது திண்ணை.

தென்னையில்லாத வீடும்
திண்னையில்லாத வீடும்
அந்த காலத்தில் எங்கும்
இருந்ததே இல்லையாம்.

கற் திண்ணையில்
கைமுட்டு கொடுத்து
கால் நீட்டி படுப்பது
குஷியாய் இருக்கும்.

இருபக்க திண்ணையுடன்
இருக்கின்ற வீட்டைக் காண
இதயமடையும் மகிழ்ச்சிக்கு
ஈடு இணை இல்லையே.

வழிப்போக்கர்கள் தங்கவே
வாகாய் அமைந்த திண்ணை
நீரும் மோரும் உபசரிப்பாய் தந்து
நெகிழ வைத்த திண்ணை.

சிறிசுகள் உள்ளே துயில
பெரிசுகள் வெளியே படுக்க
சச்சரவேதுமின்றி அன்று
சந்தோசம் தந்ததும் திண்ணை.

தெருமுனை கோவிலில்
தொன்னை பிரசாதமும்
தெனாவட்டாய் அரட்டைக்கு
திண்ணை சகவாசமும்.

ஆயிரம் கதைகள் பேசும்
அழகிய திண்ணை பலவும்
அழியாமல் கிராமங்களிலே
இன்னும் இருக்க காண்பீர்.

கார் பார்க்கிங் என்கின்ற
கலாச்சாரம் நுழைந்த பின்
காணாமல் போனது நம்
கல் மெத்தை திண்ணைகள்.

வீட்டின் வெளி திண்ணையும்
வீட்டின் நடுவினில் முற்றமும்
சாய்ந்தாட சற்றே ஊஞ்சலும்
சேர்ந்து இருப்பின் ஸ்வர்க்கமே.

திண்ணையில் அன்று
உருண்டு புரண்ட எனது
சிறுவயது நினைவுகளுடன்
வார்த்த வரிகள் இவை.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
31.03.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...