Search This Blog

Monday, July 9, 2018

கைப்பேசி (செல்போன்)

கைப்பேசி (செல்போன்)

கண்ணே உன்னை
காதலிக்கிறேன்
கை வலிக்க நிதம்
செய்தியிடுகிறேன்

வராத செய்திக்கு
வருத்தமடைந்து
வேதனையில் நானும்
வாடிக் கிடக்கிறேன்

தொடு திரையைத்
தொட்டு தடவி தடவி
தினமும் நானும்
திருப்தியடைகிறேன்

காது வலிக்க உன்னை
கன்னத்தோடு இடுக்கி
வீட்டிற்கு வெளியே வந்து
வீதியில் நின்று பேசுகிறேன்

படுக்கும் போதும் என்
பக்கத்தில் இருப்பாய்
விழிக்கும் போதும் என்
கையினுள் சிரிப்பாய்

உன்னைப் பிரிந்திருக்கும்
ஒவ்வொரு வினாடியும்
ஒரு யுகமாய் எனக்குள்
நினைத்துப் பார்க்கிறேன்

அருகினில் நீ இருக்க
ஆனந்தமாய் நானிருக்க
அனைத்தையும் மறந்தேன்
அனுபவித்து மகிழ்ந்தேன்

உயிரில்லா உன்னாலே
உயிரோட்டம் பெறுமென்றால்
உன்னத உன் படைப்பை நான்
எங்ஙனம் எடுத்துரைப்பேன்

பசித்த வயிற்றில் உணவுண்டு
மகிழ்வதைக் காட்டிலும் உனது
பேட்டரி ரீசார்ஜ் செய்த பின்னே
காணும் மகிழ்ச்சி அதிகமாகிறது

சகட்டுமேனிக்கு நானும்
சமூகவலைதளத்தில்
சஞ்சரிக்க எனக்கு நீயும்
உதவி செய்கின்றாய்

ஆண்டராய்டு பேசியால்
அகிலமும் சிறுசாகும்
அளவுக்கு மீறினால்
அமுதமும் நஞ்சாகும்

அழுத குழந்தைக்கு அன்று
அம்புலி காட்டி உணவிட்டோம்
ஆண்டராய்டு காட்டி இன்று
அன்னத்தை ஊட்டுகின்றோம்

சீரியல் பார்த்து அன்று
சொந்தங்களை இழந்தோம்
செல்போன் உபயோகித்து
சுத்தமாய் தொலைத்தோம்

காலை எழுந்தவுடன் அன்று
செய்தித்தாளை படித்தேன்
காபி குடித்தபடி இன்று நான்
கைப்பேசியுடன் கிடக்கின்றேன்

நேரில் பார்த்து பேசாதவர் கூட
நெட்டில் கூடி அரட்டையடிப்பது
விஞ்ஞானத்தின் வளர்ச்சியா
அஞ்ஞானத்தின் எழுச்சியா

என் செல்ல செல்போனே
சத்தியமாய் உனை ஒதுக்க
சபதங்கள் போட்டதெல்லாம்
சுக்குநூறாய் போகின்றதே

அளவோடு உபயோகிக்க
ஆனந்தமாய் இருக்கலாம்
அளவுக்கு மீறி களித்திட
அடியோடு ஒழியலாம்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
10.07.2018

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...