Search This Blog

Thursday, November 8, 2018

அவளும் நானும்

அவளும் நானும்

சனி ஞாயிறு தான்
நமக்கு இனிதாகிடும்
கண்ணே வேறெப்படி
உன்னிடம்  சொல்லுவது

சனியனே என்று நிதம்
சலித்தபடி பயணிப்பேன்
சடுதியில் கிளம்பும் உனை
என்னவென்று சொல்லுவது.

பம்பரமாய் சுழலும் உன்னை
பாக்கியமாய் நான் பெற்றேனடி
சம்சாரத்தை நோகடிப்போரை
என்னவென்று சொல்லுவது.

அலுவலகத்து அசதியென்பது
அனைவர்க்கும் உண்டாகினும்
அடுப்பங்கரையிலும் பணி செய்து
உன் அலுப்பை தூர வீசுகின்றாய்.

நாலு மணிக்கு எழுகின்றாய் நிதம்
நாலு மணி நேரமே துயில்கின்றாய்
நம் நாலு பேருக்கும் உழைத்துவிட்டு
நாராய் கிழிபட்டு கிடக்கின்றாய்.

வார இறுதி விடுமுறை என்பது
வஞ்சியே உனக்கு இருப்பதில்லை
வாரத்தின் ஒரு நாளில் கூட
ஓய்வாய் நீ உட்கார்ந்து கண்டதில்லை.

உப்பு அதிகம் என்று அவளிடம்
உரக்க கூச்சல் போடாதீர் சற்று
கண்ணீர்த் துளி விழுந்திருக்கும்
கன்னத்தை உற்று திருப்பி பாரீர்.

கறி காய் நறுக்கித் தந்து தினம்
குழம்பு வைத்திட உதவிடலாம்
கால் கை அமுக்கி விட்டு அவள்
களைப்பை கொஞ்சம் நீவிடலாம்.

குழந்தைகளுக்கு பயில்விப்பதில்
சின்னதாய் உதவியும் புரிந்திடலாம்
இரவில் இம்சை புரியாது கொஞ்சம்
இங்கிதத்தோடு இருந்திடலாம்.

இரு கை தட்டவே ஓசை எழும்
இசைந்து தட்டினால் இசை எழும்பும்
இசையோ ஓசையோ எதுவாகிலும்
இல்லத்தினுள்ளே இருத்தல் நலம்.

சனி ஞாயிறு தான்
நமக்கு இனிதாகிடும்
கண்ணே வேறெப்படி
உன்னிடம்  சொல்லுவது....

பி.கு: கணவன், மனைவி இருவரும் பணிக்குச் செல்லும் சூழலுக்கேற்ப  எழுதியுள்ளேன்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
09.11.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...